Published : 11 May 2019 07:16 AM
Last Updated : 11 May 2019 07:16 AM
விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற ஐபிஎல் நாக் அவுட் பிளே ஆஃப் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை முதலில் பேட் செய்ய அழைத்த சிஎஸ்கே, 147 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு இலக்கை விரட்டி 19 ஓவர்களில் 151/4 என்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 8வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
மே 12ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இளமையா, அனுபவமா என்ற வாக்குவாதத்திற்கெல்லாம் நேற்று சிஎஸ்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி தென் ஆப்பிரிக்கா ‘சோக்கர்ஸ்’ ஆனதோ ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் மீண்டும் ஒரு முறை முக்கியக் கட்டத்தில் நெறிபட்டு மடிந்து சோக்கர்ஸ் ஆகிவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஆடிய மிகச்சிறந்த போட்டி இந்த ஆட்டம் என்றால் அது மிகையாகாது. முந்தைய போட்டிகளில் குழிப்பிட்ச் அவர்களுக்குக் கைகொடுத்தது. இந்த முறை குழிபிட்ச் என்று சொல்ல முடியாது ஆனால் பிட்சில் பந்துகள் திரும்பின. இது சென்னைக்கு சாதகமாகப் போனது, டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கில் ஒரு முனைப்பே இல்லை என்றுதான் கூற வேண்டும். தோனி கேப்டன்சியை முறியடிக்க வேண்டுமெனில் யாராவது ஒரு பேட்ஸ்மெனை நேர்ந்து விட்டு ‘எனக்க்குத் தொழில் அடிப்பதுவேயன்றி வேறொன்றறியேம் பராபரமே’ என்பது போல் ஒருவரை இறக்கி விட்டு ஸ்பின்னர்களைக் காலி செய்ய வேண்டும். ஆனால் தோனி தன் அனுவத்தைக் காட்டி ரிஷப் பந்த்தை கட்டிப் போட்டார். ரிஷப் பந்த்தை தன்னைப்போலவே பொறுமை காக்க வைத்தார், ஆனால் கடைசியில் தோனி வெளுத்துக் கட்டுவாரே அது போன்று ரிஷப் பந்துக்கு கைகூடவில்லை
ஆனால் தோனி இந்த வடிவத்தில் அதிலும் குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டின் தாத்பர்யத்தை நன்கு உணர்ந்தவராக இருக்கிறார், இந்த ஐபிஎல் தொடரில் முதல் 10 ஓவர்களில் எடுக்கும் ரன்களே வெற்றி தோல்விகளை தீர்மானித்துள்ளன என்பதை கருத்தில் கொண்டு விக்கெட்டுகளுக்காக எப்பவுமே குறிவைத்து காயை நகர்த்தினார் தோனி. டிவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் பிரமாதமாக வீசி 12 ஓவர்களில் 78 ரன்களைக் கொடுத்து 5 விகெட்டுகளைக் கைப்பற்றி டெல்லியை மூழ்கடித்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பலவீனம் மிடில் ஓவர்களை ஆடுவது என்று குறிப்பிட்டிருந்தோம் அது நேற்றும் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸின் பலவீனம் பவர் ப்ளே பேட்டிங் என்று குறிப்பிட்டிருந்தோம், அதனை நேற்று டெல்லி சரியாகப் பயன்படுத்தவில்லை.
ஷேன் வாட்சன், டூப்ளெசிஸ் அனுபவக் கூட்டணி.. விரட்டலை ஒன்றுமில்லாமல் செய்தது:
வாட்சன், டுபிளேசிஸ் கூட்டணியில் டுபிளேசிஸ் முதலில் ஆக்ரோஷம் காட்ட வாட்சன் நிதானித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் வாட்சன் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் விளாசி 32 பந்துகளில் அரைசதம் எடுக்க, டுபிளேசிஸ் அரைசதத்துகு 39 பந்துகள் எடுத்துக் கொண்டார். இதில் 7 பவுண்டரிகள் 1 சிக்சர். இருவரும் சேர்ந்து 10.2 ஓவர்களில் 82 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்க்க ஒன்றுமில்லாமல் போனது டெல்லி.
ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டுபிளேசிஸ், ஷேன் வாட்சன் இருவரும் ஒரு ரன்னுக்கான குழப்பத்தில் இருவரும் மாறி மாறி ஒருமுனையை நோக்கி ஓடி படுதமாஷாக அமைந்தது. எந்த முனையில் அடித்தாலும் ரன் அவுட், யாரை வேண்டுமானாலும் கேட்டுவிட்டு அவுட் செய்திருக்கலாம் ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் ‘காமன் த்ரோ’ என்று சொல்வார்களே அப்படிச் சொதப்பலான ஒரு த்ரோவை செய்து மிக மிக எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டது. இதுதான் சர்வதேச போட்டிகளுக்கும் ஐபிஎல் போன்ற ‘பொட்டி’ போட்டிகளுக்கும் உள்ள வித்தியாசம்.
பவர் ப்ளேயில் விக்கெட்டுகளை விடக்கூடாது என்பதுதான் சிஎஸ்கேவின் முக்கிய விஷயம் அதனால் இருவரும் எச்சரிக்கையுடன் ஆட, டெல்லி கேப்பிடல்ஸ் பவுலிங்கிலும் ஒரு தாக்கமும் இல்லை, சொத்தையாக இருந்தது, இஷாந்த் சர்மாவின் பவர் ப்ளே கடைசி ஓவரில் டுபிளேசிஸ் 3 பவுண்டரிகளை விளாசினார். இதிலிருந்து அவர் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார், அக்சர் படேலை ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் அடித்தது அற்புதமான ஷாட். டுபிளெசிஸ் அரைசதம் அடிக்கும் போது வாட்சன் ஒற்றை இலக்கத்தில்தான் இருந்தார்.
பிறகுதான் வாட்சன் மிஷ்ராவை ஒரு பவுண்டரி, அக்சர் படேலை ஒரு மிகபெரிய சிக்ஸ் என்று ஆரம்பித்தார். டுபிளேசிஸ் 39 பந்து 50 ரன்களுடன் போல்ட் பந்தில் கேட்ச் ஆகி வெளியேற, வாட்சன் ஆதிக்கம் தொடர்ந்தது. கீமோ பால் வீசிய 12வது ஓவரில் ஷார்ட் பிட்ச், லெந்த் பால் கிடைக்க வாட்சன் அந்த ஓவரில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என்று கீமோ பால் பந்து விச்சை ‘கைமா’ செய்தார். இதில் கடைசியில் அடித்த சிக்ஸ் மூலம் 31 பந்துகளில் அரைசதம் கண்டார் வாட்சன். 50 ரன்களில் அடுத்த மிஷ்ரா ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார், ஆனால் டெல்லி கேப்பிடல்ஸுக்கு போதிய சேதத்தை ஏற்படுத்திவிட்டார்கள் வாட்சனும் டுபிளேசிசும்
ரெய்னா, தோனி சோபிக்கவில்லை. ரெய்னா 11 ரன்களில் பவுல்டு ஆக, தோனி 9 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராயுடு 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 19வது ஓவர் முடிவில் வெற்றியை உறுதி செய்தார். ஆட்ட நாயகனாக நிச்சயம் ஹர்பஜன் சிங்கோ அல்லாது டிவைன் பிராவோதான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் டுபிளேசிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மே 12 இறுதிப் போட்டியில் மீண்டுமொரு முறை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் மோதுகிறது. இதில் தோனி கோப்பையைத் தூக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆர்வமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். எப்படியிருந்தாலும் நனி சொட்டும் ஒரு இறுதிப் போட்டி நிச்சயம் காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT