Published : 29 May 2019 10:43 AM
Last Updated : 29 May 2019 10:43 AM
மகேந்திர சிங் தோனி, கே.எல்.ராகுலின் அற்புதமான சதத்தால், கார்டிஃப்பில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
கிரீஸில் இருந்து இறங்கி அடிக்கும் சிக்ஸர்கள், ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர் என இதுபோன்று பந்துவீச்சாளர்களுக்கு பீதியை கிளப்பும் தோனியைத்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அந்த தோனி உலகக்கோப்பைப்போட்டிக்கு முன்பாக வெளிப்பட்டுவிட்டார்.
நியூஸிலாந்து அணியுடான முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த ஆட்டத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வங்கதேச அணியை வீழ்த்தி அந்த நாட்டு ரசிகர்கள் நாகினி டான்ஸ் ஆடும் காட்சியை காணாமல் இந்திய ரசிகர்கள் தப்பித்தார்கள்.
இந்த ஆட்டத்தில் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஒருநாள் ஆட்டத்தில் சதம் அடிக்காமல் இருந்த தோனி சதம் அடித்து தனது இழந்த ஃபார்மை மீட்டுள்ளார்.
4-வது இடத்துக்கு எந்த பேட்ஸ்மேனை களமிறக்குவது என யோசித்து வந்தநிலையில், அதற்கு கே.எல். ராகுல் சரியான தேர்வாக அமைந்துவிட்டார்.
3-வதாக, ஐபிஎல் போட்டிகளில் மோசமான பந்துவீச்சால் பாதியிலேயே வாய்ப்பை இழந்த குல்தீப் யாதவ், இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை பெற்றுள்ளார். இதுபோன்ற நல்ல விஷயங்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் நடந்துள்ளது.
அதேசமயம், இங்கிலாந்து போன்ற வேகப்பந்துவீ்ச்சுக்கு சாதமான ஆடுகளங்களில் பும்ரா, ஷமி பந்துகள் எகிறிச்சென்று எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்க வேண்டும். ஆனால், கத்துக்குட்டி வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் அளவுக்கு பும்ரா, ஷமி பந்துவீச்சு நேற்று அமைந்தது.
3 வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து மொத்தம் 14 ஓவர்கள் மட்டும்தான் வீசினர். இதில் புவனேஷ்வர் குமார் மட்டுமே கட்டுப்கோப்பாக வீசினார். பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் இன்னும் ஆக்ரோஷமும், ரன்எடுக்க விடாமல் செய்யும் திறன்மிக்க பந்துவீச்சும் தேவை.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்தது. 360 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 49.3. ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்து 95 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் வீரர்கள் ஷிகர் தவண், ரோஹித் சர்மா இரு பயிற்சி ஆட்டங்களிலும் சொதப்பலாக விளையாடினார்கள். ஐபிஎல் போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்த தவண் ஏன் இப்படி விளையாடுகிறார் எனத் தெரியவில்லை. அதிலும், இங்கிலாந்தில் இதற்கு முன் விளையாடியபோதெல்லாம் தவண் நல்ல ஸ்கோர் செய்துள்ளார்.
வங்கேதச வீரர்கள் மஷ்ரபி மோர்தஸா, முஸ்தபிசுர் ரஹிம், சைபுதீன் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில்தான் பந்துவீசினார்கள்.
முதல் போட்டியிலும் சொதப்பிய தவண் நேற்றும், ஒரு ரன்னிலும், ரோஹித் சர்மா 19 ரன்னிலும் வெளியேறினார். கோலி, ராகுல் சிறிதுநேரம் நிதானமாக பேட் செய்தார்கள். வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பாமல் ஆடிய கோலி 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற பலவீரர்கள் காத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது,தமிழக வீரர் விஜய் சங்கருக்கு கிடைத்த வாய்ப்பை நேற்றும் வீணடித்தார். 2 ரன்னில் பொறுப்பற்றத்தனமாக ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், தோனி இணைந்தார். இருவரும் தொடக்தத்தில் நிதானமாகவும் அதன்பின் தங்கள் அதிரடியை வெளிப்படுத்தினர். தோனி தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை நேற்றைய போட்டியில் வெளிப்படுத்தினார். பந்துகள் சிக்ஸர்களுக்கும்,பவுண்டரிக்கும் பறந்தன.
ராகுல் 45 பந்துகளில் அரைசத்ததையும், தோனி 39 பந்துகளில் அரைசதத்தையும் எட்டினார்கள். அதன்பின் இருவரின் அதிரடியில் ஸ்கோர் வேகமெடுத்தது. 95 பந்துகளில் ராகுல் சதம் அடித்தார். அதன்பின் நிலைக்காத ராகுல் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 164 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா, தோனியுடன் இணைந்தார். ஆனால், தோனியின் அதிரடி தொடர 78 பந்துகளில் சதம் அடித்தார். பாண்டியா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி 7 சிக்ஸர், 8 பவுண்டரிகள் உள்பட 113 ரன்கள் சேர்த்து தோனி ஆட்டமிழந்தார். ஜடேஜா 11, கார்த்திக் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்தது.
வங்கதேசம் தரப்பில் 9 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினார்கள். இதில் ருபெல் ஹூசைன், சஹிப் அல்ஹசன் மட்டும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
360 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார் இருவரும் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக பேட் செய்தார்கள்.
பும்ரா, ஷிமி பந்துகளில் ஒரு சிக்சர் சில பவுண்டரிகளும் விளாசியதால், ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. ஆனால் பும்ரா வீசிய 10-வது ஓவரில் சவுமியா சர்க்கார் (25), சகிப்அல்ஹசன்(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் இணைந்து அணியை மீட்டனர். இருவர் மட்டுமே அணியில் ஓரளவுக்கு ஸ்கோர் செய்தனர் அதன்பின் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
லிட்டன் தாஸ் 73 ரன்னிலும், ரஹிம் 90 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பின்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் பந்துவீச்சுக்கு இலக்காகி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குல்தீப் வீசிய 32 ஓவர் 3-வது பந்தில் லிட்டன் தாஸ்(73), அடுத்தபந்தில் மிதுன் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். இதேபோல குல்தீப் வீசிய 40 ஓவரின் 2-வது பந்தில் முஷ்பிகுர் ரஹ்மான்(90), 3-வது பந்தில்ஹூசைன் (0)அடுத்துடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ், சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT