Published : 17 May 2019 06:12 PM
Last Updated : 17 May 2019 06:12 PM
எந்த ஒரு போட்டித்தொடர் முடிவடையும் போது இதில் சில சலசலப்புகள், சர்ச்சைகள் இருப்பது இயல்புதான். அது ஐசிசி நடத்திய உலகக்கோப்பைப் போட்டியும் விதிவிலக்கல்ல.
ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் ஒவ்வொரு விதமான சர்ச்சைகள் நடந்துள்ளன, அடுத்த சில மாதங்களுக்கு விமர்சிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்டன. அந்த சர்ச்சைகள் அணிகளின் தோல்விக்கு காரணமாகின, இழப்பை ஏற்படுத்தின. சிலநேரங்களில் ரசிகர்கள் செய்த கலாட்டாக்கள் கூட அணியின் வெற்றி, தோல்விகளை நிர்ணயித்தன.
இந்த சர்ச்சைகள் நடக்காமல் இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட அணிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்குமா என்றால் உண்மைதான். உதாரணாக கொல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபடாமல் இருந்திருந்தால், நிச்சயம் இந்திய அணி காம்ப்ளி மூலம் இலக்கை நோக்கிச் சென்றிருக்கலாம் ஆனால் வெற்றி பெறுவது மிகக்கடினமே, ஆனால் அதற்கான வாய்ப்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் ரகளை செய்ததால் காம்ப்ளி கண்ணீருடன் வெளியேறினார்.
ஒரு பந்தில் 22 ரன்களில் தோற்ற அணி(1992)
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி நடந்தது. நிறவெறித்தடையில் இருந்து வந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த முதல் உலகக் கோப்பை இதுவாக இருந்தது. வலுவான அணியாக இருந்த தென் ஆப்பிரிக்க அரையிறுதியில் இங்கிலாந்து அணியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. மழை நின்றபின் மீண்டும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வந்தபோது 7 பந்துகளுக்கு 22 ரன்கள் என்ற கணக்கீடு வந்தது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிடவே டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஒருபந்தில் 22 ரன்கள் அடிக்க நிர்ணயிக்கப்பட்டது. சாத்தியமில்லாத இந்த இலக்கால் தென் ஆப்பிரிக்க அணி வேதனையுடன் வெளியேறியது. ஆனால், அடுத்த சிறிதுநேரத்தில் 2 மணிநேரம் வெயில் அடித்தது வேறு கதை.
ரசிகர்களால் தோல்வி அடைந்த இந்திய அணி (1996)
1996-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இலங்கை நிர்ணயித்த 252 ரன்களை துரத்திய இந்திய அணியில் சச்சின்(65) ஆட்டமிழக்காமல் இருந்தவரை ரசிகர்கள் அமைதி காத்தனர்.
ஆனால் சச்சின் வெளியேறியபின் அடுத்து வந்த மஞ்சரேக்கர், அசாருதீன், ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரசிகர்கள் கொதித்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்திருந்தபோது ரசிகர்கள் வன்முறையால் ஆட்டம் பாதியிலியே நிறுத்தப்பட்ட இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளால் பலனடைந்த இலங்கை(1996)
கடந்த 1996-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி இந்தியா, இலங்கை, பாகிஸ்தானில் நடந்தது. இதில் இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்தபோது, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி லீக் ஆட்டங்களில் பங்கேற்க ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் அணிகள் மறுத்துவிட்டன. இந்த இரு அணிகளும் பங்கேற்காதது, இலங்கைக்கு 4 புள்ளிகளை தேடிக்கொடுத்து கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
குரோனியே இயர்போனால் சர்ச்சை (1999)
1999-ம் ஆண்டு உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடந்தது. தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹேன்ஸ் குரோனியேவும், பயிற்சியாளர் பாப் உல்மரும் அணியை வலுவாக கட்டமைத்தனர். குரோனியே காதில் இயர்போனுடன் களத்தில் வந்து பீல்டிங் செய்தபோது, அவருக்கு பயிற்சியாளர் உல்மர் கட்டளைகளை கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கங்குலி கண்டுபிடித்து நடுவரிடம்புகார் தெரிவித்தார். அதன்பின் குரோனியை தனது இயர்போனை நீக்கினார். ஆனாலும் ஐசிசி விதிமுறையை மீறியதாக குரோனியே மீது நடவடிக்கை பாய்ந்தது.
ஊக்கமருந்தால் வந்த சிக்கல்(2003)
2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்மில் இருந்தது. அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் மோடுரெக்டிக் எனும் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சில் முக்கிய வீரராக விளங்கிய வார்ன், சென்றதும் பந்துவீச்சில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, பலவீனமடைந்தது. ஆனால், இழப்பில் இருந்து வேகமாக மீண்ட ஆஸ்திரேலியா வேகப்பந்துமூலம் வென்றது வேறு விஷயம்.
அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்த வீரர்கள்(2003)
தென் ஆப்பிரிக்காவில் 2003-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே வீரர்கள் ஆன்டி பிளவர், ஹென்ரி ஓலங்கா ஆகியோர் தங்கள் நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்கள்.
உலகக் கோப்பைப் போட்டி தொடங்கும் முன், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இருவரும், ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது என்று பரபரப்பை ஏற்படுத்தினார்கள். கையில் கறுப்பு பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்றார்கள்.
உலகம் முழுவதும் இருந்து இருவருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முடிந்தவுடன் இருவரும் ஓய்வு பெற்றனர்.
பயிற்சியாளரின் மர்ம மரணம்(2007)
2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி மே.இ.தீவுகளில் நடந்தது. பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர் ஹோட்டல் அறையில் மர்மமாக மரணமடைந்தார். பாப் உல்மர் மரணத்துக்குப்பின் பாகிஸ்தான் அணி மனரீதியாக பெரிய பாதிப்பை அடைந்து தோல்வியுடன் நாடு திரும்பினார்கள்.
ஆனால், போட்டியின் இடையே வீரர்கள் மீதான சந்தேகம், விமர்சனங்கள், விசாரணைகள் போன்றவை பாகிஸ்தான் அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. உலகக் கோப்பைப் போட்டியையும் உலுக்கியது. இறுதியில் உல்மர் இயற்கையான முறையில் மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கேப்டன் பதவி பறிப்பு(2007)
மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த இந்த உலகக் கோப்பைப்போட்டியில் இங்கிலாந்து துணைக் கேப்டன் பிளின்டாப் மது அருந்தி கேளிக்கையில் ஈடுபட்டார். செயின்ட் லூசியா தீவில் மது அருந்தி படகில் சென்ற விவகாரம் அவரின் கேப்டன் பதவியை பறித்தது, ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
2.5 மீட்டர் விதி-தோனி அதிருப்தி
2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி லீக் ஆட்டத்தில் மோதியது. இந்த போட்டியில் இயான் பெல் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தும், அவருக்கு அவுட் வழங்க நடுவர் பில்லி பவுடன் மறுத்துவிட்டார். அதன்பின் ட்ஆர்எஸ் முறையில் தோனி முடிவை மாற்றி கோரினார்.
ஆனால், எல்பிடபிள்யு காலில் வாங்கும்போது பேட்ஸ்மேனுக்கும், ஸ்டெம்புக்கும் இடையே 2.5 மீட்டர் இடைவெளிக்கும் அதிகமாக இருந்ததால், அவுட் அளிக்க நடுவர் மறுத்துவிட்டார். 2.5 மீட்டருக்கு உள்ளே இருந்தால்தான் அவுட் வழங்க முடியும் என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது. தோனியும் அதிருப்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT