Last Updated : 28 May, 2019 10:10 AM

 

Published : 28 May 2019 10:10 AM
Last Updated : 28 May 2019 10:10 AM

ஒருநாள் போட்டியை டி20 ஆக மாற்றிய ஜேஸன் ராய்: ஆப்கனை ஊதித்தள்ளிய இங்கிலாந்து

ஜேஸன் ராயின் காட்டடி ஆட்டத்தால், லண்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.

முதல்பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்விஅடைந்திருந்த இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் சுதாரித்து ஆடி வெற்றி பெற்று நம்பிக்கையை மீட்டுள்ளது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய், டி20 போட்டி போல் காட்டடி அடித்து, 46 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராய் கணக்கில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதேசமயம் தனது முதலாவது பயிற்சிஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்த ஆப்கானிஸ்தான் அணியில் முக்கிய பேட்ஸ்மேன் ஷேசாத் இல்லாதது அணியில் பெரிய குறையாகும்.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 161 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி மீண்டும் தாங்கள் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது. மோர்கன், ஸ்டோக்ஸ், பட்லர், ஆகியோர் இருந்தபோதிலும், இவர்களுக்கு வேலை வைக்காமல் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, ரூட் ஆகியோர் சேர்ந்து அணியை  வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் அதிர்ச்சி அளித்தார்கள். 49 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத் இல்லாததால், அவருக்கு பதிலாக நூர் அலி ஜாத்ரன் களமிறங்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல் அவர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹஸ்த்துல்லா ஜஜாய்(11), ரஹ்மத் ஷா (3) என விரைவாக வெளியேறினார்கள். அதன்பின் வந்த வீரர்களும் நிலைக்கவில்லை.

88 ரன்களுக்கு 5 -வது விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த 4 ரன்களைச் சேர்ப்பதற்குள் மேலும் 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

9-வது விக்கெட்டுக்கு முகமது நபி, அப்தாப் ஆலம் இருவரும் சேர்ந்து ஓரளவுக்கு ஸ்கோர் செய்து அணியை மீட்டனர். அணியில் அதிகபட்சமாக முகமது நபி 44 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜோய் ரூட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

161 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேஸன் ராய், பேர்ஸ்டோ நல்ல தொடக்கம் அளித்தனர். வலிமையான பேட்ஸ்மேன்களைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு இதுபெரிய ஸ்கோர் இல்லை என்பதை நேற்று நிரூபித்தனர்.

ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நல்ல ஃபார்மில் இருந்து வரும் ராய் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார்.

ஜேஸன் ராய் அடித்த அடியைப் பார்த்தபோது, இது ஒருநாள் போட்டிக்கான பயிற்சிஆட்டமா, அல்லது டி20 போட்டியா என்று நினைக்க வைக்கும் அளவுக்கு ராயின் அதிரடி இருந்தது.

தொடக்கத்தில் இருந்தே பவுண்டரியும், சிக்ஸர்களையும் ராய் விளாசினார். ராய் ஒருபக்கம் அடித்துநொறுக்க பேர்ஸ்டோ நிதானமாக பேட்செய்தார். பேர்ஸ்டோ 39 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ரூட், ராயுடன் சேர்ந்தார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்துஅணியை வெற்றி பெற வைத்தனர். ராய் 89 ரன்களிலும், ரூட் 29 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x