Published : 17 Apr 2019 10:27 AM
Last Updated : 17 Apr 2019 10:27 AM
பந்துவீச்சு, பேட்டிங்கிலும் ஜொலித்த அஸ்வின், ராகுலின் அரைசதம் ஆகியவற்றால், மொஹாலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 12 ரன்களில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
இதன் மூலம் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி, என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
கே.எல். ராகுலின் 47 பந்துகளுக்கு 52 ரன்கள் சேர்த்தது, அஸ்வின் 4 பந்துகளுக்கு 17 ரன்களும், 2 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தியது வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. ஆட்டநாயகன் விருதையும் அஸ்வின் வென்றார்.
கடைசிநேரத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 160 ரன்களுக்குள் அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 182 ரன்கள் வரை உயர்வதற்கு அஸ்வினின் கடைசிநேர அதிரடியே காரணம். இந்த ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால், வெற்றி ராஜஸ்தான் அணி பக்கம் சென்றிருக்கும். அதேநேரத்தில் ராகுல் ஆட்டமிழந்தநிலையில், பதற்றமடைந்த கிங்ஸ் லெவன் அணி வீரர்கள் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு சென்றபோது அஸ்வினின் அதிரடி காப்பாற்றியது.
குறிப்பாக கிங்ஸ்லெவன் அணியில் களமிறங்கிய 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று அறிமுகமான அர்ஷ்தீப் சிங் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது, ஷமியின் 2 விக்கெட்டுகளும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொருத்தவரை திரிபாதி, ஜோஸ் பட்லர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். 4 ஓவர்களில் 38 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்ஸனும், திரிபாதியுடன் இணைந்து 59 ரன்கள் சேர்த்தார். இவர்கள் 3 பேரும் ஆட்டமிழந்தபின், ஆட்டத்தில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டு ரன் சேர்ப்பதில் மந்தமான நிலை நிலவியது.
அதிலும் குறிப்பாக சாம்ஸன் விக்கெட்ட அஸ்வின் வீழ்த்தியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். அதன்பின் ராஜஸ்தான் அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பின்னியை களமிறங்கியதற்கு பதிலாக அவரை 3வது அல்லது 4-வது வீரராக களமிறக்கி இருந்தால் ஓரளவுக்கு அடித்து ஸ்கோர் செய்திருப்பார்.
18 பந்துகளுக்கு 50 ரன்கள் என்று "குருவி தலையில் பனங்காய்" வைப்பதுபோன்று பேட்ஸ்மேனும் இல்லாமல், ஓவர்களும் இல்லாத நிலையில் நெருக்கடியில் பின்னி களமிறங்கினார். அந்த சூழலிலும் முடிந்தவரை அடித்து ஆடிய பின்னி, 11 பந்துகளில் 33 ரன்கள் அடித்தும் அதுவும் வீணானது.
நல்ல தொடக்கம்
183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லர், திரிபாதி அதிரடியாக பேட் செய்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். அர்ஷ்தீப் சிங் வீசிய 5-வது ஓவரில் பட்லர் 23 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் அருமையாக கேட்ச் பிடித்து பட்லரை பெவிலியன் அனுப்பினார்.
அடுத்துவந்த சாம்ஸன், திரிபாதியுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.
திருப்புமுனை
அஸ்வின் வீசிய 12-வது ஓவரில் சாம்ஸன் கிளீன் போல்டாகி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த கேப்டன் ரஹானே, திரிபாதியுடன் இணைந்தாலும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. திரிபாதி 44 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அஸ்வின் வீசிய 16-வது ஓவரில் லாங் ஆப் திசையில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து திரிபாதி 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த டர்னர் டக்அவுட்டிலும், ஆர்ச்சர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. போராடி வந்த ரஹானே 26 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி மட்டும் தனியாக ஆவர்த்தனம் செய்து 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 33 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி, அஸ்வின், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கெயில் அதிரடி
முன்னதாக முதலில் டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கெயில், ராகுல் களமிறங்கினார். வழக்கம்போல் கெயில் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினார். உனத்கட் வீசிய 2-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்கள் விளாசினார். குல்கர்னி வீசிய 5-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அசத்தினார்.
ஆர்ச்சர் வீசிய 6-வது ஓவரில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார் கெயில். அடுத்து வந்த மயங்க் அகர்வாலும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 2 சிக்ஸர்கள், பவுண்டரி உள்பட 26 ரன்கள் சேர்த்த நிலையில், சோதி பந்துவீச்சில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்தது.
ராகுல் அரைசதம்
3-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர், ராகுல் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடினார்கள். ராகுல் 45 பந்துகளில் அரைசதம் அடித்தார். உனத்கட் வீசிய 18-வது ஓவரில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து 52 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 85 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்த சில ஓவர்களில் பூரன் 5 ரன்கள், மன்தீப் டக்அவுட்டிலும், மில்லர் 40 ரன்களிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். 152 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி அடுத்த 12 ரன்களுக்குள் மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் அஸ்வின் அதிரடியாக 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி உள்ளிட்ட 17 ரன்கள் சேர்த்து அணியை கவுரமான ஸ்கோர் எட்ட துணை புரிந்தார்.
ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT