Last Updated : 18 Apr, 2019 07:29 AM

 

Published : 18 Apr 2019 07:29 AM
Last Updated : 18 Apr 2019 07:29 AM

தோனி இல்லாத சிஎஸ்கே ஜீரோ: பேட்டிங்,பந்துவீச்சு, கேப்டன்ஷிப் வியூகம் சொதப்பல்: சன்ரைசர்ஸ்க்கு வெற்றியை எளிதாக்கிய வார்னர், ரஷித் கான்

வார்னரின் அதிரடி ஆட்டம், ரஷித் கானின் கட்டுக்கோப்பான பந்துவீ்ச்சு, தோனி இல்லாத சூழல் ஆகியவற்றால் ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இதன் மூலம் சிஎஸ்கே அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளது சன்ரைசர்ஸ். 9 போட்டிகளில் 2 தோல்வி, 7 வெற்றி உள்பட 14 புள்ளிகளுடன் தற்போது சிஎஸ்கே உள்ளது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்த நிலையில் இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது. 8 போட்டிகளில் இதுவரை விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 4 வெற்றிகள், 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 13 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக பேட் ெசய்து அரைசதம் அடித்த வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோனி இருக்கும் போதே சிஎஸ்கே போட்டிகள் மகா அறுவையாக உள்ளதைத்தான் பார்த்து வருகிறோம். இந்நிலையில் அவரும் இல்லையென்றால் ஆட்டம் எப்படி இருக்கும்? படு அறுவையான ஆட்டமாக அமைந்தது. ஐபிஎல் கிரிக்கெட்டே உள்ளூர் திறமைகளை வாய்ப்பளித்து வளர்க்கும் கிரிக்கெட் அல்ல, இது ஒரு முழுக்க முழுக்க கார்ப்பரேட் கிரிக்கெட், இதில் தனிநபர் வழிபாட்டு மனோபாவம் கார்ப்பரேட் லாபங்களுக்காக கிரிக்கெட் என்ற பெயரில் வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. இதில் குறைந்தது ரசிகர்களுக்குக் கிடைப்பது சிக்சர், பவுண்டரி, பவுல்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகள்தான் ஆனால் அதுவே இல்லாத ஒரு ஆட்டமாக சிஎஸ்கே போட்டிகள் உட்பட ஐபிஎல் போட்டிகள் உள்ளன.

9 ஆண்டுகளில் முதல்முறை

கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 23-ம்தேதிக்குப்பின் ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப்பின் சிஎஸ்கே அணியில் இருந்து கொண்டு, தோனி முதுகுவலியால் விளையாடாமல் இருந்தது இதுதான் முதல்முறையாகும். ஏறக்குறைய 121 ஐபிஎல் போட்டிகளை சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து தோனி விளையாடி வழிநடத்தியுள்ளார். தோனி இல்லாத நிலையில் சுரேஷ் ரெய்னா நேற்று கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

தோனிதான் எல்லாமே

“தோனிதான் சிஎஸ்கே, சிஎஸ்கேதான் தோனி” என்ற வார்த்தைதான் பொருத்தமாக இருக்கும். தோனி இல்லாத வெற்றிடம் சிஎஸ்கே அணியின் பேட்டிங், கேப்டன்ஷிப், பந்துவீச்சு என அனைத்திலும் நேற்று எதிரொலித்தது. தோனி இல்லாத சிஎஸ்கே அணி “தோணி” இல்லாத தத்தளிப்பு நிலைதான். வெற்றி எனும் கரைசேர்வது மிகவும் கடினமாகத்தான் இருக்கும்.

மிகக்குறைவான ரன்களைச் சேர்த்திருந்தால்கூட தனது மதிநுட்பமான கேப்டன்ஷிப்பால் எதிரணிக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி ஆட்டம் சுவாரஸ்யமில்லாமல் மந்தமாக அமைந்தாலும்  வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடிய வலிமைபடைத்தவர் தோனி.

கேப்டன்ஷிப் மோசம்

ஆனால், நேற்று ரெய்னாவின் கேப்டன்ஷிப் மிகவும் மோசம். எந்தநேரத்தில் யாரை பந்துவீசச் செய்வது எனத் தெரியாமல் தடுமாறினார். தவறான முடிவுகளுக்கு ஏற்ற தண்டனையையும் தொடக்கத்திலேயே வார்னரிடம் பெற்றார் ரெய்னா

குறிப்பாக பேட்டிங்கில் முதல் 10 ஓவர்களில் 80 ரன்களைச் சேர்ந்த சிஎஸ்கே அணி. அடுத்த 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது மிகவும்பரிதாபம். தோனி இருந்திருந்தால், நிச்சயம் இந்த விக்கெட் சரிவைத் தடுத்திருப்பார். அதுமட்டுமல்லாமல், முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே அணி, கடைசி 10 ஓவர்களில் 52 ரன்கள் மட்டுமே ஆமை வேகத்தில் சேர்த்ததை என்னவென்று சொல்வது.

ஜடேஜா, ராயுடு வீண்

இந்த ஸ்கோர் குறைவுக்கு ஜடேஜா, ராயுடு இருவரைத்தான் குற்றவாளியாக்க முடியும். இன்னும் கூடுதலாக 30 ரன்களைச் சேர்த்திருக்கலாம். டி20 போட்டியில் கடைசி 5 ஓவர்கள் ரன்களைச் சேர்க்க முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஓவர்களில் இருவரும் சேர்ந்து, 30 ரன்களை மட்டுமே சேர்த்து வீணடித்துவிட்டனர்.

ரவிந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு நேற்று 5ஓவர்கள் வரை களத்தில் இருந்தும் எந்த பயனும் இல்லை. டெஸ்ட் போட்டி விளையாடுவதுபோன்று ஜடேஜா 20 பந்துகளை வீணாக்கி 10 ரன்களைத்தான் சேர்த்தார், ராயுடு 21 பந்துகளில் 25 ரன்கள் என கடைசி 5ஓவர்களையும் வீணடித்துவிட்டனர்.

உலகக்கோப்பைக்கான அணியில் ரவிந்திர ஜடேஜாவை தேர்வு செய்த பிசிசிஐ நிர்வாகம் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து வேறு இளம் வீரருக்கு வாயப்பளிக்கலாம். ஆல்-ரவுண்டர் தேவை என்ற வாதத்தை முன்வைத்து இதுபோன்ற “எக்ஸ்ட்ரா லக்கேஜ்” அணிக்கு தேவையா என்பதை சிந்திக்க வேண்டும்.

உலகக்கோப்பைப் போட்டியில் தன்னைத் தேர்வு செய்யாத விரக்தியில் ஆடினாரா ராயுடு எனத் தெரியவில்லை. பந்துகளை சரியாகத் கணிக்க முடியாமல், ஷாட்களை கூர்மையாக அடிக்காமல் பலநேரங்களில் கோட்டை விட்டார். அதிலும் ரவிந்திர ஜடேஜாவுக்கு ரஷித்கானும், புவனேஷ்வர் குமாரும், சந்தீப் சர்மாவும் நிற்கவைத்து படம் காட்டினார்கள்.

கவலை

இதுதவிர கேதார் ஜாதவ் இந்த ஐபிஎல் தொடரி்ல் தொடர்ந்து 9 போட்டிகளில் இடம் பெற்ற நிலையிலும் ஒருபோட்டியில் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை. இவரும் உலகக்கோப்பைக்கான அணியில் நிலையான இடம் பிடித்துள்ளார்.

அதேபோல வாட்ஸனும் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார், இந்த சீசனில் ஒருபோட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை.

தோனி இல்லாவிட்டால்…

இதுவரை சிஎஸ்கே வென்ற அனைத்து போட்டிகளிலும், பெரும்பாலும் சேஸிங் செய்தவற்றில் தோனியின் துணையோடுதான் வெற்றி கிைடத்துள்ளதேத்தவிர அணியில் உள்ள மற்ற வீரர்கள் சுயமாக பங்களிப்பு செய்யவில்லை. இதில் ரெய்னா மட்டும் ஒருபோட்டியில் நிலைத்து ஆடியுள்ளார். மற்ற போட்டிகளில் தோனிதான் கடைசிவரை நின்று அடித்துக்கொடுத்துள்ளார்.

ஆகவே, தோனி இல்லாத சிஎஸ்கே அணி என்பது வலிமை இல்லாத சாதாரண அணி என்பதில் சந்தேகமில்லை. தோனி அணியில் இல்லாத சூழலில் வீரர்கள் தன்னம்பிக்கை, ஊக்கம் இல்லாத நிலையிலேயே விளையாடி தோல்வி அடைந்தனர்.

தொடக்கத்திலேயே தாஹிர், ஜடேஜா, கரண் சர்மா மூன்று சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு வாய்பளித்து சன்ரைசர்ஸ் அணியை ரெய்னா கட்டுப்படுத்தி இருக்கலாம். அதைவிட்டு சாஹர், தாக்கூரை பந்துவீசச் செய்து, வார்னர் அதை வெளுத்து வாங்கிவி்ட்டார்.

வார்னர், பேர்ஸ்டோ

அதேபோல சன்ரைசர்ஸ் அணியில் நேற்று வார்னரையும், பேர்ஸ்டோவையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறி இருக்கும். வார்னர் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்த வந்த கேப்டன் வில்லியம்ஸன், விஜய்சங்கர், ஹூடா பயன்படுத்தாமல் விரைவாக ஆட்டமிழந்து நிலைத்தன்மை இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பேட்டிங்கில் சன்ரைசர்ஸ் அணி பெரியஅளவுக்கு வலிமையாக இல்லை. வார்னர், பேர்ஸ்டோ இரு வீரர்களை நம்பித்தான் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

வார்னர் அதிரடி

133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிதான இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வார்னர், பேர்ஸ்டோ வழக்கம் போல் அதிரடியாக தொடங்கினார். இதில் பேரஸ்டோ பொறுமைகாட்ட, வார்னர் வெளுத்துகட்டினார். தாக்கூர், சாஹர் பந்துவீச்சில் பவுண்டரிகளை வார்னர் விளாசியதால், 4 ஓவர்கள் முடிவில் 44 ரன்களை எட்டியது சன்ரைசர்ஸ்.

ரன்வேகத்தை கட்டுப்படுத்த இம்ரான் தாஹிர் அழைக்கப்பட்டு 5-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் வார்னர் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி தாஹிரின் நம்பிக்கையை உடைத்தார். சாஹர் வீசிய 6-வது ஓவரில் இருபவுண்டரிகள் அடித்து 24 பந்துகளில் அரைசதத்தை வார்னர் நிறைவு செய்தார். 4-வது பந்தில் மிட்-ஆப்ஃபில் டூப்பிளசியிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 50 ரன்னில்(10பவுண்டரி) ஆட்டமிழந்தார்.முதல் வி்க்கெட்டுக்கு இருவரும் 66 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்து சன்ரைசர்ஸ் அணி.

விக்கெட் சரிவு

அடுத்து வில்லியம்ஸன் வந்து, பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். தாஹிர் வீசிய 7-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வில்லிம்ஸன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய வில்லியம்ஸன், இந்த சீசனில் மோசமாக ஆடி வருகிறார். அடுத்து வந்த விஜய் சங்கரும் சொல்லிக்கும் கொள்ளும் விதத்தில் பேட் செய்யவில்லை. கரன் சர்மா வீசிய 11-வது ஓவரில் 2 சிக்ஸர்களை பேர்ஸ்டோ  விளாசியதால் 10ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 85 ரன்கள் சேர்த்து.

தாஹிர் வீசிய 12-வது ஓவரில் பில்லிங்ஸிடம் கேட்ச்கொடுத்து 7 ரன்னில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார்.  உலகக்கோப்பைப் போட்டிக்கு தேர்வாகிய பின்பாவது பொறுப்பான ஆட்டத்தை இந்த 3-டி விஜய் சங்கர் வெளிப்படுத்த வேண்டாமா?

பேர்ஸ்டோ அரைசதம்

அடுத்து தீபக் ஹூடா களமிறங்கி, பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். நிதானமாக பேட் செய்த பேர்ஸ்டோ 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். பொறுமை காத்த ஹூடா கரன் சர்மா வீசிய 17-வது ஓவரில் டூப்பிளஸிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்னில் வெளிேயறினார். அடுத்து யூசுப்பதான் வந்தார். ஆனால், அவருக்கு வேலை வைக்காமல், பேர்ஸ்டோ பிரமாதமான சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

பேர்ஸ்டோ 61 ரன்னிலும், பதான் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி. சிஎஸ்கே தரப்பில் தாஹிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நல்லஅடித்தளம்

முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் ரெய்னா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். வாட்ஸன், டூப்பிளசிஸ் களமிறங்கி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி, 10 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்துக்கொடுத்தனர். பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் சேர்த்தது.

நதீம் வீசிய 10-வது ஓவரில் 31 ரன்களில் வார்னல் போல்டாகி ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்து வந்த வீரர்கள் பயன்படுத்த தவறினர். கடைசி 10 ஓவர்களை சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் கையில் எடுத்துக்கொண்டனர்.

விஜய் சங்கர் வீசிய 11-வது ஓவரில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் ஆட்டமிழந்தார் டூப்பிளஸிஸ். ராயுடு, ரெய்னா ஜோடி குறைந்தநேரமே களத்தில் இருந்தனர்.

21 ரன்னுக்கு 4 விக்கெட்

ரஷித் கான் வீசிய 14-வது ஓவரில் ரெய்னா 13ரன்னிலும், அதே ஓவரில் அடுத்து வந்த ேகதார் ஜாதவும் எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்து சிக்கலை ஏற்படுத்தினர். 80 ரன்கள்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த சிஎஸ்கே அடுத்த 19 ரன்களைச் சேர்ப்பதற்குள் மேலும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தோனிக்கு பதிலாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பில்லிங்ஸ் சோபிக்கவில்லை. கலீல் அகமது வீசிய 15-வது ஓவரில் சங்கரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார்.

ஜடேஜா, ராயுடு ஜோடி கடைசிவரை பேட் செய்து பந்துகளை வீணாக்கினார்கள். 5 ஓவர்களில் 30 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 10 ரன்களிலும், ராயுடு 25 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள், 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x