Last Updated : 10 Sep, 2014 10:36 AM

 

Published : 10 Sep 2014 10:36 AM
Last Updated : 10 Sep 2014 10:36 AM

அபிஷேக் அணியின் வெற்றிக்குப் பின்னால் ஒரு தமிழர்

கடந்த இரண்டு மாதங்களாக இந்திய கபடி ரசிகர்களுக்கெல்லாம் விருந்தாய் அமைந்தது புரோ கபடி போட்டி. அதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன் ஆனது. பாலிவுட் நட்சத்திரம் அபிஷேக் பச்சனுக்கு சொந்தமான பாந்தர்ஸ் அணியின் வெற்றிக்கு பின்னால் இருப்பவர் ஒரு தமிழர். தஞ்சாவூர் மாவட்டம் சூலியாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் கே.பாஸ்கரன்தான் அந்தத் தமிழர்.

நட்சத்திர குடும்பத்துக்கு சொந்தமான பிங்க் பாந்தர்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லாதபோதும் அந்த அணியை சாம்பியனாக்கி சாதித்து காட்டியிருக்கும் பாஸ்கரனுக்கு இப்போது வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. புரோ கபடியால் புகழ் பெற்றிருக்கும் பாஸ்கரன், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாந்தர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு தஞ்சாவூர் திரும்பியிருக்கிறார். அவர் தனது வெற்றிப் பயண அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டவை:-

புரோ கபடியில் பயிற்சியாளர் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

ஆரம்பத்தில் பாந்தர்ஸ் அணியின் மாற்று பயிற்சியாளராகத்தான் இருந்தேன். ஆனால் போட்டி தொடங்கும் நேரத்தில் ஏற்கெனவே பயிற்சியாளராக நியமிக்கப்

பட்டிருந்தவர் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அதிலிருந்து விலக நான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டேன்.

அணியின் உரிமையாளர் என்ற முறையில் அபிஷேக்கின் ஆதரவு எப்படியிருந்தது?

அவர் பள்ளி நாட்களில் கபடி விளையாடியிருக்கிறார். அதனால் அவர் ஓரளவு கபடி பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். பயிற்சி போட்டிகளின்போது 3 நாட்கள் எங்களோடு இருந்த அவர் “அண்ணா வாங்கோ” என தமிழில்கூறி, கபடியை எனக்கும் கற்றுக்கொடுங்கள் என என்னிடம் கேட்டார்.

புரோ கபடி லீக்கின் முதல் ஆட்டத்தில் தோற்றபோது நம்பிக்கையிழந்துவிட்டோம். ஆனால் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் என அனைவரும் எங்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நம்பிக்கையையும் கொடுத்தனர். இதேபோல் ஐஸ்வர்யராய் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர் 100 சதவீத அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படக்கூடியவர். அவரின் அர்ப்பணிப்பும், ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய வியப்பை தந்தது.

உங்கள் அணிக்கு திருப்புமுனையாக அமைந்த விஷயம் எது?

முதல் போட்டியில் யு மும்பா அணியிடம் கண்ட தோல்விதான் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது. நாங்கள் வகுத்த உத்திகளை போட்டியின்போது செயல்படுத்த முடியாமல் போனதால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. எங்கள் அணியில் நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லை. அவர்களில் யாருக்கும் பெரிய ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில் விளையாடிய அனுபவம் கிடையாது. அதனால் பதற்றமடைந்துவிட்டனர்

தோல்விக்காக என்னிடம் மன்னிப்பு கேட்ட வீரர்கள், “இதற்குமுன்னர் எங்களுக்கு சரியான பயிற்சியாளர் இல்லை” எனக் கூறினார்கள். அந்தத் தோல்விக்கு பிறகு நான் கடுமையாக உழைத்தேன். வீரர்களும் அதற்கு ஒத்துழைக்க அணி வலுப்பெற்றது. அதுதான் எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்தத் தருணம்தான் எங்களின் வெற்றிப் பயணத்துக்கும் வித்திட்டது.

பாந்தர்ஸ் அணியின் பலம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

பாடிச் செல்லும் வீரர் (ரைடர்) மணீந்தர் சிங், தடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் ரானா, பிரசாந்த் சவாண், ராஜேஷ் நர்வால் ஆகியோர் பாந்தர்ஸ் அணியின் மிகப்பெரிய பலம் என நினைக்கிறேன். மணீந்தர் சிங் 16 போட்டிகளில் 130 புள்ளிகளை பெற்றுத்தந்திருப்பது சாதாரண விஷயமல்ல. இதேபோல் கேப்டன் நவ்நீத் கௌதம் நெருக்கடியான தருணங்களில் பதற்றமின்றி மிகச்சிறப்பாக செயல்பட்டது மிகப்பெரிய பலமாக அமைந்தது.

பாந்தர்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார்?

பாடிச் செல்லும் வீரர் (ரைடர்) மணீந்தர் சிங்தான். பஞ்சாபைச் சேர்ந்த அவர் மிக ஒழுக்கமான வீரர் மட்டுமல்ல, சொல்வதை கேட்டு அப்படியே செயல்படக்கூடியவர்.

புரோ கபடி லீக்கில் மறக்க முடியாத தருணம் ஏதாவது?

சாம்பியன் ஆன அந்தத் தருணம்தான். வெற்றி தந்த மகிழ்ச்சியால் பறப்பது போன்ற ஒரு உணர்வில் திளைத்துக் கொண்டிருந்தபோது, “அண்ணா சாப்பிட போலாமா?” என அபிஷேக் பச்சன் தமிழில் கேட்டது, ஐஸ்வர்யராய் ஓடி வந்து என்னை கட்டியணைத்த அந்தத் தருணம் ஆகியவற்றை எப்போதுமே மறக்க முடியாதது.

வெற்றிக் கொண்டாட்டம் பற்றி…

வெற்றிக் கொண்டாட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யராய் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் எனக்கும், அணியின் அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ.55 ஆயிரம் மதிப்பிலான தனது கையெழுத்திட்ட செல்போனை பரிசாக அளித்தார் அமிதாப் பச்சன்.

உங்களின் அடுத்த இலக்கு என்ன?

இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும். மலேசிய அணிக்கு பயிற்சியளித்திருக்கிறேன். 2004-ல் என்.ஐ.எஸ்.ஸில் டிப்ளமோ முடித்தபிறகு தமிழகத்தில் கபடி பயிற்சியாளராக முயற்சி செய்தேன். 2005 முதல் 2012 வரை பலமுறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) படியேறிச் சென்று உறுப்பினர்-செயலர்களை சந்தித்து மனு அளித்தேன். எனினும் இதுவரை தமிழக கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகவில்லை.

இப்போது புரோ கபடி லீக் மூலம் எனது பயிற்சியாளர் பணிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதில் கிடைத்த வெற்றி எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து ஏராளமான தரமான கபடி வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. வங்கதேச அணிக்கு பயிற்சியளிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லாததால் அதை மறுத்துவிட்டேன். இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

யார் இந்த பாஸ்கரன்?

வீரராக...

• 1993 முதல் 1996 வரையிலான காலங்களில் தேசிய அளவிலான கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்தவர்.

• 1994-ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பாஸ்கரனும் இடம்பெற்றிருந்தார்.

• 1995-ல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கபடி அணியின் கேப்டனாக இருந்தவர்.

பயிற்சியாளராக...

• 2004-ல் பாட்டியாலாவில் உள்ள என்.ஐ.எஸ்.ஸில் பயிற்சியாளருக்கான படிப்பில் டிப்ளமோ முடித்துள்ளார்.

• 2009-ல் இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளுக்கும், தாய்லாந்து தேசிய அணிக்கும் பயிற்சியளித்துள்ளார்.

• 2010-ல் மலேசிய அணிக்கு பயிற்சியளித்திருக்கிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x