Published : 20 May 2019 05:45 PM
Last Updated : 20 May 2019 05:45 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு இறுதிப்போட்டிகூட உச்ச சுருதி தராது. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி என்றால், ரசிகர்களின் உற்சாகம் ஆர்வம் தனிதான்.
கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். அதிலும் உலகக் கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டால் கேட்கவே வேண்டாம்.
அப்படி ஒருபோட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் மோதியது.
வழக்கம் போல் இந்தியாவிடம் தோற்றது பாகிஸ்தான்.
களத்தில் சிங்கமாக நின்ற சச்சின் டெண்டுல்கர், அணியை கவுரவமான ஸ்கோருக்கு கொண்டு சென்று ஆட்டநாயகன் விருதை பெற்றார். பந்துவீச்சில் பட்டையை கிளப்பிய இந்திய பந்துவீச்சாளர்கள் 5 பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 29 ரன்களில் இந்திய அணி வென்று வரலாற்றை தக்கவைத்தது.
ஒவ்வொரு உலகக்கோப்பை வரும்போது, பாகிஸ்தான் அணியினர் இந்தியாவை வென்றே தீருவோம் என்று சூளுரையுடன் புறப்படுவது வாடிக்கையாகதான்.
ஆனால், நடப்பதோ அனைத்தும் தலைகீழ்.
ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்தியாவுடன் மோதி மூக்குடைந்து செல்கிறது பாகிஸ்தான் அணி.
அது 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியிலும் நடந்தது.
இந்த போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக ஷாகித் அப்ரிடி இருந்தார். அரையிறுதியில் இந்திய அணியுடன் மோதும் போட்டி குறித்து அப்ரிடி சற்றே ஆணவத்துடன்தான் பேசினார் என்பது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.
ஊடகங்களுக்கு அப்போது அப்ரிடி அளித்த பேட்டியில், " உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை கண்டிப்பாக வென்றே தீருவோம். அதற்கான வலிமையான வீரர்கள், ஆபத்தான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வந்து இந்தியாவை தோற்கடிப்பது, அதிலும் பைனலில் இந்தியாவை தோற்கடிப்பதுதான் எங்கள் இலக்கு. ஆனால், அரையிறுதியில் இந்தியாவை சந்திக்க வேண்டியதாயிற்று" என்று பேசினார்.
ஆனால், ஒரு விஷயத்தை எப்போதும் நினைத்துக் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் அணியுடன் விளையாடும்போது மட்டும் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாகம், உத்வேகம், ஆக்ரோஷம் எங்கிருந்து கிளம்பி விடுகிறது என்பது மட்டும் தெரியவில்லை. பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் இந்திய வீரர்கள் பட்டையை கிளப்பிவிடுகிறார்கள்.
இதுவரை எந்த உலகக்கோப்பைப் போட்டியிலும் இந்திய அணியை பாகிஸ்தான் இதுவரை வென்றதில்லை என்ற வரலாறு இன்னமும் தொடர்கிறது.
2011ம் ஆண்டு மார்ச்30ம் தேதி சண்டிகரில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டது பாகிஸ்தான் அணி. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.
சேவாக், சச்சின் ஆட்டத்தைத் தொடங்கினர். சச்சின் தனது பேட்டிங்கில் ஆவேசத்தை காட்டவில்லை என்றபோதிலும், சேவாக் பேட்டிங்கில் அனல் பறந்தது. பாகிஸ்தான் வீரர் உமர் குல், வஹாப் ரியாஸ் ஆகியோர் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசினார். 38 ரன்களில் சேவாக் ஆட்டமிழந்தபோதிலும், அதில் 9 பவுண்டரிகள் அடித்திருந்தார்.
இந்த ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒருவரைத் தவிர மற்ற இந்திய வீரர்கள் நிலைத்து விளையாடி ரன்களைச் சேர்க்கவில்லை என்பது பெரும் குறை. கம்பீர் 27, விராட் கோலி 9, யுவராஜ் சிங் டக்அவுட், தோனி 25 ரன்கள் என ஏமாற்றம் அளித்தனர்.
அதிலும், வஹாப் ரியாஸ் தான் வீசிய 26-வது ஓவரில் யுவராஜ் சிங், கோலியின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
அணியின் சூழலை உணர்ந்த சச்சின் மிகவும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். அன்றைய தினம் சச்சினும் ஆட்டமிழந்திருந்தால் இந்திய அணி மோசமான நிலையை எட்டி இருக்கும்.
இந்த போட்டியில் சச்சின் 23 ரன்கள் சேர்த்திருந்தபோது எல்பிடபில்யு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், சச்சின் டிஆர்எஸ் முறையில் தப்பித்தார். அதன்பின் சச்சினுக்கு 4 முறை கேட்சை பாகிஸ்தான் தவறவிட்டனர். சச்சின் 27, 40, 70, 81 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்சுகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டு வாய்ப்பை வழங்கினர்.
67 பந்துகளில் அரைசதம் அடித்த சச்சின் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். ரெய்னா 36 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 5 விக்கெட்டுகளையும், சயித் அஜ்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
261 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் சேஸிங் செய்யக்கூடிய இலக்குடன்தான் பாகிஸ்தான் களமிறங்கியது. கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். 44 ரன்கள் விக்கெட் இழக்காமல் ஆடிய பாகிஸ்தான் அணி ஜாகீர்கான் ஓவரில் அக்மல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிதுநேரத்தில் முகமது ஹபீஸ் 47 ரன்களில் முனாப் படேல் பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார்.
மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன் எனச் சொல்லப்படும் யூனிஸ் கானை 13 ரன்களில் யுவராஜ் சிங் வெளியேற்றி மிகப்பெரிய ஆறுதல் அளித்தார்.
ஆனால், மிஸ்பா உல்ஹக், உமர் அக்மல், ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக் ஆகிய 4பேரும் ஆட்டத்தை எந்தநேரத்திலும் திசைதிருப்பக் கூடியவர்கள் என்பதால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர். இவர்களை வீழ்த்தினால்தான் இந்திய அணியின் வெற்றி உறுதியாகும் என்ற நிலை இருந்தது.
இந்த 4 பேரில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்பஜன் சிங் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்.
மிஸ்பா உல்ஹக்கும், உமர் அக்மலும் களத்தில் நங்கூரமிட்டு நின்று அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். மிஸ்பா அரைசதம் அடித்தார். ஆனால், 29 ரன்கள் சேர்த்திருந்தபோது உமர் அக்மலை போல்டாக்கி ஹர்பஜன் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அடுத்த சிறிது நேரத்தில் அப்துல் ரசாக்கை 3 ரன்னில் முனாப் படேல் போல்டாக்கினார். அப்ரிடி வந்தவுடன் பவுண்டரி அடித்து அதிரிடியாகத் தொடங்கி 19 ரன்னில் ஹர்பஜனிடம் வீழ்ந்தார். இந்த 3 விக்கெட் வெளியேறியதும் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
அடுத்ததாக வஹாப் ரியாஸ், உமர் குல் விக்கெட்டுகளை நெஹ்ரா வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால், மிஸ்பா உல்ஹக் சளைக்காமல் பேட் செய்தது இந்திய வீரர்களுக்கு பதற்றத்தை அதிகரித்தது.
ஆனால், ஜாகீர்கான் வீசிய கடைசி ஓவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 56 ரன்னில் ஆட்டமிழந்தவுடன் இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
49.5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்து 29 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தியத் தரப்பில் ஜாகீர்கான், நெஹ்ரா, ஹர்பஜன், யுவராஜ்சிங், முனாப் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT