Published : 06 May 2019 11:03 AM
Last Updated : 06 May 2019 11:03 AM
பும்ரா, ஹர்திக் பாண்டியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அரைசதம் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த 56-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மும்பை இந்திய அணி பிடித்தது. 14 போட்டிகளில் 9 வெற்றிகள், 5 தோல்விகள் என மொத்தம் 18 புள்ளிகளுடன், ரன் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. சிஎஸ்கே அணியும் 18 புள்ளிகளைப் பெற்றபோதிலும் ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தையும், டெல்லி டேர்டெவில்ஸ் 3-வது இடத்தையும் பிடித்தன.
கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேகேஆர் அணி 14 போட்டிகளில் 6 வெற்றிகள், 8 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகள் பெற்று வெளியேறிது. ரன் ரேட் அடிப்படையில் உயர்வாக இருந்த சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
சென்னையில் நாளை...
சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்கும் முதல்தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. நாளை மறுநாள் ஹைதராபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. 134 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு நேற்று பிரமாதமாக இருந்தது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, பும்ரா, மெக்லனஹன் ஆகியோர் சிறப்பாகப் பந்து கொல்கத்தா வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அதிலும் ஹர்திக் பாண்டியா தொடக்கத்திலேயே தனது ஓவர்களில் கில், லின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியில் தள்ளினார். அந்த நெருக்கடியில் இருந்து கடைசிவரை கொல்கத்தா அணி மீளவில்லை.
ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசிய 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். மலிங்கா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.
ரோஹித் சர்மா அரைசதம்
பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மாவின் அரைசதம் முத்தாய்ப்பாகும். தொடக்க வீரர் டீ காக்குடன் சேர்ந்து 49 ரன்கள் பாட்னர்ஷிப், சூர்யகுமார் யாதவுடன் சேர்ந்து 88 ரன்கள் சேர்த்து அணியை பாதுகாப்பான வெற்றிக்கு கொண்டு சென்றார். ரோஹித் சர்மா 48 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டீகாக் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளே ஓவருக்குப் பின் சரிவு
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பவர்ப்ளே ஓவர்கள் வரை கிறிஸ் லின், கில் சிறப்பாகவே தொடக்கம் அளித்தனர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்திருந்தது கொல்கத்தா.
ஆனால், ஹர்திக் பாண்டியாவின் 7 மற்றும் 9-வது ஓவர்களில் கில் 9 ரன்கள், லின் 41 ரன்களில் ஆட்டமிழந்த சரிவுக்குப்பின் கடைசிவரை மீளவில்லை. மலிங்கா வீசிய 14-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 ரன்களும், ரஸல் டக்அவுட்டிலும் வெளியேறியது அணியின் நம்பிக்கையை குலைத்தது. பும்ரா தனது பங்கிற்கு கடைசிஓவரில் உத்தப்பா 40 , ஆர்கே சிங் 4 விக்கெட்டை கழற்றினார். ஒட்டுமொத்தத்தில் கேகேஆர் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்ல விருப்பமின்றியே விளையாடியது போலத் தெரிந்தது.
அணிக்குள் சலசலப்பு?
இந்த சீசன் முழுவதிலுமே அணிக்குள் ஏதோ சலசலப்பு நிலவிவந்தது. தொடர்ந்து 6 தோல்விகள் ஏற்பட்டபின், தனது அதிருப்தியை ரஸல் வெளிப்படுத்தி, அணி நிர்வாகத்தை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தன்னை 3-வது வீரராக களமிறக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு வைத்தபின்னர் ஒருபோட்டியில் மட்டும் 3-வது இடத்தில் களமிறக்கப்பட்டார். பின்னர் வழக்கம் போல் நடந்தது.
அதுமட்டாமல்லாமல், கடந்த லீக் ஆட்டத்தில் அணி வீரர்கள் சரியாக ஒத்துழைக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலாவது டைம்அவுட் நேரத்தில் வீரர்களை அழைத்து கடுமையாகத் திட்டினார். அதில் ரஸல், உத்தப்பா, நரேன் ஆகியோருக்கும், கார்த்திக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம், ஈகோ ஆகியவற்றின் வெளிப்பாடு அனைத்தும் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருக்கும் நேற்றைய போட்டியில் வீரர்கள் வெளிக்காட்டி விட்டனர். தங்களின் ஈகோவுக்கு அணியை பலிகடாவாக்கிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டிதற்கான கடைசிதிறவு கோலாக இருக்கும் இந்த ஆட்டத்தில் எப்படி தங்களை வெளிப்படுத்தி ஆட வேண்டும் என்கிற ஆர்வமில்லாமல் கேகேஆர் வீரர்கள் விளையாடினார்கள். இதை வர்ணனையாளர்கள் பல முறை சுட்டிக்காட்டினார்கள்.
கேகேஆர் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் ஏன் ஏனோதானோ என விளையாடுகிறார்கள், பந்துவீசுகிறார்கள் என்று விமர்சனமும் செய்தனர். அதற்குஏற்றார்போல் வீரர்களின் உடல்மொழியும், பீல்டிங்கும் அமைந்திருந்தது.
மோசமான பந்துவீச்சு
விக்கெட் வீழ்த்துவதிலும், ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் கேகேஆர் பந்துவீச்சாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை நிதர்சனம். ஆன்ட்ரூ ரஸல் 2.1 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார், சுனில் நரேன் 33 ரன்கள் வழங்கினார்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் முனையில் இருந்து கரடியாக கத்திக் கொண்டிருந்தபோதிலும் அதை காதில் வாங்காமல் பல வீரர்கள் இருந்ததைக் காண முடிந்தது.
10ஓவர்கள் டாட் பால்
பேட்டிங்கிலும் கேகேஆர் வீரர்கள் சொல்லிக்கொள்ளும் விதமாக செயல்படவில்லை. அதிலும் குறிப்பாக உத்தப்பா நேற்று பேட்டிங் செய்தவிதம் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. 40 பந்துகளில் 47 ரன்கள் உத்தப்பா சேர்த்தபோதிலும் அவர் ஏராளமான டாட் பால்களை சந்தித்தார். கேகேஆர் பேட்ஸ்மேன்கள் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 60 டாட் பால்கள், அதாவது 10 ஓவர்களை எந்தவிதமான ரன்களும் எடுக்காமல் வீணாக்கியுள்ளனர்.
வீரர்களுக்கு இடையே ஈகோ?
உத்தப்பா ஏதோ பேட்டிங் பயிற்சி எடுப்பது போன்றும், டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்றும் விளையாடியதை பார்க்கும்போது தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பை பழிவாங்கத் திட்டமிட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. வீரர்கள் ஒருவொருக்குருக்குள் இருந்த ஈகோ நேற்று நன்றாக வெளிப்பட்டது.
கடந்த 13 இன்னிங்ஸ்களில் 510 ரன்களை எடுத்திருந்த ரஸல், களத்துக்கு வந்தவுடன் பேட்டிங்கில் ஆவேசத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டும் நிலையில் நேற்று மலிங்காவின் ஓவரில் சந்தித்த முதல்பந்தில் டக்அவுட்டில் வெளியேறினார். பந்துவீச்சிலும் அவர் கட்டுக்கோப்பாக வீசவில்லை. பல்வேறு அழுத்தங்களுடன், நெருக்கடிகளுடன் களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
கேகேஆர் அணிக்குள் பிரச்சினை தொடர்ந்து வருவதை அணியின் துணைப்பயிற்சியாளர் சைமன் கேடிச் போட்டி முடிந்தபின் ஒப்புக்கொண்டார். ஆம், அணிக்குள் ஒருவிதமான டென்ஷன் இருக்கத்தான் செய்தது. அதன்வெளிப்பாடுதான் இந்த தோல்வி என்று சூசமாகத் தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப்புக்கு எதிராக அணியில் சில வீரர்கள் புறப்பட்டுவிட்டார்களா அல்லது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோ காரணமாக என்றுவரும் நாட்களில் வீரர்கள் வாய்திறக்கும் போது தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT