Published : 08 Sep 2014 04:49 PM
Last Updated : 08 Sep 2014 04:49 PM

நேசத்துடன் இந்தியா செல்கிறோம்: லாகூர் லயன்ஸ் கேப்டன் மொகமது ஹபீஸ்

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதனையடுத்து கேப்டன் மொகமது ஹபீஸ் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடும் உமர் அக்மல், அகமது ஷேஜாத், வஹாப் ரியாஸ், நசீர் ஜாம்ஷேட் ஆகியோர் உள்ளனர். மேலும் அய்ஜாஸ் சீமா என்ற வீரரும் உள்ளார்.

விசா கிடைத்தது பற்றிய மகிழ்ச்சியைத் தெரிவித்த மொகமது ஹபீஸ், “நாங்கள் நேசம் என்ற செய்தியுடன் இந்தியா செல்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அங்கு எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். பாகிஸ்தான் நாட்டின் தூதர்களாக நாங்கள் அங்கு செல்லவிருக்கிறோம்.

களத்தில் நல்ல கிரிக்கெட்டை ஆடுவது மட்டும் எங்கள் குறிக்கோள் அல்ல களத்திற்கு வெளியேயும் சில நல்ல காரியங்களைச் செய்வோம்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டிலும் கிரிக்கெட்டைப் போற்றுகின்றனர். எனவே நாங்கள் இந்தியாவில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறேன்.

எங்கள் அணி சிறிது காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் உற்சாகமாக ஆடி வருகின்றனர். தைரியமான பல வீரர்கள் அணியில் உள்ளனர். எனவே சாம்பியன்ஸ் லீகின் சிறந்த அணிக்கு நிகராக நாங்கள் செயல்பட முடியும் என்று நம்பிக்கை உள்ளது” என்று கூறினார் ஹபீஸ்.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிந்து பிரதான சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.

செப்டம்பர் 13ஆம் தேதி தகுதிச் சுற்றுப் போட்டிகள் ராய்பூரில் தொடங்குகின்றன. முதல் போட்டியில் லாகூர் லயன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x