Published : 17 May 2019 08:50 AM
Last Updated : 17 May 2019 08:50 AM
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. உலக சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இந்தத் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, இரு முறை கோப்பையை வென்ற இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஒரு முறை வாகை சூடிய பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுடன் முதன்முறையாக கோப்பையை கைகளில் ஏந்தத் துடிக்கும் இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் பட்டம் வெல்ல வரிந்துகட்ட உள்ளன. இவர்களுடன் அவ்வப்போது அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வங்கதேசம், அசுர வளர்ச்சி பெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிகளும் களத்தில் குதிக்கின்றன. உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் தங்களது கேப்டன்களின் திறனை வெகுவாக சார்ந்தே உள்ளது. 10 கேப்டன்களில் மோர்கன், ஜேசன் ஹோல்டர், மஷ்ரஃப் மோர்டாசா ஆகியோர் மட்டுமே கடந்த உலகக் கோப்பை தொடரில் அணியை வழி நடத்தியவர்கள். மீதம் உள்ள 7 கேப்டன்களுக்கும் இந்த உலகக் கோப்பை புதிதுதான். அவர்களை பற்றிய ஓர் அலசல்..
இந்தியா - விராட் கோலி
மோர்கனை போன்றே சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய கேப்டனில் ஒருவராக கருதப்படுபவர் விராட் கோலி. கேப்டனாக விராட் கோலி சற்று மேம்பட்டுள்ளார். 68 ஆட்டங்களில் 49-ல் வென்ற நிலையில் உலகக் கோப்பை தொடரில் அணியை வழிநடத்த உள்ளார். அவரது வெற்றி சதவீதம் 73.88 ஆகும். 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கோலிக்கு உள்ளது. முதன் முறையாக கேப்டனாக உலகக் கோப்பையை அணியை வழிநடத்த உள்ள விராட் கோலி, அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய வீரராகவும் உள்ளார்.
பாகிஸ்தான் - சர்ப்ராஸ் அகமது
2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணி சர்ப்ராஸ் அகமது தலைமையில் வென்றிருந்தது. அதே மண்ணில்தான் இம்முறை உலகக் கோப்பை தொடரில் அணியை வழிநடத்த உள்ளார் சர்ப்ராஸ் அகமது. பாகிஸ்தான் அணியை 35 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி 21 வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் 61.76. உலகக் கோப்பையில் கேப்டன், நடுவரிசை பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என 3 பணிகளையும் கையாள உள்ளார் சர்ப்ராஸ் அகமது.
ஆப்கானிஸ்தான் - குல்பாதின் நயிப்
உலகக் கோப்பை தொடரில் குல்பாதின் நயிப் கேப்டனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் அஸ்கர் ஆப்கான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட குல்பாதின் நயிபுக்கு முதல் தொடரிலேயே கடும் சவால்கள் காத்திருக்கின்றன. இதற்கு முன்னர் அணியை வழிநடத்திய அனுபவம் இல்லாததால், தலைமை பண்பில் குல்பாதின் எப்படி செயல்படுவார் என்பதை காண அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளர். மிதவேகப் பந்து வீச்சாளரான குல்பாதின் நயிப் 52 ஆட்டங்களில் விளையாடி 40 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் 807 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஆஸ்திரேலியா - ஆரோன் பின்ச்
2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 18 ஆட்டங்களில் விளையாடி 10 வெற்றிகளை பெற்றது.அதிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களை கைப்பற்றி அசத்தியது. இவரது வெற்றி சதவீதம் 56 ஆகும். கேப்டனாக தொடக்கத்தில் ரன்கள் சேர்க்க தடுமாறி வந்த ஆரோன் பின்ச், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் விளாசியிருந்தார்.
வங்கதேசம் - மஷ்ஃரப் மோர்டசா
உலகக் கோப்பை தொடரில் 2-வது முறையாக வங்கதேச அணியை வழிநடத்த உள்ளார் மஷ்ஃரப் மோர்டசா. இவரது தலைமையில் வங்கதேச அணி கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியிருந்தது. முதன் முறையாக கால் இறுதியில் கால்பதித்திருந்த அந்த அணியின் வெற்றிக்கு இந்திய அணி முட்டுக்கட்டை போட்டிருந்தது. வங்கதேச அணியை 73 ஆட்டங்களில் வழிநடத்தியுள்ள மோர்டசா 40 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இலங்கை - திமுத் கருணாரத்னே
இலங்கை அணி அனுபவம் வாய்ந்த நிரோஷன் திக்வெலா, தினேஷ் சந்திமால், உபுல் தரங்கா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் இல்லாமல் திமுத் கருணாரத்னே தலைமையில் உலகக் கோப்பை தொடரை அணுகுகிறது. திமுத் கருணாரத்னே கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கியிருந்தார்.
உலகக் கோப்பை தொடராக அமைந்திருந்த அந்த ஆட்டத்துக்குப் பிறகு தற்போதுதான் குறுகிய வடிவிலான போட்டியில் அதிலும் கேப்டனாக முதல் முறையாக அணியை வழிநடத்த உள்ளார். இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடி உள்ள கருணாரத்னே சராசரி 15.83 உடன் 190 ரன்களே சேர்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - டு பிளெஸ்ஸிஸ்
வெற்றிகரமான கேப்டன்களில் வலம் வரக்கூடியவர்களில் முக்கியமானவர் டு பிளெஸ்ஸிஸ். இவரது வெற்றி சதவீதம் 83.33 ஆகும். 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி 5 இருதரப்பு கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது. ஒரே ஒரு தொடரை மட்டுமே இழந்துள்ளது. பேட்டிங்கில் 46.54 சராசரியை கொண்டுள்ள ஸ்டைலிஷான நடுவரிசை பேட்ஸ்ஸிஸ் அணியின் பெரிய சொத்தாக உள்ளார்.
நியூஸிலாந்து - கேன் வில்லியம்சன்
2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ஒரு அங்கமாக இருந்தார். பிரண்டன் மெக்கலம் கேப்டன்சியின் கீழ் வில்லியம்சன் சிறந்த முறையில் வார்த்தெடுக்கப்பட்டார். ஆனால் மெக்கலத்தின் வழி அதிரடி என்றால், வில்லியம்சன் நிதானமாகவும் கூர்மையாகவும் செயல்படக்கூடியவர். வெற்றிகரமான பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் வலம் வரும் வில்லியம்சனின் வெற்றி சதவீதம் 53.96 ஆகும்.
மேற்கிந்தியத் தீவுகள் - ஜேசன் ஹோல்டர்
இந்த உலகக் கோப்பையில் மிக இளம் வயது கொண்ட கேப்டன் (27) என்ற பெருமையை பெற்றுள்ள ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் சரியான கலவையில் இடம் பெற்றுள்ளனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு தொடரை கூட வெல்லாத மேற்கிந்தியத் தீவுகள் அணி சமீபத்தில் தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை டிரா செய்ததன் மூலம் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT