Published : 18 May 2019 04:47 PM
Last Updated : 18 May 2019 04:47 PM
உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து ஜாம்பவான் கிளென் மெக்ராத் அருகேகூட யாரும் செல்ல முடியாத வகையில் சாதனை படைத்துள்ளார்.
அதேசமயம், டாப் 3 இடத்தில் வருவதற்கு இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்காவுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்தில் உலகக் கோப்பை திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்க இருக்கிறது. அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்யும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறை இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் ஆடுகளம் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான முறையில் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பந்துவீச்சாளர்களும் தங்களின் தடத்தை பதிப்பார்கள். இந்தமுறை வேகப்பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் சாதனை படைக்க பல வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
இருந்தாலும், உலகக் கோப்பைத் தொடரில் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் அருகேகூட இப்போதுள்ள வீரர்களால் வர முடியாது. அதில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்காவுக்கு மட்டுமே 3-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து ஜாம்பவான்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். 39 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்ராத் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தான் முதன் முதலில் அறிமுகமாகிய உலகக் கோப்பைப் போட்டியில்யே 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும், அதன்பின் 1999 உலகக் கோப்பையில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அதிகவிக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தைமெக்ராத் பிடித்தார். தன்னுடைய கடைசி உலகக் கோப்பையில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி 71 விக்கெட்டுகள் என்று சாதனை படைத்தார். அதிகபட்சமாக 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பையில் மெக்ராத்தின் எக்கானமி 3.96 என வைத்துள்ளார்.
இலங்கையின் சுழல்மன்னன்
இலங்கையின் சுழற்பந்துவீச்சு மன்னன் என்று அழைக்கப்படக்கூடிய முத்தையா முரளிதரன் 2-வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் 40 ஆட்டங்களில் பங்கேற்று 68 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் முரளிதரன். 5 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியுள்ள முரளிதரன் 4 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1996 மற்றும் 1999 உலகக் கோப்பைப் போட்டியில் 11 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை சாய்த்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகளையும், 2007-ம் ஆண்டில் 23 விக்கெட்டுகளையும் 2011-ம் ஆண்டில் 15 விக்கெட்டுகளை முரளிதரன் வீழ்த்தினார். முரளிதரன் தன்னுடைய எக்கானமியாக 3.88 ரன்கள் வைத்துள்ளார்.
பாகிஸ்தான் வேகம்
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன், வேகப்பந்துவீச்சாளரான வாசிம் அக்ரம் உலகக் கோப்பைப்போட்டியில் அதிகமான விக்கெட் வீழத்தியதில் 3-வது இடத்தில் உள்ளார். மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரான வாசிம் அக்ரம் இதுவரை ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். 5 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற வாசிம் அக்ரம் 38 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 4 விக்கெட்டுகளை 2 முறையும், 5 விக்கெட்டுகளை ஒருமுறையும் வாசிம் அக்ரம் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான வாசிம் அக்ரம் 7 விக்கெட்டுகளையும், அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில்18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய வாசிம் அக்ரம் தலைமையில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்பின் 2003-ம் ஆண்டில் 12 விக்கெட்டுகளை வாசிம்அக்ரம் வீழ்த்தினார். இந்த முறை லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறியது.
இலங்கையின் சமிந்தா வாஸ்
ஒருநாள் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் வாஸ் 400 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பைப் போட்டிகளில் 1996 முதல் 2007-ம் ஆண்டுவரை இலங்கை அணிக்காக வாஸ் விளையாடினார்.
31 ஆட்டங்களில் பங்கேற்ற வாஸ் 49 விக்கெட்டுகளை உலகக் கோப்பைத் தொடரில் வீழ்த்தியுள்ளார். ஒருமுறை 4 விக்கெட்டுகளையும், ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் வாஸ்.
இந்தியாவின் இடதுகை வேகம்
இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இன்றும் ஜாகீர் கான் கருதப்படுகிறார். 3 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஜாகீர்கான் விளாயாடியுள்ளார். 23 ஆட்டங்களில் 44 விக்கெட்டுகளை ஜாகீர்கான் வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 42 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை ஜாகீர்கான் வீழ்த்தியிருந்தார்.
2003-ம் ஆண்டு உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்த போது இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி 4-வது அதிகபட்ச விக்கெட் வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
சாதிப்பாரா லசித் மலிங்கா
உலகக் கோப்பைப் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார் மலிங்கா. இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் 10 இடங்களில் இருக்கும் வீரர்களில் இன்னும் உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வீரர்களில் மலிங்கா மட்டுமே இருக்கிறார். இந்த முறை குறைந்தபட்சம் மலிங்கா 10 முதல் 15 விக்கெட்டுகளையாவது வீழ்த்தக்கூடும். அவ்வாறு வீழ்த்தும்பட்சத்தில் பட்டியலில் 3-வது இடத்துக்கு அதாவது வாசிம் அக்ரம் இடத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கலாம்.
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதியும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தபோதிலும் அவர் 33 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவர் 3-வது இடத்தைப் பிடிக்க 20 விக்கெட்டுகளையாவது வீழ்த்துவதும் அவசியம். இந்த முறை இந்த இருவர் மட்டுமே கவனிக்கப்படக்கூடிய பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT