Last Updated : 26 Apr, 2019 10:29 AM

 

Published : 26 Apr 2019 10:29 AM
Last Updated : 26 Apr 2019 10:29 AM

பிரமாதப்படுத்திய 17 வயது பராக்: கார்த்திக் அதிரடி வீண்; ப்ளே-ஆப் சுற்றை இறுகப் பிடித்த ராஜஸ்தான்

17 வயது ரியான் பராக்கின் பிரமாதமான பேட்டிங், ஜோப்ரா ஆர்ச்சரின் அதிரடி ஆகியவற்றால் கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் 4 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ப்ளே-ஆப் சுற்று வாய்ப்பை உயிர்ப்பித்துக் கொண்டது. இதனால் அடுத்து வரும் போட்டிகள் மிகுந்த முக்கியத்துவமாக அமைந்துள்ளது.

அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக பெறும் 6-வது தோல்வி இதுவாகும். கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 4 ஆட்டங்களில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் கண்டு 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

தற்போது கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 3 அணிகளும் 8 புள்ளிகளுடன் இருக்கின்றன. இன்னும் இந்த 3 அணிகளுக்கும் தலா 3 போட்டிகள் மட்டுமே இருப்பதால், அடுத்து வரும் அனைத்து ஆட்டங்களிலும் இந்த 3 அணிகளும் தோல்வி அடையாமல் இருப்பது அவசியமாகும்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 பந்துகள் மீதம் இருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

17வயது பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக்தான் நேற்றைய போட்டியின் ஹீரோ. 31 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இவருக்குத் துணையாக ஆடிய ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தார்.

17 வயதான பராக்கின் மன உறுதியும், திறமையான பேட்டிங்கையும் நேற்றைய ஆட்டத்தில் பார்த்த அனைத்து வீரர்களுக்கும் வியப்பாகவே இருந்தது. ரஸல் வீசிய 14-வது ஓவரில் பராக்கின் ஹெல்மட்டில் பட்டதில் நிலைகுலைந்துவிட்டார். சிறிதுநேரம் ஆட்டத்தை நிறுத்தி அனைவரும் வந்து பராக்கின் உடல்நிலையைக் கவனித்தனர். ஆனால், சுதாரித்துக்கொண்ட பராக் அடுத்தடுத்த ஓவர்களில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

7-வது விக்கெட்டுக்கு ஜோப்ரா ஆர்ச்சருடன், சேர்ந்து ஆடிய பராக் 44 ரன்களும், ஸ்ரேயாஸ் கோபாலுடன் 25 ரன்களும் பராக் சேர்த்தது ஆட்டத்தின் முத்தாய்ப்பாகும். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டன. நரேன் பந்துவீச்சில் ஒருபவுண்டரி, சிக்ஸரும், ராணா பந்துவீச்சில் ஒருசிக்ஸரும், பவுண்டரியும் பராக் விளாசி வெற்றியை எளிதாக்கினார்.

ஆட்டநாயகன்

ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் சிறப்பாகப் பந்து கிறிஸ்லின், கில் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் ஆரோனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பட்டைய களப்பிய தினேஷ்

கொல்கத்தா அணி தரப்பில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் நேற்று ஆகச்சிறந்ததாக இருந்தது. 50 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து தினேஷ் கார்த்திக் நேற்றைய ஆட்டத்தில் தனது ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார். இதில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

கொல்கத்தா அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அதன்பின் விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும், தனிஒருவனாக இருந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்த கொல்கத்தா அணி, தினேஷ் காரத்திக்கின் அதிரடியால் கடைசி 10 ஓவர்களில் 126 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனிமனிதராக இருந்து அணியின் ஸ்கோரைக் கட்டமைத்த தினேஷ் கார்த்திக் ஆட்டம் நேற்று வீணானதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அணியில் நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் தோள்பட்டை காயத்தால் ஏமாற்றினார். சுனில் நரேன், ராணா, சுப்மான் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

40க்கு 94 ரன்கள்

இதனால், அணியின் ஒட்டுமொத்தச் சுமையையும் சுமந்து, அழுத்தத்தோடு தினேஷ் கார்த்திக் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், எதையும் மனதில் கொள்ளாமல் ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சைப் பொளந்துகட்டிவிட்டார் தினேஷ் கார்த்திக். முதல் 10 பந்துகளுக்கு 3 ரன்களை மட்டுமே கார்த்திக் சேர்த்திருந்தார். ஆனால், ஆனால் அடுத்த 40 பந்துகளில் 94 ரன்களை தினேஷ் சேர்த்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளார். தினேஷ் கார்த்திக்கின் நேற்றைய ஒவ்வொரு ஷாட்களும், இடிபோல் இருந்தது. குறிப்பாக உனத்கட், ஆர்ச்சர் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார்.

விக்கெட் சரிவு

176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ரஹானே, ஸ்மித் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். ரஹானே 34 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரேன் வீசிய 6-வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தது.

அடுத்து ஸ்மித் களமிறங்கினார். சாவ்லா வீசிய 7-வது ஓவரில் நன்றாக பேட் செய்துகொண்டிருந்த சாம்ஸன் 20 ரன்கள் சேர்த்த நிலையில் போல்டாகி வெளியேறினார். நரேன் வீசிய 8-வது ஓவரில் ஸ்மித் 2 ரன்னில் போல்டாகி ஆட்டமிழந்தார். 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு பென்ஸ்டோக்ஸ், ரியான் பராக் சேர்ந்தனர். ஆனால், இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான்.

சாவ்லா வீசிய 11-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரஸலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்கள் சேர்த்த நிலையில், சாவ்லா வீசிய 13-வது ஓவரில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழந்தது. 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு பராக், கோபால் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியை வழிநடத்தினார்கள். ராணா வீசிய 15-வது ஓவரில் கோபால் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ஸ்கோரை வேகப்படுத்தினார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டன.

ஆர்ச்சர், பராக் கூட்டணி

பிரசித் கிருஷ்ணா வீசிய 16-வது ஓவரில் கோபால் 18 ரன்னில் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆர்ச்சர், பராக்குடன் இணைந்தார். ஆர்ச்சர் வந்தபின் ஆட்டத்தில் சூடு பறக்கத் தொடங்கியது. வந்துவுடன் பவுண்டரி விளாசினார் ஆர்ச்சர்.

நரேன் வீசிய 17-வது ஓவரில் பராக் ஒரு பவுண்டரியும், ஆர்ச்சர் சிக்ஸரும் விளாசினார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய 18-வது ஓவரில் பராக் சிக்ஸர், பவுண்டரி அடித்து ஸ்கோரை வேகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களுக்கு வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன.

19-வது ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடித்த பராக், கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் துரதிர்ஷ்டமாக 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து உனத்கட் களமிறங்கி ஆர்ச்சருடன் இணைந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் ஆர்ச்சர் அனாசயமாக ஒருபவுண்டரி, சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் வெற்றி பெற்றது. ஆர்ச்சர் 27 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்துடன் ஆர்ச்சரின் ஐபிஎல் தொடர் முடிந்தது. அவர் இங்கிலாந்து புறப்படுகிறார்.

கொல்கத்தா அணி தரப்பில் சாவ்லா 3 விக்கெட்டுகளையும், நரேன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆரோன் கலக்கல்

முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் லின், கில் விக்கெட்டை விரைவாக வீழ்த்தி வருண் ஆரோன் அதிர்ச்சி அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு ராணா, கார்த்திக் சேர்ந்தனர். மந்தமான ஆட்டத்தால் பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே கொல்கத்தா சேர்த்தது. ராணா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கார்த்திக் அதிரடி

அதன்பின் தினேஷுடன், நரேன் இணைந்தார். 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்திருந்தது . அதன்பின் கார்த்திக் அதிரடியில் இறங்கினார். கோபால் வீசிய 11-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி கார்த்திக் அமர்க்களப்படுத்தினார்.

12-வது ஓவரில் நரேன் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகினார். அடுத்துவந்த ரஸல் கார்த்திக்குடன் இணைந்தார். இந்த முறை ரஸல் அமைதியாக பேட் செய்ய, கார்த்திக் அதிரடி காட்டினார். ரஸல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக பேட் செய்த தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். 15 ஓவர்களுக்கு பின் அதிரடியில் இறங்கிய தினேஷ் கார்த்திக் ராஜஸ்தான் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார்.

உனத்கட், ஆர்ச்சர் ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசிய கார்த்திக் 50 பந்துகளில்  97 ரன்கள் எடுத்தும் (9 சிக்ஸர்,7 பவுண்டரி), ஆர்கேசிங் 3 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா அணி. ராஜஸ்தான் தரப்பில் ஆரோன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x