Last Updated : 19 May, 2019 01:59 PM

 

Published : 19 May 2019 01:59 PM
Last Updated : 19 May 2019 01:59 PM

3 முறை சாம்பியன் ஆஸி.யை காலிறுதியோடு வீட்டுக்கு அனுப்பிய யுவராஜ் சிங்: 19 ஆண்டுகள் சாதனை தகர்ந்தது

12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்கும் முன், பழைய இனிமையான நினைவுகளையும், மறக்க முடியாத வெற்றிகளை அளித்த போட்டிகளையும் நினைவு படுத்திப் பார்ப்பது அலாதியான சுகம்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது.1983-ம் ஆண்டுக்குப்பின் தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டித் தொடரில் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியையும், அரையிறுதியில் பாகிஸ்தானையும் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

அதிலும், கடந்த 1996 முதல் 2007-ம் ஆண்டு தொடர்ந்து 3 முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்று பெரும் மமதையுடன் வலம் வந்த ஆஸ்திரேலிய அணியை 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் காலிறுதியோடு யுவராஜ் சிங், ரெய்னாவின் அர்ப்பணிப்பான பேட்டிங் நடையைக் கட்டவைத்தது.

இந்த போட்டியில் கேப்டன் ரிக்கி பாண்டிங் சதம் அடித்தும் அது வீணாகிப்போனது. ஒரு கட்டத்தில் ஆஸியின் பக்கம் தான் வெற்றி திரும்பியது. தோனி ஆட்டமிழந்தபின் யுவராஜ் சிங், ரெய்னா எவ்வாறு அணியைக் கொண்டு செல்வார்கள் என்றெல்லாம் ரசிகர்கள் சிந்தித்தார்கள். ஆனால், அனைவரின் சந்தேகத்தை உடைத்து எறியும் விதமாக  இருவரின் பேட்டிங் அமைந்தது.

சச்சின், கம்பீர் ஆகியோர் அரைசதம் அடித்து அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை பயன்படுத்திய யுவராஜ் சிங், ரெய்னா இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தார்கள்.

ஏனென்றால், இந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக 19 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதிபெறாமல் நாடு திரும்பியதில்லை என்ற பெருமையை தக்கவைத்து இருந்தது. அந்த கர்வம், ஆணவம் அனைத்தையும் யுவராஜ் சிங், சச்சின், கம்பீர், ரெய்னா ஆகியோரின் பேட்டிங் உடைத்து தூள் தூளாக்கியது.

நடப்பு உலகச் சாம்பியனாக களத்துக்கு வந்த ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தலைகவிழ்ந்து வெளியேறியது.

" எங்கள் அணியை வீழ்த்த இனி எந்த அணி இருக்கிறது" என்று மிகப்பெரிய செருக்குடன் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

இந்த பூனைக்கு யார் மணிகட்டப்போகிறார்கள் என்று நினைத்த நேரத்தில் இந்தியாவின் வெற்றி ஆஸி.க்கு சம்மட்டி அடியாக இறங்கியது.

2011, மார்ச் 21-ம் தேதி அகமதாபாத்தில் பகலிரவாக நடந்த 2-வது காலிறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொண்டது ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.

மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் காலிறுதியில் இந்திய அணி மோதியதால், ரசிகர்கள் மனதில் பெரும் அச்சம் இருந்துவந்தது. காலிறுதியில் வலிமையான அணியை இந்திய அணி சந்திக்கிறதே என்ற பயத்தோடு இருந்தார்கள்.

ஏனென்றால் பேட்டிங்கில் கிளார்க், பாண்டிங், வாட்ஸன், மைக் ஹசி, ஹேடின் என வலிமையான வரிசையும், பந்துவீச்சில் மிட்ஷெல் ஜான்சன், பிரட் லீ, வாட்ஸன், ஷான் டெய்ட் ஆகியோரும் இருந்தார்கள்.

ஆனால் அன்று நடந்தது அனைத்தும் தலைகீழ்.

ஏற்கனவே யுவராஜ் சிங் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்துள்ளதால், அந்த அனுபவத்தை இதில் காட்டி, கதிகலங்கவைத்துவிட்டார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. வாட்ஸன், ஹாடின் ஆட்டத்தை தொடங்கினார்கள். வாட்ஸன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது வீரராக களமிறங்கிய கேப்டன் பாண்டிங், ஹாடினுடன்சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினார்.

நிதானமாக ஆடிய ஹாடின் அரைசதம் அடித்து 53 ரன்னில் ஆட்டிழந்தார். அடுத்துவந்த கிளார்க்(8) ரன்னில் யுவராஜ் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மைக் ஹசி 3 ரன்னில் ஜாகீர்கான் பந்துவீச்சில் போல்டாக நெருக்கடியில் தவித்தது ஆஸ்திரலியா. 150 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்ததது.

ஆனால், கேப்டன் பாண்டிங் அசராமல் பேட் செய்தார். வொய்ட் 12 ரன்னில் வெளியேற, டேவிட் ஹசி, பாண்டிங்கிற்கு துணையாக இருந்தார். அதிரடியாக ஆடிய பாண்டிங் தனது 30-வது சதத்தை நிறைவு செய்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் ஹசி 38, ஜான்ஸன் 6 ரன்னுடன்களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. அஸ்வின், ஜாகீர்கான், யுவராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

261 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சேவாக், சச்சின் ஆட்டத்தை தொடங்கினார்கள். தொடக்கத்தில் இருந்தே இருவரும் தங்களின் வழக்கமான ஷாட்களை அடித்து பவுண்டரிகளா மாற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.  சேவாக் 15ரன்னில் வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு கம்பீர், சச்சினுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அதிலும் சச்சின் ஆடும் ஷாட்களை பார்ப்பதே அழகு, சச்சின் கவர் டிரைவ், ஸ்ட்ரைட் டிரைவ் ஷாட்களில் பவுண்டரி செல்லும்போது ரசிகர்களின் கோஷம் காதைப்பிளந்தது.

61 பந்துகளில் அரைசதம் அடித்த சச்சின் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விராட் கோலி, 24 ரன்னில் நடையைக் கட்டினார். யுவராஜ் சிங், கம்பீருடன் இணைந்தார். 63 பந்துகளில் அரைசதம் அடித்த கம்பீர் 50 ரன்னில் ரன் அவுட்டாக, அடுத்து வந்த தோனியும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் ஆஸியின் கைகளுக்கு திரும்பியது

யுவராஜ் சிங், ரெய்னா மட்டுமே களத்தில் இருந்தார்கள். அனுபவமற்ற இருவரும் எவ்வாறு போராடுவார்கள் என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். 74 பந்துகளுக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது.

ரெய்னா, யுவராஜ் சிங் ஆட்டம் இன்றளவும் பேசப்படுவதற்கு இந்தபோட்டியில் ஆடிய நேர்த்தியான பேட்டிங் மட்டுமே காரணம். 40 ஓவரில் பிரட்லீ வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து அனைவரையும் யுவராஜ் சிங் வியக்கவைத்தார். கடைசி 10 ஓவர்களில் 54 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் பந்துகளை வீணாக்காமல் ஒரு ரன், இரு ரன் என சேர்த்து, வெற்றிக்கு அருகே கொண்டுவந்தனர். அதிரடித் திருப்பமாக பிரட்லீ வீசிய 46-வது ஓவரில் ரெய்னா லெக்சைடில் அடித்த சிக்ஸரை இன்றளவும் மறக்க முடியாது. யுவராஜ் சிங் 54 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பிரட்லீ வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தில் யுவராஜ்சிங் பவுண்டரி அடிக்க இந்திய அணி 14 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்துவைத்தது.

 யுவராஜ் சிங் 57 ரன்களுடனும், ரெய்னா 34 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆஸியை வீட்டுக்கு அனுப்பினார்கள்.  ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x