Published : 13 May 2019 07:08 PM
Last Updated : 13 May 2019 07:08 PM
ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட்டை ரசிகர்கள் விமர்சித்த நிலையில், சிறுவர்கள் அம்பயரைக் கண்டித்து சாபமிடும் காணொலி வைரலாகி வருகிறது.
12-வது ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கேவும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
சிஎஸ்கே சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், ஆட்டத்தில் அதிரடி காட்டும் தோனி எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ரன் அவுட் ஆனார்.
இந்த ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக்குள் தோனி வந்துவிட்டாலும் எல்லைக்கோட்டில் பேட் தொட்டாலும் அவுட் கொடுக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்கவில்லை. இதனால் ஆட்டத்தின் போக்கே மாறியது. ஒருவேளை சிஎஸ்கே வெல்ல இருந்த வாய்ப்பு, இந்த ரன் அவுட்டால் பறிபோனதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
தோனியின் அந்த ரன் அவுட்டிற்கு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால், அது ரன் அவுட் இல்லை என்று தோனியின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் இரண்டு சிறுவர்கள் அழுதபடி பேசி சாபமிடும் காணொலி வைரலாகி வருகிறது.
முதல் காணொலியில் தோனியின் அவுட்டை ஏற்காத சிறுவன் தனது தாயிடம் அழுதபடி பேசினார். தாய் அந்தச் சிறுவனைச் சமாதானப்படுத்துகிறார். ஆனால் சமாதானத்தை ஏற்காத சிறுவன், ''தோனி அவுட்டே இல்லை, மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்துட்டார், மூன்றாவது அம்பயர் தூக்குப்போட்டுட்டு செத்துருவார்” என அழுகிறார். அவரது தாயார் அவனைத் தேற்றுகிறார்.
மற்றொரு காணொலியில் சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சிறுவன் ஒருவர், தோனியின் அவுட்டை ஏற்றுக்கொள்ளாமல் ‘அய்யோ மம்மி அய்யோ மம்மி என்று கூச்சலிட்டு குதித்து குதித்து அழுவது வைரலாகி வருகிறது. ஐபிஎல் மோகம் பெரியவர்களை மட்டுமல்ல சின்னஞ்சிறுவர்களையும் பாதித்துள்ளது இந்த காணொலியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
தற்போது இரண்டு காணொலிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT