Published : 07 May 2019 12:00 AM
Last Updated : 07 May 2019 12:00 AM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறது. இதில் முதல் தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது மே 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். மாறாக தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய ஆட்டத்தில் தோல்வியை எதிர்கொள்ளும் அணி மே 10-ம் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கலந்து கொள்ளும். இதில் மே 8-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் (சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ்)வெற்றி பெறும் அணியுடன் மோதும்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனை அபாரமான முறையில் தொடங்கியது. ‘கர்ஜிக்கும் சிங்கம்’ என வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, பஞ்சாப் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து லீக் சுற்றை தோல்வியுடன் நிறைவு செய்திருந்தது.
எனினும் தனது ‘குகைக்கு’ (சேப்பாக்கம் மைதானம்) மகிழ்ச்சியுடன் திரும்பிய நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளுமே கடுமையான போட்டியாளர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டத்தில் பங்கேற்று 6 வெற்றிகளை வசப்படுத்தியுள்ளது. இதனால் சொந்த மைதான சாதகங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு முறை பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்களின் செயல்திறன் இந்த சீசனில் சீரற்ற நிலையில் உள்ளது.
தோனி 12 ஆட்டங்களில், 3 அரை சதங்களுடன் 368 ரன்கள் விளாசி தனது அணியில் அதிக ரன்கள் சேர்த்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத் தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடி யாக சுரேஷ் ரெய்னா (359 ரன்கள்), டு பிளெஸ்ஸிஸ் (314 ரன்கள்), ஷேன் வாட்சன் (258 ரன்கள்) சேர்த்துள்ளனர். அதேவேளையில் அம்பதி ராயுடு (219), ரவீந்திர ஜடேஜா (101), டுவைன் பிராவோ (65) ஆகியோர் எதிர்பார்த்த அளவிலான உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.
கடந்த ஆட்டத்தில் தோள் பட்டையில் காயம் அடைந்த கேதார் ஜாதவ் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர், விளையாடாதது அணியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சீசனில் கேதார் ஜாதவ் 14 ஆட்டங்களில் விளையாடி வெறும் 162 ரன்களே சேர்த்திருந்தார். அவரது இடத்தில் சேம் பில்லிங்ஸ் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் முரளி விஜய், துருவ் ஷோரே ஆகியோர் தங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவாக உள்ளது. அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இம்ரன் தகிர் (21 விக்கெட்கள்) அதீத பார்மில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் இந்த சீசனில் தலா 13 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். இந்த சுழல் கூட்டணி மும்பை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக்கூடும்.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்திருந்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தி யாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் 492 ரன்கள் குவித்துள்ள குயிண்டன் டி காக், 386 ரன்கள் விளாசியுள்ள ரோஹித் சர்மா, 380 ரன்கள் சேர்த்துள்ள ஹர்திக் பாண்டியா, பவர் ஹிட்டரான கெய்ரன் பொலார்டு ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
இவர்களுடன் சூர்யகுமார் யாதவ்,கிருணல் பாண்டியா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர் களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில்ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்கள்)ராகுல் ஷகார் (16), மலிங்கா(15), ஹர்திக் பாண்டியா (14)ஆகியோர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடும். இந்த சீசனில் லீக்சுற்றில் இரு ஆட்டங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி வென்றிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றையஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிசெயல்படக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், ஸ்காட் குக்கேலீன், தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், எவின் லீவிஸ், ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவ், லஷித் மலிங்கா, மயங்க் மார்க்கண்டே, பென் கட்டிங், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் ஷகார், பங்கஜ் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சித்தேஷ் லாட், மிட்செல் மெக்லீனஹன், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், அனுகுல் ராய், ரஷிக் சலாம், அன்மோல்பிரீத், பரிந்தர் சரண், ஆதித்யா தாரே, ஜெயந்த் யாதவ்.
நேரம்: இரவு 7.30
இடம்: சென்னை
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT