Published : 21 May 2019 08:14 AM
Last Updated : 21 May 2019 08:14 AM
இங்கிலாந்து ஆடுகளங்களில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பந்துகளை சிதறடித்துள்ளனர் பேட்ஸ்மேன்கள். இதனால் உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பீல்டர்களிடம் இருந்து கணிசமான உதவியை பெறுவதில் தீவிர முனைப்பு காட்டக்கூடும். இந்த வகையில் தங்களது அபாரமான பீல்டிங் திறனால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சில வீரர்களை பற்றிய அலசல்.....
டு பிளெஸ்ஸிஸ்- தென் ஆப்பிரிக்கா
உலக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த பீல்டர்கள் என நினைத் தால் மனதுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது தென் ஆப்பிரிக்கா வின் ஜான்டி ரோட்ஸும், ஏபி டி வில்லியர் ஸும் தான். இவர்களுக்கு அடுத்து தற் போது மனதில் நிற்கக்கூடியவராக டு பிளெஸ்ஸிஸ் உள்ளார். சமீபத்தில் முடி வடைந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் எல்லைக் கோட்டுக்கு அருகே பல ஆட்டங் களில் அபாயகரமான வகையில் பந்து களை பாய்ந்தபடி தடுத்து நிறுத்தியிருந்தார். வியக்க வைக்கும் வகையில் ஒரு சில கேட்ச்களையும் மடக்கியிருந்தார். இவரிடம் பந்துகள் செல்லும் சமயங்களில் எதிரணியினர் கூடுதலாக ஒரு ரன் சேர்ப் பதற்கான ரிஸ்க்கை எடுக்க தயங்கியதை யும் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் நேரங்களில் டு பிளெஸ்ஸிஸ் அணியை வழிநடத்தும் விதமாக அருகிலேயே பீல்டிங் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவரது அசாத்தியமான டைவிங் திறனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கை கொள்வது அவசியம்.
ஆட்டம் 134
ரன்கள் 5,120
கேட்ச்கள் 71
டேவிட் வார்னர்- ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி பாரம்பரியமாகவே சிறந்த பீல்டர்களை கொண்டது. ஆரோன் பின்ச், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பீல்டிங்கில் பலம் சேர்த்து வருகின்றனர். இவர்களுடன் ஓராண்டு தடைக்குப் பிறகு தற்போது அணிக்கு திரும்பியுள்ள டேவிட் வார்னரும் பீல்டிங்கில் மிரட்ட காத்திருக்கிறார். பாயின்ட் திசையில் துள்ளியவாறும், டைவ் அடித்து கேட்ச் செய்வதிலும் டேவிட் வார்னர் சிறப்பாக செயல்படக்கூடியவர். மேலும் எல்லைக் கோட்டுக்கு அருகேயும் பீல்டிங்கில் அசாத்திய திறன்களை வெளிப்படுத்தக்கூடியவர்.
ஆட்டம் 106
ரன்கள் 4,343
கேட்ச்கள் 49
ஆந்த்ரே ரஸ்ஸல் - மேற்கிந்தியத் தீவுகள்
ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் ஆந்த்ரே ரஸ்ஸல் அனைவரையும் கவர்ந்திருந்தார். அவர், பேட்ஸ்மேன் மட்டும் அல்ல பயனுள்ள வகையிலான மித வேகப்பந்து வீச்சாளரும், அபாரமான பீல்டரும் கூட. பெரிய அளவிலான தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடும் போது சில அசாதாரண முயற்சிகளை எடுக்கக்கூடியவர் ரஸ்ஸல். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில், கவர் திசையில் இருந்து கண்மூடித்தனமாக ரஸ்ஸல் வீசிய த்ரோ, தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவை ரன் அவுட்டாக்க பெரிதும் உதவியிருந்தது.
ஆட்டம் 52
ரன்கள் 998
கேட்ச்கள் 11
பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து
பேட்டிங்கில் தற்போது பென் ஸ்டோக்ஸ் பார்மில் குன்றியிருந்தாலும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் பீல்டிங்கில் அபார திறனை வெளிப்படுத்தக்கூடிய அரிதான வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பந்தை விரைவாக துரத்திச் செல்லுதல், துல்லியமாக த்ரோ செய்தல், எல்லைக் கோட்டுக்கு அருகே சாகசமான வகையில் கேட்ச் செய்தல் ஆகியவை பென் ஸ்டோக்ஸின் பலம். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேதார் ஜாதவ் அடித்த பந்தை பாயிண்ட் திசையில்பென் ஸ்டோக்ஸ் கேட்ச் செய்தவிதம் பிரம்மிக்கும் வகையில் இருந்தது.
ஆட்டம் 84
ரன்கள் 2,217
கேட்ச்கள் 42
ரவீந்திர ஜடேஜா- இந்தியா
இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான அணியில் கடந்த சில வருடங்களாக மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் அணியில் தனக்கான இடத்தை இழந்த விரல் ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கிடைத்த வாய்ப்புகளை சாமர்த்தியமாக பயன்படுத்தி உலகக் கோப்பைக்கான அணியில் தனக்கான இடத்தை வேரூன்றி கொள்ளச் செய்துள்ளார்.
பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என முப்பரிமாண திறன்களை கொண்டவர் ஜடேஜா. அதிலும் பீல்டிங்கில் அவரது ‘த்ரோக்கள்‘ மிகவும் துல்லியமாக ஸ்டெம்புகளை தகர்க்கக்கூடியதாக இருக்கும். இந்த கூடுதல் திறனே அவரை, தேர்வுக்குழுவினர் உலகக் கோப்பைக்கான அணிக்குள் இழுத்துக் கொண்டுவர ஒரு காரணமாக அமைந்தது.
அசாதாரணமான வகையில் டைவ் அடித்து பந்தை கேட்ச் செய்வது, தன்னை கடந்து பந்து செல்லாதவாறு தடுத்து பேட்ஸ்மேனை நெருக்கடிக்கு உள்ளாக்குவது, துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா போன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாத்தியமில்லாத வகையில் ரன் அவுட் செய்வது ஆகியவற்றில் கைதேர்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. இதனால் உலகக் கோப்பை தொடரில் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் இவர் மீது எப்போதும் ‘ஒரு கண்‘ வைக்கக்கூடும்.
ஆட்டம் 151
ரன்கள் 2,035
கேட்ச்கள் 49
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT