Published : 19 Apr 2019 09:53 AM
Last Updated : 19 Apr 2019 09:53 AM
பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, ராகுல் சாஹரின் பந்துவீச்சு ஆகியவற்றால் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 3 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்ற நிலையில், இப்போது தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என மொத்தம் 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இதுவரை டெல்லி அணி சொந்த மண்ணில் 4 போட்டிகளில்விளையாடி அதில் 3 தோல்விகளை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 40 ரன்களில் தோல்வி அடைந்தது.
ரோஹித் சர்மா மைல்கல்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா(8,216), கோலி (8,183) ரன்கள் சேர்த்துள்ளனர். ரோஹித் சர்மா 8018 ரன்களுடன் உள்ளார். இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா 223 ரன்கள் சேர்ததுள்ளார். அதில் ஒரு அரைசதம் கூட இன்னும் ரோஹித் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் மிஸ்ரா சாதனை
அதேபோல டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் போட்டியில் 150-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டிகளில் 150விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும், 2-வது வீரர் எனும் சாதனை படைத்தார். 115 போட்டிகளில் 161 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை வீரர் மலிங்கா முதலிடத்தில் உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால், ஸ்கோர் 130 ரன்களை தாண்டுவது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்து. ஆனால், குர்னல் பாண்டியா 26 பந்துகளில் 37 ரன்களும், ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன்களும் சேர்த்து அணியை நல்ல ஸ்கோர் எடுக்க உதவி செய்தனர். 26 பந்துகளில் இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். அதிலும் கடைசி 19 பந்துகளில் 54 ரன்களை பாண்டியா பிரதர்ஸ் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக பேட் செய்து 32 ரன்களும், ஒருவிக்கெட்டையும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ராகுல் சாஹர் சிறப்பு
பந்துவீச்சில் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்துவிட்டார். சாஹரின் லெக்பிரேக் பந்துகளையும், கூக்ளிகளையும் ஆடுவதற்கு சிரமப்பட்ட டெல்லி பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் அய்யர், தவண், பிரித்வி ஷா ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த 3 பேட்ஸ்மேன்கள் சென்றதும் டெல்லி அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்து மளமள வென சரிந்தது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டுக்கோப்புடன் பந்துவீசிய டெல்லி பந்துவீச்சாளர்கள் ரபாடா, மோரிஸ், கீமோ பால் ஆகியோர் நேற்று மும்பை பேட்ஸ்மேன்களை அடிக்குமாறு பந்துவீசியது ரன் அதிகமாகச் சென்றதற்கு காரணமாகியது. அதேபோல, பேட்டிங்கில் பிரித்வி ஷா இன்னும் பொறுமையாக ஆடாமல் விரைவாக ரன் சேர்ப்பதிலேயே கவனமாக இருந்து விக்கெட்டை இழக்கிறார்.
6 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் டெல்லி கேபிடல்ஸ் அணி நன்றாகத்தான் விளையாடியது. தவண், பிரித்வி ஷா கூட்டணி சிறப்பாகத்தான் மும்பை பந்துவீச்சை கையாண்டார்கள். பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்திருந்து டெல்லி அணி.
ஆனால், தவண் தேவையில்லாமல் சாஹர் வீசிய 7-வது ஓவரில் 3-வது பந்தில் 'ஸ்விட்ச் ஹிட்' அடிக்கப் போகிறேன் என்று முயற்சித்து கால்காப்பில்பட்டு பந்து ஸ்டெம்பை பதம்பார்த்தது. அடுத்த சிறிதுநேரத்திலேயே பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 9-வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்னில் பிரித்வி ஷா வெளியேறினார்.
10-வது ஓவரை வீசிய குர்னல் பாண்டியா பந்துவீச்சில் 3 ரன்கள் சேர்த்தநிலையில் முன்ரோ ஆட்டமிழந்தார். 11-வது ஓவரை வீசிய சாஹர் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் அய்யர் கிளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த சீசனில் இதுவரை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கும் வகையில் விளையாடாதது வேதனையாகும். அவரின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்புவது அவசியம். பும்ரா வீசிய 14-வது ஓவரில் கிளீன் போல்டாகி ரிஷப் பந்த் 3 ரன்னில் வெளியேறினார்.
58 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த டெல்லி அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது அதாவது 18 ரன்களுக்கு 4 விககெட்டுகளை இழந்ததும், கடைசியில் 107 ரன்களில் இருந்து 125 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்ததும் தோல்விக்கு முக்கியக் கராணமாகும்.
தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 20 ரன்கள், ஷிகர் தவண் 35 ரன்கள் சேர்த்தே அணியில் அதிகபட்சமாகும். நடுவரிசையில் களமிறங்கிய கேப்டன் அய்யர் (3), முன்ரோ(3), ரிஷப் பந்த்(7), மோரிஸ்(11) என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம்.
மேலும், கீமோ பால் டக்அவுட்டிலும், ரபாடா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 48 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்தது. மிஸ்ரா 6 ரன்னில், இசாந்த் சர்மா ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை அணித் தரப்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா தலா ஒருவிக்கெட்டையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
விக்கெட் சரிவு
முன்னதாக, டாஸ்வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ரோஹித் சர்மா, டீகாக் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவரில் 57 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.
அமித் மிஸ்ரா வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா 30 ரன்களில் கிளீன் போல்டாகினார். அதன்பின் சரிவு தொடங்கியது. அடுத்து வந்த பென் கட்டிங் 3 ரன்னில் படேல் வீசிய 8-வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.
நிதானமாக பேட் செய்த டீகாக் 35 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் வீசிய 10-வது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டார்
4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ், குர்னல் பாண்டியா இணைந்தனர். இருவரும் 30 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ரபாடா வீசிய 16-வது ஓவரில் சூர்ய குமார் யாதவ் 26 ரன்கள் சேர்த்தநிலையில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே மும்பை சேர்த்திருந்தது. இதனால், 130 ரன்களுக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாண்டியா பிரதர்ஸ் காட்டடி
ஆனால், 5-வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியாவுடன் சேர்ந்த ஹர்திக் பாண்டியா காட்டடி அடித்தார். கீமோ பால் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசினார். மோரிஸ் வீசிய 19-வது ஓவரில் ஹர்திக் ஒருசிக்ஸர், பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
ரபாடா வீசிய கடைசி ஓவரில் ஹர்திக் ஒரு சிக்ஸர் அடித்த அடித்தநிலையில், அடுத்தபந்தில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 3சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து பொலார்ட்வந்தார். கடைசியில் இரு பவுண்டரிகளை குர்னல் பாண்டியா அடித்து நொறுக்கினார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 168 ரன்கள் சேர்த்தது. குர்னல் பாண்டியா 37 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT