Published : 05 May 2019 08:45 PM
Last Updated : 05 May 2019 08:45 PM
கே.எல்.ராகுலின் மின்னல் வேக அரைசதம், பூரனின் அதிரடி சாத்து ஆகியவற்றால் சண்டிகரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி.
ஆட்டத்தின் பலிகடா ஹர்பஜன் தான். அய்யோ பாவம்... பாஜியின் இரு ஓவர்களை ராகுல் நொறுக்கி அள்ளிவிட்டார். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் இரு சிக்ஸர்கள், அடுத்த ஓவரில் 24 ரன்கள் என பேரதிர்ச்சி அளித்துவிட்டார். 19 ரன்களில் அரைசதம் அடித்த ராகுல் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
சிஎஸ்கே அணி 14 ஆட்டங்களில் 5 தோல்விகள், 9 வெற்றி என மொத்தம் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நிகர ரன்ரேட் அடிப்படையில் 0.131 என்ற ரீதியில் இருப்பதால், குவாலிஃபயர் 1 பிரிவில் சிஎஸ்கே விளையாடுவது உறுதியாகியுள்ளது.
கேகேஆர் அல்லது சன்ரைசர்ஸ்?
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 14 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 8 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் 12 புள்ளிகளில் இருந்தாலும், நிகர ரன்ரேட்டில் பஞ்சாப் அணி மைனஸில் இருப்பதால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல இயலாது.
அதேசமயம், தற்போது நடந்து வரும் கேகேஆர், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி வென்றால், சன்ரைசர்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லும், மும்பை அணி தோற்றால் கேகேஆர் அணி ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லும்
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்துத. 171 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 ஓவர்கள் மீதம் இருக்கையில், 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அஸ்வின் தலைமைக்கு 2-வது ஆண்டாக வெற்றி
ஒவ்வொரு சீசனிலும் கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வியுறுவது சிஎஸ்கே அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 11 சீசனில் 9 சீசன்களில் 5 சீசன்களில் பஞ்சாப் அணியிடமே சிஎஸ்கே தோற்றுள்ளது.
அதாவது, 2008-ம் ஆண்டில் கடைசி லீக்கில் டெல்லி அணி வென்றது. 2009, 2010-ம் ஆண்டுகளில் சிஎஸ்கே வீழ்த்தி பஞ்சாப் அணி வென்றது. 2011-ம் ஆண்டில் ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே வென்றது. 2012-ல் மீண்டும் பஞ்சாப் வென்றது. 2013-ம் ஆண்டில் மீண்டும் ஆர்சிபி வீழ்த்தி சிஎஸ்கே வென்றது. 2014-ம் ஆண்டில் ஆர்சிபி வென்றது. 2015, 2018-ம் ஆண்டில் பஞ்சாப் அணி வென்றது. இந்த முறையும் பஞ்சாப் அணி வென்றுள்ளது. கடந்த முறையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே கடைசி லீக்கில் பஞ்சாப்பிடம் தோற்றது, இந்த முறையும் தோற்றுள்ளது.
ராகுல் பேரடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ராகுலின் அதிரடியான ஆட்டமே காரணம். குறிப்பாக ஹர்பஜன் மீது என்ன கோபமோ தெரியவில்லை, வெளுத்து கட்டிவிட்டார் ராகுல். சீசனின் கடைசி ஆட்டத்தில் சிறந்த இன்னிங்ஸை ராகுல் வழங்கியுள்ளார்.
ராகுல் 71 ரன்னிலும் கெயில் 28 ரன்னிலும் ஹர்பஜனின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தபின் சிஎஸ்கே பக்கம் ஆட்டம் செல்வதுபோல் தோற்றமளித்தது. ஆனால், நடுவரிசையில் களமிறங்கிய பூரன் அதிரடியாக பேட் செய்து, 36 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிமையாக்கினார்.
ஹர்பஜன் பாவம்
171 ரன்கள் சேர்த்தால், வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ராகுல், கெயில் நல்ல தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 108 ரன்கள் குவித்தனர்.
கெயில் அமைதியாக பேட் செய்ய, ராகுல் காட்டடியில் இறங்கினார், ஹர்பஜன், சாஹர், பந்துவீச்சை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்ட ராகுல் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் சேர்த்தது.
இம்ரான் தாஹிர் வீசிய 7-வது ஓவரில் கெயில் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடித்தார். 10 ஓவர்களில் முடிவில் விக்கெட் இழப்பின்றி 106 ரன்கள் சேர்த்திருந்தது.
ஹர்பஜன் வீசிய 11-வது ஓவரில் ராகுல் 71 ரன்னிலும், அடுத்த பந்தில் கெயில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த மயங்க் அகர்வாலும் நிலைக்காமல் 7 ரன்னில் ஹர்பஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
விளாசல்
4-வது விக்கெட்டுக்கு பூரன், மன்தீப் ஜோடி அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர். பூரன் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்தநிலையில், 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 46 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த சாம் கரன், மன்தீப் சிங்குடன் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தனர். மன்தீப் சிங் 11 ரன்னிலும், சாம் கரன் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி.
டூப்பிளசிஸ், ரெய்னா
டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். டூப்பிளசிஸ், வாட்ஸன் ஆட்டத்தைத் தொடங்கினார். 7 ரன்கள் சேர்த்த நிலையில், சாம் கரன் பந்துவீச்சில் வாட்ஸ் போல்டாகி வெளியேறினார்.
2-வது விக்கெட்டுக்கு வந்த ரெய்னா, டூப்பிளசிஸும் அணியை வழி நடத்தினர். டூப்பிளசிஸ் 37 பந்துகளிலும், ரெய்னா 34 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர்.
சாம் கரன் வீசிய 17-வது ஓவரில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து ரெய்னா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 150 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே அணி.
அடுத்து தோனி களமிறங்கினார். சாம்கரன் வீசிய 19-வது ஓவரில் காலைநோக்கி வந்த யார்கர் பந்தை சமாளிக்க முடியாமல் டூப்பிளசிஸ் போல்டாகி 96 ரன்களில் வெளியேறினார். இதில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.
அதன்பின் முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ராயுடு ஒரு ரன்னிலும், ஜாதவ் டக் அவுட்டிலும் வெளியறினர். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. தோனி 10 ரன்களுடன், பிராவோ ஒரு ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT