Last Updated : 23 Apr, 2019 10:42 AM

 

Published : 23 Apr 2019 10:42 AM
Last Updated : 23 Apr 2019 10:42 AM

திருப்புமுனையான ரிஷப் பந்த் சிக்ஸர்: 7 ஆண்டுக்கு பின் ரஹானே அடித்த சதம் வீண்: முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

தவண், ரிஷப் பந்தின் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல்டி20 போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து டெல்லி கேபிடல்ஸ் அணி.

இதன் மூலம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 7 வெற்றிகள், 4 தோல்விகள் என மொத்தம் 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் டெல்லி அணி பட்டியலில் இத்தகைய உயர்வைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 14 புள்ளிகள் பெற்றிருந்தபோதிலும் ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 7 தோல்விகளுடன் 6புள்ளிகளுடன் உள்ளது. இனி அடுத்துவரும் 4 போட்டிகளையும் வென்றாலும் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஏற்குகறைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஐபிஎல் பயணம் முடிவுக்கு வருகிறது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. 192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்து 4 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரிஷப் பந்த் ஹீரோ

டெல்லி அணிக்கு கடந்த போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் என்றால் இந்தப் போட்டிக்கு ரிஷப் பந்த். 25 வயதுக்குள்ளான அதிகமான வீரர்களைக் கொண்ட இந்த அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகிறது. ஷிகர் தவண் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை நன்குபயன்படுத்திக் கொண்ட ரிஷப் பந்த் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் அதன்பின் நிதானமாகவும், நேர்த்தியான ஷாட்களையும் ஆடி 36 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

வழக்கமாக விரைவாக ஆட்டமிழந்து வெளியேறிவிடும் பிரித்வி ஷா, இந்த முறை ரிஷப் பந்துக்கு துணையாக இந்த போட்டியில் விளையாடியது சிறப்பு. இருவரும் சேர்ந்து 84 ரன்கள் சேர்த்தனர்.

திருப்பத்தை ஏற்படுத்திய சிக்ஸர்

கடைசி 12 பந்துகளில் டெல்லி அணி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஆர்ச்சர் கட்டுக்கோப்பாக வீசினார். 5 பந்துகளை நன்றாக வீசிய ஆர்ச்சர், கடைசிப் பந்தில் கோட்டைவிட்டார். இந்த பந்தில் ரிஷப் பந்த் அடித்த சிக்ஸரால்தான் ஆட்டம் ராஜஸ்தானிடம் இருந்து கைவிட்டுப் போனது திருப்புமுனையாகவும் அமைந்தது.

கடைசி ஓவரை பந்துவீசத் தெரியாத உனத்கட் வீசும்போதே வெற்றி டெல்லியின் பக்கம் சென்றுவிட்டது என்பதை உணர முடிந்தது. ஆக ஆட்டத்தின் திருப்புமுனை என்பது ஆர்ச்சர் வீசிய கடைசிப்பந்தும், ரிஷப்பந்த் அடித்த சிக்ஸரும்தான்.

கேப்டன் சுமை

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை ரஹானேவிடம் இதுவரை  காணாத விளாசலை நேற்றையஆட்டத்தில் காணமுடிந்தது. கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த ரஹானே, 7 ஆண்டுகளுக்குப்பின் நேற்று சதம் அடித்தார். ஆனால், ரஹானே அடித்தசதம், ரிஷப்பந்தின் அதிரடியில் பயணில்லாமல் போனது.

ஸ்மித், ரஹானே களத்தில் இருந்தவரை ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாகச் சென்றது, இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் கூட்டணி அமைத்தனர், ஸ்மித் நிலைத்திருந்தால், நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும். ஆனால் ஸ்மித் ஆட்டமிழந்தபின் ரஹானேவின் ஆட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது, அடுத்து வந்த வீரர்களும் ஒத்துழைக்காததால், 200 ரன்களைக் கூட எட்டமுடியவில்லை.

தவண் அதிரடி

192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினார். பிரித்வி ஷா பொறுமைகாட்ட, தவண் அதிரடியில் இறங்கினார். குல்கர்னி வீசிய 2-வது ஓவரில் சிக்ஸர்,பவுண்டரி, ஸ்ரோயாஸ் கோபால் வீசிய 4-வது ஓவரில் ஒருசிக்ஸர், 2 பவுண்டரிகள் என அடித்து தூள்பறத்தினார் தவண்.

6-வது ஓவரை மீண்டும் குல்கர்னி வீச தவண் இரு பவுண்டரிகளும், பிரித்வி ஷா சிக்ஸரும் விளாசினார்கள். பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக பேட் செய்த தவண் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கோபால் வீசிய 8-வது ஓவரில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து 54 ரன்களி்ல தவண் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர் நிலைக்கவில்லை. பராக் வீசிய 9-வது ஓவரில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அய்யர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இளைஞர்கள் கூட்டணி

3-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் இணைந்தார். இரு இளம் பேட்ஸ்மேன்களும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரிஷப்பந்த் களமிறங்கியபோது 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது டெல்லி அணி. 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 81 ரன்கள் சேர்த்தது.  அடுத்த 60 பந்துகளில் 111 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

ரிஷப் பந்த் அதன்பின் அதிரடிக்கு மாறினார். ஒவருக்கு 10 ரன்கள் வீதம் இருவரும் சேர்க்கத் தொடங்கினர். ஒவருக்கு இரு பவுண்டரி, அல்லது பவுண்டரி, சிக்ஸர் என 10 ரன்களை திட்டமிட்டு இருவரும் சேர்த்தனர். இவர்களை பிரிக்கவும் முடியாமல், எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரியாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினார். அதிரடியாக ஆடிய ரிஷப்பந்த் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 17-வது ஓவரில் பராக்கிடம் கேட்ச் கொடுத்து 42 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் ஒருசிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். அடுத்துவந்த ரூதர்போர்ட் சிக்ஸர், பவுண்டரி அடித்த நிலையில், 11 ரன்னில் குல்கர்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி இரு ஓவர்கள்

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. கடைசிநேர பதற்றத்தை சமாளிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

ரிஷப்பந்த், இங்ராம் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். முதல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் ஆர்ச்சர். கடைசிப்பந்தை லென்தில் வீசியபோதிலும் அதை ரிஷப் பந்த் அருமையான சிக்ஸராக மாற்றி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் அல்வா மாதிரி வீசிய பந்தை எளிதாக சிக்ஸருக்கு திருப்பி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார் ரிஷப் பந்த்.

ரிஷப்பந்த் 36 பந்துகளில் 78 ரன்களுடனும்(4சிக்ஸர், 6பவுண்டரி), இங்ராம் 3 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணித் தரப்பில் கோபால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரஹானே சதம்

முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்தது. சாம்ஸன், ரஹானே ஆட்டத் தொடங்கினார்கள். 2-வது ஓவரிலையே சாம்ஸன் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து கேப்டன் ஸ்மித் களமிறங்கினார்.

அக்ஸர்படேல் வீசிய 5-வது ஓவரில் ரஹானேவுக்கு கேட்சை இசாந்த் சர்மா தவறவிட்டார். கேட்சை தவறவிட்டதற்கு விலையாக ரஹானே சதம் அடித்தார். ஸ்மித், ரஹானே இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்களும், 10 ஓவர்களில் 95 ரன்களும் சேர்த்தனர்.

வழக்கத்துக்கு மாறாக ரஹானேயின் ஆட்டத்தில் அனல் பறந்தது, சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்துகளை பறக்கவிட்டார். 32 பந்துகளில் ரஹானே அரைசத்ததையும், ஸ்மித் 31 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.

ஸ்மித் 50 ரன்களில் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வந்த ஸ்டோக்ஸ் 8, டர்னர் டக்அவுட், பின்னி 19 என நிலைக்காமல் வெளியேறினார். விக்கெட்டுகள் சரிந்தாலும்  நிதானமாக ஆடியி ரஹானே 58 பந்துகளில் சதம் அடித்து 104 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரில் பின்னி, பராக் தேவையில்லாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. டெல்லி தரப்பி்ல் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x