Last Updated : 27 Apr, 2019 08:57 AM

 

Published : 27 Apr 2019 08:57 AM
Last Updated : 27 Apr 2019 08:57 AM

தோனி இல்லாவிட்டால்? 8-வது ஆண்டாக சென்னையில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்ற சிஎஸ்கே: மிக மோசமான பேட்டிங், கேப்டன்ஷிப்

தோனி இல்லாத மிகப்பெரிய பலவீனம், ரோஹித் சர்மாவின் பேட்டிங், துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 46 ரன்களில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி என மொத்தம் 14 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 8ல்வெற்றியும், 4 ல் தோல்வியும் கண்டு 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி இருந்தபோதிலும்கூட நிகர-ரன்ரேட் மைனஸில் இருப்பதால், அந்த அணி இன்னும் ப்ளே-ஆப் சுற்றை உறுதிசெய்யவில்லை. அடுத்து வர இருக்கும் இரு ஆட்டங்களும் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியம்.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தோனி இல்லாவிட்டால்..

தோனி எனும் மிகப்பெரிய “சிங்கம்” இல்லாவிட்டால் சிஎஸ்கே அணியின் டாப்-ஆர்டன் நிச்சயம் நிலைகுலைந்துவிடும், ஜீரோவாகிவிடும் என்பதற்கு இது 2-வது மிகமோசமான உதராணமாகும். “தோனிதான் சிஎஸ்கே, சிஎஸ்கேதான் தோனி” என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இக்கட்டான நேரத்தில் அணியை நிதானமாக கட்டமைத்து, தேவையான நேரத்தில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கக்கூடிய அனுபவம் நிறைந்த, திறமையான வீரர், கேப்டன் தோனி என்பதை மறுக்கமுடியாது. கேப்டன்ஷிப்பிலும் தோனியின் வியூகங்கள், எந்தவீரருக்கு எவ்வாறு பந்துவீசுவது, பீல்டிங் அமைப்பது என அனைத்திலும் தோனியை மிஞ்சுவதற்கு வீரர் இல்லை. தோனி இருக்கும் சிஎஸ்கே அணி “வெற்றிப்படை” இல்லாத சிஎஸ்கே அணி மன்னர் இல்லாத “வெற்றுப்படை”தான்.

8 ஆண்டுகளாக…

கடந்த 2013-ம் ஆண்டுக்குப்பின் சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கத்தில் சேஸிங் செய்து முதல் முறையாகத் தோற்றுள்ளது. மேலும், இந்த சீசனில் முதல் முறையாக சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சிஎஸ்கே தோற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து, சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த அனைத்துப் போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தொடர்ந்து 8-வது ஆண்டாக சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

2011-ம் ஆண்டு 3 விக்கெட்டிலும், 2012-ம் ஆண்டு 8 விக்கெட்டிலும், 2013-ம் ஆண்டு 9 ரன்களிலும், 2015-ம் ஆண்டு 6 விக்கெட்டிலும், 2019-ம் ஆண்டு 46 ரன்களிலும் சென்னையில் நடந்த ஆட்டங்களில் மும்பையிடம் சிஎஸ்கோ தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளமா?

ஆடுகளத்தை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைத்தன் விளைவை சிஎஸ்கே நேற்று அனுபவித்துக்கொண்டது. சேஸிங் செய்யும்போது ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்பதை பேட்ஸ்மேன்கள் நேற்று உணர்ந்து “ராணுவத்தில் மார்ச்பாஸ்ட்” செய்வதுபோல் பெவிலியனுக்கும், பிட்சுக்கும் சென்று வந்தார்கள். ஆடுகளம் மோசமாக இருக்கிறது என்பதை தோனியும் 2 முறை குறிப்பிட்டும் அதில் மாற்றமில்லை.

தவறான கணிப்பு

சிஎஸ்கேயின் தற்காலிகக் கேப்டன் ரெய்னாவின் முன்யோசனை இல்லாத முடிவு ஆட்டத்தின் தோல்விக்கு பெரும்பகுதி காரணம். இரவுநேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று நினைத்து சேஸிங் செய்ய தீர்மானித்தார்.

சென்னை வெயில் தலைகீழாக மாற்றிவிட்டது. முதல் பேட்டிங்கிற்கு ஆடுகளம் நன்றாக காய்ந்திருக்க மும்பை வீரர்கள் அடிவெளுத்துவிட்டார்கள்.சேஸிங் செய்தபோது ஆடுகளம் நன்றாக சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் ஒத்துழைத்ததால், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை.

சுரேஷ் ரெய்னா டாஸ்வென்று முதலில் பேட்டிங் செய்திருந்தால், மும்பை அணி சேஸிங் செய்வது கடினமாக இருந்திருக்கும். இதை கருத்தை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவும் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே டாப்ஆர்டர் வீண்

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார்கள். வாட்ஸன், ரெய்னா ஒருபோட்டியில் மட்டுமே நல்ல ஸ்கோர் செய்தனர், மற்ற போட்டிகளில் மிக மோசம். ராயுடு, ஜாதவ், டூப்பிளஸி என 3 வீரர்களுமே ஃபார்மில் இல்லை, மோசமாக விளையாடி வருகின்றனர்.

கடந்த 12 போட்டிகளில் பவர்-ப்ளேயில் அதாவது முதல் 6 ஓவர்களில் அதிகமான விக்கெட்டுகளை இழந்து, மோசமாக விளையாடும் அணியில் சிஎஸ்கே முதலிடத்தில் இருக்கிறது. 12 ஆட்டங்களிலும் பவர்-ப்ளேயில் மட்டும் சிஎஸ்கே அணி 24 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சராசரியாக ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே எடுக்கிறது சிஎஸ்கே.

டி20 போட்டியைப் பொருத்தவரை பவர்ப்ளே ஓவர்கள்தான் ஒருபேட்டிங் செய்யும் அணிக்கு முக்கியமாகும், ரன்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால், அந்த ஓவர்களில் சிஎஸ்கே அணி டாப்ஆர்டர் ேபட்ஸ்மேன்களை தொடர்ந்து இழப்பது எந்த பேட்ஸ்மேன்களும் ஃபார்மில் இல்லை என்பதையும், வீரர்களுக்கு வயதாகிவிட்டதையும் காட்டுகிறதா?.

பேட்டிங் மோசம்

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் முரளிவிஜய்(38), பிராவோ(20), சான்ட்னர்(22)ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் களத்தில் நிற்கக் கூட திராணி, பொறுமையில்லாமல் ஆட்டமிழந்தது வேதனை. அதிலும் கேதார் ஜாதர் தேவையில்லாத “ஷாட்” ஆடி, பந்து ஸ்டெம்ப் மீது பட்டு விக்கெட்டை இழந்தார், இவரை இந்த சீசனுக்கு எதற்காக எடுத்தார்கள் என்பது தோனிக்கு மட்டுமே வெளிச்சம்.

தமிழக வீரருக்கு வாய்ப்பில்லை என்று குரல்ஒலித்த நிலையில், கிடைத்த வாய்ப்பை முரளி விஜய் தவறவிட்டார். ஆப்-சைடு செல்லும் பந்தை அடித்து ஆட வேண்டிய நிலையில் முரளி விஜய் , மும்பை வீரருக்கு கேட்ச் பயிற்சி அளித்தார். பந்தை கணித்து ஆடத்தெரியாமல் போல்டாகிய ராயுடு, பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்த ரெய்னா என பேட்ஸ்மேன்களை என்ன சொல்வது.

பந்துவீச்சில் சான்ட்னர் மட்டுமே சிஎஸ்கே அணியில் சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றபடி தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் ஓவர்கள் வறுத்து எடுக்கப்பட்டன.

ஆட்டநாயகன் ரோஹித்

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை ஆடுகளம் நன்கு காய்ந்திருப்பதை பயன்படுத்திக்கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா வெளுத்து வாங்கிவிட்டார்.

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா இந்த சீசனில் முதல் அரைசதத்தை 37 பந்துகளில் பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். கடைசிநேரத்தில் ஹர்திக் பாண்டியா சேர்த்த 23 ரன்கள் அணிக்கு மிகவும் உதவியது.

மிரட்டல் பந்துவீச்சு

மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் ேநற்று சிஎஸ்கே அணியை மிரட்டிவிட்டனர். குர்னல் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை தட்டிச்சென்றார். மலிங்கா 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்கள் 3 பேரும் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்பசொப்னமாக திகழ்ந்தனர்.

விக்கெட் சரிவு

156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. மலிங்கா வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசிய நிலைியில் சாஹரிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வாட்ஸன் வெளியேறினார். மலிங்கா வீசிய 3-வது ஓவரில் முரளிவிஜய்க்கு ஒரு கேட்ச்சை அங்குல் ராய் தவறவிட்டார்.

அடுத்து வந்த ரெய்னா 2 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரிலும் குர்னல் பாண்டியா வீசிய 5-வது ஓவரில் ராயுடுவும் டக்அவுட்டில் வந்த வேகத்தில் திரும்பினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே.

குர்னல் பாண்டியா வீசிய 8-வது ஓவரில் ஜாதவ் தேவையில்லாத ஷாட் ஆடி 6 ரன்னில் பந்து ஸ்டெம்பில்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷோரேவும் 6 ரன்னில் வெளியேறினார். 10ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது.

நிதானமாக ஆடிவந்த முரளி விஜய் 38 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா வீசிய 12-வது ஓவரில் ஆட்டமிழந்தார். பிராவோ, சான்ட்னர் சிறிதுநேரம் நிலைத்தனர். 20 ரன்கள் சேர்த்தநிலையில் மலிங்கா வீசிய 16-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய 17-வது ஓவரில் சாஹர் டக்அவுட்டில் வெளியேறினார்.

மலிங்கா வீசிய 18-வது ஓவரில் ஹர்பஜன் சிங் ஒரு ரன்னிலும், சான்ட்னர் 22ரன்களிலும் ஆட்டமிழக்க சிஎஸ்கே ஆட்டம் முடிவுக்கு வந்தது.17.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்

முன்னதாக டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன்ரெய்னா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். மும்பை அணிக்கு ரோஹித் சர்மா, டீகாக் ஆட்டத்தை தொடங்கினர். டீகாக் அதிரடியாகத் தொடங்கி 15 ரன்களில் சாஹரிடம் விக்கெட்டை இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு லூயிஸ், ரோஹித் சர்மா கூட்டணி ஓரளவு நிலைத்தனர். இருவரும் சேர்ந்து 75 ரன்கள் ேசர்்த்தனர். லூயிஸ் 32ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குர்னல் பாண்டியா ஒரு ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் அடித்து 48 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும்.

ஹர்திக்பாண்டியா கடைசிநேரத்தில் அதிரடி ஆட்டத்தை ஆடினார். பாண்டியா 23 ரன்னிலும், பொலார்ட் 13 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் சான்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x