Published : 27 Sep 2014 11:24 AM
Last Updated : 27 Sep 2014 11:24 AM
தென்னாப்பிரிக்க அணி வீரர்களுடன் ஒப்பிடுகையில் கிரிக்கெட் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கீழே விழுந்து பந்தை தடுக்க யோசிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.
கோவை ஜி.ஆர்.டி. அறிவியல் கல்லூரியில் ஜான்டி ரோட்ஸுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்டி ரோட்ஸிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதில் அளித்து ஜான்டி ரோட்ஸ் பேசியதாவது:
இந்திய அணியில் தற்போது சிறந்த ஃபீல்டர் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
தற்போதைய இந்திய அணியில் நான் பார்த்த வகையில் சிறந்த ஃபீல்டர்கள் என்றால் சுரேஷ் ரெய்னாவை சொல்வேன். சுரேஷ் ரெய்னாவிடம் எப்போதும் ஒரு துடிதுடிப்பு, ஆர்வம் உள்ளது. பந்து அவர் நிற்கும் திசையில் வரும் போது வேகமாகச் செயல்பட்டு தடுக்கும் வீதம் மற்ற வீரர்களைக் காட்டிலும் அதிவேகமானது. சுரேஷ் ரெய்னாவை பார்க்கும் போது என்னைப் பார்ப்பது போன்று உள்ளது.
சச்சின் குறித்து உங்களுடைய கருத்து?
சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கடவுள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரது ஓய்வால் தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் பந்து வீச்சாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அவருக்கு பந்து வீசுவது என்றால் பந்துவீச்சாளர்கள் படபடப்பு அடைவார்கள்.
தென்னாப்பிரிக்கா வீரர்கள் - இந்திய வீரர்கள் பற்றி என்ன உங்களுடைய கருத்து?
மும்பை அணிக்கு ஃபீல்டிங் பயிற்சி வழங்கி வருகிறேன். தற்போது, என்னை இந்திய ரப்பர்மேன் என அழைக்கிறார்கள். என்னைப் போன்று இங்குள்ளவர்கள் வர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் பார்த்த விதத்தில், பந்தை தடுப்பதற்காக தென்னப்பிரிக்கா வீரர்கள் தைரியமாக குதித்துவிடுகின்றனர்.
ஆனால், இந்திய வீரர்கள் பந்தை தடுக்கும் போது குதிக்கும் தைரியம் குறைவாகத்தான் இருக்கிறது. நான் மேற்கொண்ட ஆய்வில், தென்னாப்பிரிக்காவில் புல் தரையுடன் நிறைய நல்ல மைதானங்கள் உள்ளன. இளமையிலேயே கிரிக்கெட் விளையாட்டுக்கு வரும் வீரர்கள், பந்தை தாவி பிடிப்பதில் பழக்கமடைந்து கொள்கின்றனர்.
ஆனால், இந்தியாவை பொறுத்தவரை புல் தரையுடன் கூடிய நல்ல மைதானங்கள் குறைவாக இருக்கின்றன. சிறு வயதில் இருந்தே பயிற்சிக்கு சரியான மைதானம் கிடைக்காததால் கீழே விழுந்து பிடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தது தெரிகிறது. அந்த பழக்கம் தற்போது வரை நீடிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். எனவே, இந்தியாவில் நல்ல மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
உங்களுடைய வெற்றிக்கு காரணம் என்ன?
பயிற்சிதான் சிறந்த வீரரை உருவாக்கும் என்பதைக் காட்டிலும் சரியான பயிற்சிதான் சிறந்த வீரனை உருவாக்கும் என்பது என்னுடைய கருத்து. பந்து நம்மைத் தாண்டி கடக்கும்போது பந்தை தடுத்து இருக்க முடியாததை நாம் மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும். நிறைய வீரர்கள் பந்து வரும்போது பிடிக்கமுடியுமா என நினைத்து முயற்சி கூட எடுப்பதில்லை.
முதலில் முயற்சி எடுக்க வேண்டும். தோல்வியடைந்தாலும் பரவாயில்லை முயற்சி எடுக்க வேண்டும். தோல்வியை குதூகலமாக எடுத்துக் கொண்டு மறுமுறை அதனைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை ஒரு ரன் என்றாலும் அதனை எடுக்க விடாமல் தடுக்க வேண்டும். ஆனால், நிறைய வீரர்கள் ஒரு ரன்தானே, 2-வது ரன் எடுக்கவிடாமல் தடுக்கலாம் என நினைத்து பந்தை விடுகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT