Published : 18 May 2019 03:44 PM
Last Updated : 18 May 2019 03:44 PM
இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்துவதற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனிக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
உலகக் கோப்பைப் போட்டியில் அதிகமாக டிஸ்மிஸல் செய்த விக்கெட் கீப்பர்களில் முதல் 5 இடங்களில் இருக்கும் வீரர்களில் இன்றுவரை விளையாடி வரும் ஒரேவீரர் தோனி மட்டும்தான். ஆதலால், புதிய சாதனையை தோனி படைக்க வாய்ப்பு உள்ளது.
12-வது உலகக் கோப்பைப் போட்டி வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. 10 அணிகள், இடங்கள், 46 ஆட்டங்கள் என போட்டிகள் என ஜூலை 14-ம் தேதிவரை களைகட்டும்.
கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த திருவிழாவில் பல சாதனைகளை படைக்க வேண்டும், இடம் பெற வேண்டும் என்பதில் தீராத ஆசை இருக்கும். வாய்ப்பு கிடைத்த வீரர்களில் சிலர் தங்களின் முத்திரை பதிக்காமல் விடுவதில்லை.
பந்துவீச்சு, பேட்டிங், கேட்ச் பிடித்தல், பீல்டிங், ரன் அவுட், விக்கெட் கீப்பிங் என ஒவ்வொரு பிரிவிலும் வீரர்கள் தங்களின் தடத்தை பதித்து வருகிறார்கள். அந்த வகையில் உலகக் கோப்பைப் போட்டியில் விக்கெட் கீப்பிங் பிரிவில் அதிகமான டிஸ்மிஸல்(கேட்ச்+ஸ்டெம்பிங்) செய்தவர்களும் இருக்கிறார்கள்.
இதில் முதல் 5 இடங்களில் இருக்கும் வீரர்களில் 4 பேர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவிட்ட நிலையில், இந்திய அணியின் தோனி மட்டுமே தற்போதுவரை விளையாடி வருகிறார். உலகின் தலைசிறந்த விக்கெட்கீப்பர்கள் இந்த 5 வீரர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அதிக ரன்கள், அதிக டிஸ்மிஸல்
உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமான ரன்களைச் சேர்த்த வீரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ள இலங்கை வீரர் குமார் சங்கக்கரா, விக்கெட் கீப்பிங்கிலும் முத்திரை பதித்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடிவரும் சங்கக்கரா, இதுவரை 37 போட்டிகளில் பங்கேற்ருள்ளார். இதில் 41 கேட்சுகள், 13 ஸ்டெம்பிங்குகள் உள்பட 54 டிஸ்மிஸல்களை சங்கக்கரா செய்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 3 கேட்சுகள், ஒரு ஸ்டெம்பிங் என 4 டிஸ்மிஸல்களை சங்கக்கரா செய்துள்ளார்.
அதிகமான கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் அதிகமான டிஸ்மிஸல் செய்த வீரர்களில் 2-வது இடத்தில் இருக்கிறார். கடந்த 1999ம் ஆண்டு உலகக் கோப்பை முதல் 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை கில்கிறிஸ்ட் விளையாடி வருகிறார். இதுவரை 31 ஆட்டங்களில் விளையாடியுள்ள கில்கிறிஸ்ட் 45 கேட்சுகளையும், 7 ஸ்டெம்பிங்களையும் செய்துள்ளார். இதில் உலகக்கோப்பைப் போட்டியில் அதிகமான கேட்சுகளை(45) பிடித்த விக்கெட் கீப்பரில் கில்கிறிஸ்ட் சாதனையை எந்த விக்கெட் கீப்பரும் முறியடிக்கவில்லை.
சாதனைக்காக காத்திருக்கும் விக்கெட் கீப்பர்
உலகக் கோப்பையில் சாதனை செய்த முதல் 5 விக்கெட் கீப்பர்களில் இன்று வரை விளையாடிக்கொண்டிருக்கும் ஒரே விக்கெட் கீப்பர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மட்டுமே. கடந்த 2007 உலகக் கோப்பை முதல் 2015வரை விளையாடியுள்ளார். இவர் தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றது.
ஸ்டெபிம்பிங்கில் மின்னல் வேகத்தை காட்டும் தோனி, கேட்சுகளைப் பிடிப்பதிலும் வல்லவர். இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 27 கேட்சுகள், 5 ஸ்டெம்பிங்குகள் என 32 டிஸ்மிஸல்கள் செய்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பையைக் காட்டிலும் தோனியின் விக்கெட் கீப்பிங் திறமை முதிர்ச்சி அடைந்திருப்பதால், இந்த முறை தோனியின் விக்கெட் கீப்பிங் பணி அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பையில்விளையாடும் அணிகளில் அதிகமான அனுபவம் கொண்ட விக்கெட் கீப்பரும் தோனி மட்டுமே.
கில்கிறிஸ்டின் சாதனையை எட்டிப்படிக்க தோனிக்கு இன்னும் 20 டிஸ்மிஸல்கள் தேவைப்படுகிறது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதை எட்டுவார் என நம்பலாம்.
தோனியை துரத்திய மெக்குலம்
நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கலம் 32 டிஸ்மிஸல்கள் செய்து தோனிக்கு இணையாக இருக்கிறார். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மெக்கலம் ஓய்வு பெற்றநிலையில், தோனிக்கு எந்தவிதத்திலும் போட்டியில்லை. இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கலம் 30 கேட்சுகள், 2 ஸ்டெம்பிங்குகள் என 32 டிஸ்மிஸல்களைச் செய்துள்ளார்.
ஸ்டெம்பிங் செய்யாத விக்கெட் கீப்பர்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் அதிக டிஸ்மிஸல்கள் செய்த வீரர்களில் 5-வது இடத்தில் இருக்கிறார். மார்க் பவுச்சரின் குறிப்பிடத்தக்க சாதனையை தான் செய்த 31 டிஸ்மிஸல்களுமே கேட்சுகள் மட்டும்தான், ஒரு விக்கெட்டைக் கூட ஸ்டெம்பிங் மூலம் எடுக்கவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு உலகக்கோப்பை முதல் 2007-ம் ஆண்டுவரை 25 போட்டிகளில் பவுச்சர் விளையாடி இந்த சாதனையை வைத்துள்ளார். பவுச்சரும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT