Published : 02 Sep 2014 03:34 PM
Last Updated : 02 Sep 2014 03:34 PM
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியப் பந்து வீச்சை மீண்டும் சமாளிக்கத் திராணியற்று இங்கிலாந்து 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டாஸ் வென்று மிகவும் சரியாகப் பிட்சைக் கணித்த தோனி இங்கிலாந்தை முதலில் களமிறக்கினார். அதற்கான பலனை புவனேஷ் குமார் உடனே அளித்தார்.
அவர் அபாய வீரர் ஹேல்சை இன்ஸ்விங்கரில் பவுல்டு செய்து அதே ஓவரில் குக் விக்கெட்டையும் வீழ்த்தி அபாரத் தொடக்கம் கொடுத்தார். பிறகு கேரி பாலன்ஸ விக்கெட்டை 7 ரன்களில் மொகமது ஷமி வீழ்த்தினார். இங்கிலாந்து 23/3 என்று ஆனது.
ரூட் மற்றும் இயான் மோர்கன் 4வது விக்கெட்டுக்காக 80 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அது மந்தமாக சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அடித்து ஆடியிருக்க வேண்டும். ஆனால் ஸ்கோர் 103-ஐ எட்டியபோது மோர்கன் 32 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்தை லெக் கல்லியில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்தார்.
81 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த ஜோ ரூட், ரெய்னாவை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பந்து டாப் எட்ஜ் எடுக்க தேர்ட்மேன் திசையில் குல்கர்னியிடம் கேட்ச் ஆனது.
மொயீன் அலி களமிறங்கி மிகவும் அசத்தலாக ஆடினார் அவர் 3 பவுண்டரி 2 சிக்சர்களை அடித்து 43 ரன்களை எடுக்க அவரும் பட்லரும் இணைந்து 50 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 164 ரன்களுக்கு உயர்த்திய போது ஷமி பந்தில் பட்லர் எல்.பி.ஆனார். ஆனால் அது நாட் அவுட்டாக இருக்கலாம் என்று ரீப்ளேயில் தெரிந்தது.
பிறகு மொயீன் அலி மேலும் மேலும் 20 ரன்கள் சேர்க்க கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களை எடுக்க ஸ்கோர் 194 ரன்களை எட்டியபோது வோக்ஸ் ரெய்னாவின் நேரடியான த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். அபார ஃபீல்டிங்.
பிறகு 50 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்த மொயீன் அலி 67 ரன்களில் அஸ்வின் பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.
ஸ்டீவ் ஃபின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த கடைசியாக குர்னியை, ஷமி வீழ்த்தினார். ஆண்டர்சன் 1 ரன் நாட் அவுட்.
இந்திய அணியில் குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷமி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT