Last Updated : 29 Apr, 2019 11:15 AM

 

Published : 29 Apr 2019 11:15 AM
Last Updated : 29 Apr 2019 11:15 AM

சொன்னதைச் செய்தார் ரஸல்: ஹர்திக் காட்டடியையும் மீறி வென்ற கொல்கத்தா: 100-வது வெற்றி

2விக்கெட், 2 கேட்ச், 40 பந்துகளுக்கு 80 ரன்கள் சேர்த்த ஆன்ட்ரூ ரஸலின் ஆத்மார்த்தமான பங்களிப்பு, கில், கிறிஸ் லின் அதிரடி பேட்டிங் ஆகியவற்றால், கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 47-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கடந்த 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 8-ம் தேதிக்கு பின், ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. இதுவரை மும்பை அணியுடன் தொடர்ந்து 8 தோல்விகளைச் சந்தித்துவந்த கொல்கத்தா அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தொடர்ந்து சந்தித்து வந்த 6 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 12 ஆட்டங்களில் 5 வெற்றிகள், 5 தோல்விகள் என மொத்தம் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்ற 100-வது வெற்றி இதுவாகும்.

மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் 7 வெற்றிகள், 5 தோல்விகள் என மொத்தம் 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த ஐபிஎல் சீசனில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதுவரை இந்த ஸ்கோரை எந்த அணியும் சேர்க்கவில்லை.

233 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சொன்னதைச் செய்தார்

கடந்த இரு நாட்களுக்கு முன் ரஸல் அளித்த பேட்டியில், கொல்கத்தா அணி நிர்வாகம் தவறான முடிவுகளை எடுக்கிறது என்று ஆதங்கம் தெரிவித்து தன்னை 2-வது வீரராக களமிறக்காமல் வீணடிக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அடுத்துவரும் 3 போட்டிகளிலும் 150சதவீத உழைப்பை வெளிப்படுத்தி அணியை ப்ளே-ஆப் சுற்றுக்குகொண்டு செல்வேன் என்று தெரிவித்திருந்தார். அதை இந்த ஆட்டத்தில் ரஸல் நிரூபித்துவிட்டார்.

இந்த ஆட்டத்தில் ரஹஸ் 2 கேட்சுகள், 2 விக்கெட்டுகள், 40 பந்துகளுக்கு 80 ரன்கள் (8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கொல்கத்தா அணி வென்ற 5 போட்டிகளில் ரஸல் 4 ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா, மலிங்கா, சாஹர் ஆகிய 3 பேரின் பந்துவீச்சை ரஸல் நொறுக்கி எடுத்துவிட்டார்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரு சீசனில் 50 சிக்ஸர்களுக்கு மேல் அடித்தவர்களில் கெயில் மட்டுமே இடம் பெற்றிருந்தார். அந்த சாதனைப்பட்டியலில் ரஸலும் நேற்று இடம் பெற்றார்.

லின், கில் கலக்கல்

கொல்கத்தா அணியில் மற்ற இரு வீரர்களான கிறிஸ் லின், சுப்மான் கில் ஆகியோரின் ஆட்டமும் முத்தாய்ப்பாக இருந்தது. இருவரின் அதிரடி ஆட்டமும் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம். சுப்மான் கில் 45 பந்துகளுக்கு 76 ரன்களும்(4சிக்ஸர், 6பவுண்டரிகள்), கிறஸ் லின்29 பந்துகளுக்கு 54 ரன்களும்(2 சிக்ஸர், 8பவுண்டரி) சேர்த்தனர்.

பும்ரா, மலிங்கா பாவம்

இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, மலிங்கா இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி கூட்டாக 92 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். ஒரு விக்கெட்கூட வீழ்த்தவில்லை. முதல் 10 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்திருந்த கொல்கத்தா, கடைசி 10 ஓவர்களில் 137 ரன்கள் சேர்த்தது. இதில் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கொல்கத்தா அணியில் சாவ்லா 57 ரன்களும், நரேன் 44 ரன்களும் வாரி வழங்கினர்.

பாண்டியா காட்டடி

மும்பை இந்தியன்ஸ்  அணியைப் பொறுத்தவரை 234 ரன்கள் இலக்கை பார்த்தவுடன் மனரீதியாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றுதான் கூற முடியாதும். அதிகமான அழுத்தம் காரணமாக எந்த பேட்ஸ்மேன்களும் 30 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. ஹர்திக் பாண்டியா ஒருவர் மட்டுமே களத்தில் இருந்து  அணியை இந்த அளவுக்கு கவுரமான ஸ்கோரைக் கொண்டு சென்றார்.

காட்டடி அடித்த ஹர்திக்  பாண்டியா 17 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்த சீசனில் குறைந்தபந்தில் அரைசதம் அடித்த வீரர் எனும் சாதனையைச் செய்தார். இதற்குமுன் ரிஷப் பந்த் வைத்திருந்த சாதனையை பாண்டியா முறியடித்தார். அதுமட்டுமல்லமால் 34பந்துகளுக்கு 91 ரன்கள்(9சிக்ஸர்,6 பவுண்டரி) சேர்த்து ஐபிஎல் போட்டியில் அதிகபட்சத்தை பதிவு செய்தார் ஹர்திக் பாண்டியா.

பிரம்மாண்ட இலக்கு

233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இலக்கு கடினமானது என்பதால், அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் அதிகமான விக்கெட்டுகளை விரைவாக இழந்தது மும்பை. டீகாக் டக்அவுட்டிலும், ரோஹித் சர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்தது மும்பை அணி. அடுத்து வந்த லூயிஸ் 15 , சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் வெளியேறினர்.

5-வது விக்கெட்டுக்கு பொலார்ட், ஹர்திக் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்தனர். பொலார்ட் நிதானமாக பேட் செய்ய, ஹர்திக் பாண்டிய காட்டடியில் இறங்கினார். . 10 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்திருந்தது.

அதிவிரைவு அரைசதம்

இருவரும் சேரந்து 63 ரன்கள் சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் அரைசதம் அடித்து விரைவாக அரைசதம் அடித்த சாதனையைச் செய்தார். நிதானமாக ஆடி வந்த  பொலாரட் 20 ரன்களில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

7-வது விக்கெட்டுக்கு குர்னல் பாண்டியா களமிறங்கினார். ஹர்திக் பாண்டியாவுக்கு துணையாக குர்னால் விளையாடினார். பியூஷ் சாவ்லா, நரேன், குர்னே ஆகியோரின் ஓவர்களில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் ஹர்திக் விளாசித்தள்ளினார். பாண்டியா களத்தில் இருக்கும் வரை  ஆட்டம் பரபரப்பான கட்டத்தைக் நோக்கிச் சென்றது. அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்.

குர்னே வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 91 ரன்கள் சேர்த்த நிலையில், ரஸலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 64 ரன்கள் சேர்த்தனர். குர்னால் பாண்டியா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரன் 3 ரன்னிலும், சாஹர் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது.

கொல்கத்தா அணித் தரப்பில் நரேன், குர்னே, ரஸல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அருமையான தொடக்கம்

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சுப்மான் கில், கிறிஸ் லின் அருமையான தொடக்கம் அளித்தனர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக இருவரும் பேட் செய்ததால், ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சென்றது. மலிங்கா வீசிய 6-வது ஓவரில் கிறிஸ் லின் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க பொலார்ட் தவறவிட்டார்.

இதைப்பயன்படுத்திய லின் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். துணையாக பேட் செய்த கில் 32 பந்துகளில் அரைசதம் கண்டார். லின் 54 ரன்கள் சேர்த்த நிலையில், சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தனர்.

பவர்ப்ளேயில் கொல்கத்தா  அணி, விக்கெட் இழப்பின்றி 50 ரன்களும், 10 ஓவர்கள் முடிவில் ஒருவிக்கெட் இழப்புக்கு 97 ரன்களும் சேர்த்தது.

ரஸல்  சிக்ஸர் மழை

2-வது விக்கெட்டுக்கு ரஸல் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை நொறுக்கிவிட்டனர். சாஹர் வீசிய 14-வது ஓவரில் ரஸல் 2 சிக்ஸர்களும், கில் ஒருசிக்ஸரும் விளாசினர். மலிங்கா, பும்ரா பந்துவீச்சையும் ரஸல் விட்டுவைக்கவில்லை.

அதிரடியாக ஆடிய சுப்மான் கில் 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர்.

3-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திவந்து, ரஸலுடன் சேர்ந்தார். அதன்பின் ரஸல் பேட்டிங்கில் அனல் பறந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 18-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் ரஸல். மலிங்கா  வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என ரஸல் வெளுத்து வாங்கினார்.

ரஸல் 80 ரன்களுடனும்(40பந்துகள்), தினேஷ் கார்திக் 15 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் சேர்த்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x