Last Updated : 01 May, 2019 10:21 AM

 

Published : 01 May 2019 10:21 AM
Last Updated : 01 May 2019 10:21 AM

வெளியேறியது ஆர்சிபி: கோபால் ஹாட்ரிக்: மழை விளையாடியது: ராஜஸ்தான் நிலைமை என்னாகும்?

12-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் இருந்து முதல் அணியாக விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறியது.

பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 49-வது லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளி வழங்கப்பட்டது.

பெங்களூருவில் நேற்றைய லீக் ஆட்டம் மழையின் காரணமாக 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது. 63 ரன்கள் எனும் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

அந்தரத்தில் ராஜஸ்தான்

இதன் மூலம் 13 போட்டிகளில் 8 தோல்வி, 4 வெற்றிகள் என 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் ஆர்சிபி இருக்கிறது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே இருக்கும் அதில் வென்றாலும் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்லமுடியாததால், கோலி தலைமையிலான ஆர்சிபி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறுகிறது.

அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் 5 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 11 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. அடுத்துள்ள ஒரு போட்டியில் வென்றாலும் கூட 13 புள்ளிகள் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு கிடைக்கும். ஆனால், ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்ல 14 புள்ளிகள் தேவை. ஆதலால், ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. அதேசமயம், ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்வதற்கு கேகேஆர், சன்ரைசர்ஸ், மும்பை இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பதால், ராஜஸ்தான் அணி அடுத்த ஒரு போட்டியில் வென்றாலும் வாய்ப்பு பெரும்பாலும் அருகிவிட்டது எனக் கூறலாம்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ஐபிஎல் போட்டியைக் காண ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் பெற்று வந்துள்ளார்கள். இதுபோன்று மழையால் ஆட்டம் பாதிக்கும் போது 5 ஓவர்களை நடத்துவது, 2 ஓவர்களை நடத்துவது என்பதெல்லாம் ரசிகர்களை அப்பட்டமாக ஏமாற்றுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

 இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளி வழங்கியதைப் போல் ரசிகர்களுக்கு பணத்தை ஐபிஎல் நிர்வாகம் திருப்பி அளிப்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இரு அணிகளும் முழுமையாக விளையாடுவதைக் காண்பதற்காகவே ரசிகர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுள்ளார்கள்.

இதுபோன்ற இயற்கையால் தடை ஏற்படும் நேரத்தில் போட்டியை மீண்டும் நடத்த மாற்று நாள் அறிவிக்க வேண்டும், அல்லது ரசிகர்களிடம் பணத்தை திரும்பஅளிக் ஐபிஎல் நிர்வாகம் முயற்சிக்க வேண்டும், இதுபோன்று 2 ஓவர்கள், 5 ஓவர்கள் போட்டி நடத்துவது ஐபிஎல் தரத்தை குறைத்துவிடும்.

விராட் கேப்டன்ஷிப்?

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள், பீல்டர்கள், பந்துவீச்சாளர்களை ஒவ்வொரு சீசனிலும் பெற்றிருந்தும் கடந்த 3 முறையும ப்ளே-ஆஃப் சுற்றோடு வெளியேறிவது விராட் கோலியின் தலைமைக்கு மிகப்பெரிய அவமானமாகும்.

கேப்டன்ஷிப் என்பது அணி வீரர்களை வழிநடத்துவதும், சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு முடிவுகளை எடுப்பதும், பந்துவீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் பயன்படுத்துவதிலும்தான் இருக்கிறது. ஆனால், விராட் கோலியிடம் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்கிறதே தவிர அணியை வழிநடத்திச் செல்லும் திறமை இல்லை.

இந்திய அணிக்கு விராட் கோலி வெற்றிகரமாக தலைமை ஏற்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பதிலாக அனைத்து வீரர்களுக்கும் சொந்த அணி என்ற தார்மீக உரிமை இருக்கிறது அதனால்,  அந்த பொறுப்பை உணர்ந்து ஆடுகிறார்கள்.  மேலும், தோனி எனும் மிகப்பெரிய ஆளுமையின் பக்கபலம், ரோஹித் சர்மா எனும் தளபதி ஆகியோரின் ஆலோசனை ஆகிய இருஅம்சங்களும் இருப்பதால், கோலி வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திறமையான கேப்டனாக கோலி இருந்திருந்தால், இதுவரை ஆர்சிபி அணிக்கு ஒருமுறையாவது கோப்பையை வென்று கொடுத்திருக்கலாம். சர்வதேச, உள்ளூர் வீரர்கள் கலப்பில் ஏராளமான வீரர்கள் ஆர்சிபி அணிக்கு் இருந்தபோது, அதே ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பது நியாயம்தான்.

ஏமாற்றம்

இந்த ஆட்டத்திலும் முதலில் களமிறங்கிய கோலி, டீவில்லியர்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். வருண் ஆரோன் வீசிய முதல் ஓவரில் கோலி இரு சிக்ஸர்களையும், டிவில்லியர்ஸ் இரு பவுண்டிரிகளையும் அடித்து முதல் ஓவரில் 23 ரன்கள் சேர்த்தனர்.

2-வது ஓவரை ஸ்ரேயாஸ் கோபால் வீசினார். இந்த சீசன் முழுவதும் கோபால் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்ததால், அவர் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் இரு பந்துகளில் சிக்ஸர் ,பவுண்டரியை கோலி விளாசினார். 4-வது பந்தில் லிவிங்ஸ்டனிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் கோலி வெளியேறினார்.

ஹாட்ரிக் விக்கெட்

அடுத்த பந்தை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ் 10 ரன்களில் பராக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் கடைசிப்பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழக்க கோபால் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்திய 19-வது வீரர் எனும் பெருமையை கோபால் பெற்றார். 2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி.

பராக் வீசிய 3-வது ஓவரில் குர்கீரத் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பர்தீவ் படேல், 8ரன்கள் சேர்த்த நிலையில், உனத்கட் வீசிய 4-வது ஓவரில் வெளியேறினார். கடைசி ஓவரை தாமஸ் வீசினார். 3-வது பந்தில் கிளாசன் 6 ரன்னிலும், நெகி 4 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி அணி.ஸ்ரேயாஸ் கோபால் ஒருவிக்கெட் வீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், தாமஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சாம்ஸன் அதிரடி

63 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. சாம்ஸன், லிவிங்ஸ்டன் ஆட்டத்தைத் தொடங்கினர். உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் சாம்ஸன் சிக்ஸர், பவுண்டரி அடித்தார். சைனி வீசிய 2-வது ஓவரில் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸரும்,பவுண்டரியும் விளாசி 12 ரன்கள் சேர்த்தனர்.

கேஜ்ரோலியா வீசிய 3-வது ஓவரில் சாம்ஸன் இரு சிக்ஸர்களையும், பவுண்டரியையும் விளாசி பிரமாதப்படுத்தி 18 ரன்கள் சேர்த்தார். ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களுக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது.

4-வது ஓவரை சாஹல் வீசினார். 28 ரன்கள் சேர்த்திருந்த சாம்ஸன் 2-வதுபந்தில் நெகியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மழை குறுக்கிடவே ஆட்டம் தடைபட்டு அத்துடன் முடிக்கப்பட்டது.

இன்னும் 8 பந்துகள் மீதம் இருந்த நிலையில், ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன ஆனால், மழையால் ராஜஸ்தான் அணியின் வெற்றி பறிபோனது. ஒரு புள்ளி கிடைத்தும் அதனால் அந்த அணிக்கு எந்தவிதமான பயனும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x