Published : 18 May 2019 04:26 PM
Last Updated : 18 May 2019 04:26 PM

இந்திய அணிக்கு ஒரு சரியான  ‘உதை’கொடுக்க வேண்டியுள்ளது:  உ.கோப்பையில் ‘காழ்ப்பு’ போட்டியை எதிர்நோக்கும் லுங்கி இங்கிடி

2018 தொடக்கத்தில் விராட் கோலி தலைமை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் 5-1 என்று ஒரு பெரிய சாதனை வெற்றியைச் சாதிக்க அது தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடியை மிகவும் பாதித்துள்ளது.

 

அவர் கூறும் தொடரில் டுபிளெசிஸ், டிவில்லியர்ஸ், குவிண்டன் டி காக் என்று விளாசல் தலைகள் யாரும் இல்லை, அய்டன் மார்க்ரம் தலைமையிலான சொத்தை அணியை இந்திய அணி 5-1 என்று வீழ்த்தியதில் ஆச்சரியமெதுவும் இல்லை. ஆனால் அந்த உதை லுங்கி இங்கிடியை வெகுவாகப் பாதித்துள்ளது போலும்.

 

எனவே உலகக்கோப்பையில் இந்திய அணியுடனான போட்டியை ‘காழ்ப்பு’ போட்டி என்று அழைக்கும் லுங்கி இங்கிடி, “இந்தியாவுக்கு ஒரு உதை கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

“நான் இந்திய அணியுடன் மோதும் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். இங்கு வந்த போது அந்த அணிக்கு நல்ல தொடராக அமைந்தது. எனவே உலகக்கோப்பையில் இந்திய அணியுடனான போட்டியை எதிர்நோக்குகிறேன். என் மனதில் இந்திய அணிக்கு ஒரு உதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அந்தப் போட்டி உற்சாகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் அனைத்து வீரர்களுக்குமே அந்தப் போட்டி சுவாரசியமாகவே இருக்கும்.

 

இந்திய அணி மிகப்பெரிய அணி அதில் எதுவும் மாற்றமில்லை, ஆனால் அவர்கள் இங்கு வந்து ஆடிய போது பெரிய வீரர்கள் இல்லை, இப்போது பெரிய வீரர்கள் திரும்பிய நிலையில் இந்திய அணியை ஒரு கை பார்க்க வேண்டியுள்ளது.

 

உலகக்கோப்பையை வென்று கோப்பையை தென் ஆப்பிரிக்க மண்ணுக்குக் கொண்டு வருவதுதான் இலக்கு”

 

என்றார் லுங்கி இங்கிடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x