Published : 06 Apr 2019 06:15 PM
Last Updated : 06 Apr 2019 06:15 PM

ரவி அஸ்வின் அபாரம்; முருகன் அஸ்வின் சிக்கனம்: சென்னை சூப்பர் கிங்ஸ் 160 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 18வது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும் 160 ரன்களையே எடுக்க முடிந்தது.  ரவி அஸ்வின் 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு விழுந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

 

மற்றொரு தமிழக வீரரும் லெக் ஸ்பின்னருமான முருகன் அஸ்வின் 4 ஒவர்களில் 8 டாட்பால்களுடன் வெறும் 23 ரன்களையே விட்டுக் கொடுத்து கடும் சிக்கனம் காட்டினார். ரவி அஸ்வின் 10 டாட்பால்கள் வீசினார், ஒரு பவுண்டரி ஒரு சிக்சரைத்தான் விட்டுக் கொடுத்தார் முருகன் அஸ்வின் ஒரேயொரு சிக்ஸ் மட்டும் விட்டுக் கொடுத்தார். மொத்தத்தில் இரண்டு மண்ணின் மைந்தர்களும் 8 ஓவர்களில் 46 ரன்களையே விட்டுக் கொடுத்தனர், இதில் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது.

 

சென்னை தரப்பில் டுபிளெசிஸ் 38 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 54 ரன்களை எடுக்க  கடைசியில் ராயுடு (21,  15 பந்து, 2 பவுண்டரி 1 சிக்ஸ்), தோனி (37, 23 பந்து, 4பவுண்டரி ஒரு சிக்ஸ்) இணைந்து 6.2 ஒவர்களில் ஆட்டமிழக்காமல் 60 ரன்களைச் சேர்த்ததால் ஸ்கோர் ஓரளவுக்கு சவாலான 160 ரன்களை எடுத்துள்ளது. ஆனால் 3 விக்கெட்டுகளைத்தான் இழந்தது எனும்போது இந்த ஸ்கோர் குறைவுதான்.

பவர் ப்ளே முடிவில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்திருந்தது.  பவர் ப்ளே முடிந்து 8வது ஓவரில் ஸ்கோர் 56 ரன்களாக இருந்த போது வாட்சன் (26 ரன், 24 பந்து, 3 பவுண்டரி 1 சிக்ஸ்) ரவி அஸ்வின் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்யும் முயற்சியில் டீப்பில் சாம் கரன் கேட்சுக்கு வெளியேறினார்.

 

டுபிளெசிஸ் ஆக்ரோஷம் காட்ட சுரேஷ் ரெய்னா தட்டுத்தடுமாறி 20 பந்துகளில் 17 ரன்களையே எடுக்க முடிந்தது. இருவரும் சேர்ந்து 44 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்த போது ஸ்டம்பில் ரவி அஸ்வின் ஒரு கேரம் பந்தை வீச டுபிளேசிஸ் ஷாட் சரியாகச் சிக்காமல் லாங் ஆனில் கேட்ச் ஆனார். அப்போது கிராஸ் செய்த ரெய்னா அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பவுல்டு ஆனார். 13.4 ஓவர்களில் 100/3 என்ற நிலையில் தோனி, ராயுடு இணைந்தனர்.

 

இருவரும் ஸ்கோரைத் தள்ளித்தள்ளிக் கொண்டு வர ஆண்ட்ரூ டை வீசிய 18வது ஓவரில் டை பந்தை ஒரு சக்திவாய்ந்த ஆஃப் சைடு ஷாட்டில் தோனி பவுண்டரி அடிக்க 11 ரன்கள் வந்தது.  சாம் கரன் 3 ஓவர்களில் 16 ரன்களையே கொடுத்திருந்தார் மேலும் கடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தவர், அவர் 19வது ஓவரை வீச  தோனிக்கு எப்படி வீசக் கூடாதோ அப்படி வீசினார்.

 

 

 முதலில் நல்ல வாகாக லெந்தில் விழுந்த பந்தை தோனி அனாயசமாக மிட்விக்கெட் மேல் சிக்ஸ் தூக்கினார்.  மீண்டும் லெந்த் பால் அதே திசையில் ஒரு பவுன்ஸ் பவுண்டரி, பிறகு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியேயும் ஒரு ஓவர் பிட்ச் பந்து பவுண்டரி பறந்தது. தோனிக்கு வைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தை வீசினால் அவர் பதற்றமடைவார், ஆனால் லெந்த் பால், அவர் மட்டையின் ரீச்சுக்கு வீசினார் கரண், அந்த ஓவரில் 19 ரன்கள்.

 

அடுத்து கடைசி ஓவருக்கு  மொகமது ஷமி வந்தார். வந்தவுடனேயே லெந்த் பந்தை வீச ராயுடு காலை விலக்கிக் கொண்டு லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார். பிறகு தோனிக்கு தப்புத் தப்பாக பவுன்சர் வீசினார், பைன் லெக், ஸ்கொயர் லெக்கில் ஆளில்லாத போது மோசமான பந்து தோனி அழகாக ஹூக் செய்து 4 ரன்களைப் பெற்றார். கடைசி ஓவரில் 14 ரன்கள். ஸ்கோர் 160/3.  ஷமி 4 ஓவர் 41, சாம் கரண் 3-16லிருந்து 4 ஓவர் 35. டை 4 ஒவர் 38 ரன்கள்.

 

ஜடேஜா, ஹர்பஜன், இம்ரான் தாஹிரை எப்படி கிங்ஸ் லெவன் ஆடுகிறது என்பதைப் பொறுத்தும், கிறிஸ் கெய்ல் என்ன செய்வார் என்பதைப் பொறுத்தும் இந்த ஆட்டத்தின் முடிவு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x