Published : 06 Apr 2019 02:28 PM
Last Updated : 06 Apr 2019 02:28 PM
இந்திய கிரிக்கெட் அணியில் சிறிது காலம் இடது கை பேட்ஸ்மேனாக இருந்தவர் ஹேமங் பதானி. தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். மேலும், சமீபத்திய ஐபிஎல் போட்டிகள் குறித்த கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் இவருடைய ஐபிஎல் கருத்துகளுக்கு பலர் பாராட்டியும், எதிர்த்தும் கருத்து தெரிவித்து வந்தார்கள். அப்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வியை தவிர்த்து, மற்றொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஹேமங் பதானி.
தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காத ஹேமங் பதானியை, “பிராமணர்களின் கேள்விக்கு மட்டுமே ரிப்ளை செய்வீர்களா?. ஏன் நீங்கள் 40 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளீர்கள் என்று தெரிகிறது. எப்போதுமே யுவராஜ்சிங்கை நல்ல ஃபார்மில் இல்லை என்றே விமர்சித்து வருகிறீர்கள். 18 ஆண்டுகளுக்கு முன்பு தான் நீங்கள் ஃபார்மில் இருந்தீர்கள் தெரியுமா” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ஹேமங் பதானி பதிலளிக்காமல் மற்றொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து, “பிராமினாக இருந்ததாலே மட்டுமே சச்சின் கூட இந்தியாவுக்கு ஒப்பனிங் ஆடின உனக்கே இவ்வளவு திமிர் என்றால், உலக கோப்பையில் சிறந்த வீரர் விருதுக்கு ஜெயித்தும் கேன்சர் வந்த ஒரே காரணத்துக்காக உன்னை மாதிரி ஆளெல்லாம் ஜட்ஜ் பண்ற அளவுக்கு ஆயிட்டாரு யுவிராஜ் சிங். உங்களுடைய கூற்று தவறு என்று யுவராஜ் நிரூபிப்பார்” என்று அந்த ரசிகர் மீண்டும் சாடினார்.
இவ்விரண்டு ட்வீட்டையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹேமங் பதானி கூறியிருப்பதாவது:
சில காலம் கிரிக்கெட் ஆடியவனாக எனக்கென சில கருத்து இருக்கும். ஒரு ரசிகராக உங்களுக்கும் இருக்கும். நான் எப்போதுமே ஆரோக்கியமான விவாதத்துக்கு தயார். ஆனால் இந்த சாதி ரீதியான பார்வை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீங்கள் நலம் பெறுவீர்கள் என நம்பிக்கையுடன் பிரார்த்திக்க மட்டுமே என்னால் முடியும்
இவ்வாறு ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT