Published : 12 Apr 2019 03:31 PM
Last Updated : 12 Apr 2019 03:31 PM

தோனி செய்தது சரியா, தப்பா என்று முடிவெடுப்பது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நழுவல்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ‘கூல்’ (sic) தோனி கடைசி ஓவரில் நோ-பால் விவகாரம் ஒன்றில் களத்தில் இறங்கி நடுவருடன் வாக்குவாதம் புரிந்தார், இதனால் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் தோனி செய்தது சரியா, தவறான முன்னுதாரணமா என்ற கோணங்களில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

தொடக்கத்திலேயே பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்து அஸ்வின் தொடங்கி வைத்த அந்த ஐபிஎல் சர்ச்சை  தோனி போன்ற நடத்தையில் மிகுந்த கவனம் உள்ளவரையும் தொற்றிக் கொண்டது. 

 

மைதானத்தில் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக ஒரு கேப்டன் மைதானத்தில் இறங்கலாம், ஆனால் நடுவர் தீர்ப்பு, இது பவுண்டரியா, சிக்சரா, நோ-பாலா இல்லையா போன்றவற்றை தீர்மானிக்க கேப்டன் களத்தில் இறங்கி நடுவர்களின் தீர்ப்பை மாற்றியமைக்க முயல்வது தவறான முன்னுதாரணமே, அதுவும் தோனி போன்ற ஒருவர் இப்படிச் செய்தால், கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள், லீக் கிரிக்கெட் போன்றவற்றில் நடுவர்களுக்கு கேப்டன்கள் நெருக்கடியே கொடுக்க தொடங்குவார்கள்.. இதனால்தான் தோனி செய்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடுகிறது.

 

பிராட் ஹாட்ஜ் ஏற்கெனவே கூறியது போல் ‘ஐபிஎல் கிரிக்கெட் ஒரு கட் த்ரோட் கிரிக்கெட்’ வெற்றி பெறு அல்லது வெளியேறு கலாச்சாரம் அங்கு உள்ளார்ந்து நெருக்கடி தருவதாக அவர் பரபரப்பாக அன்று தெரிவித்தார்.

 

இந்நிலையில் தோனி நோ-பால் சர்ச்சை குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

 

நோ-பால் என்று கூறப்பட்டதைப் பார்த்தோம், பிறகு குழப்பம் ஏற்பட்டது. அதாவது அது நோ-பாலா அல்லது இல்லையா என்று.  தெளிவு எதுவும் ஏற்படாததால் தோனி தெளிவு பெறுவதற்காக களத்தில் இறங்கினார் நடுவர்களிடம் விவாதித்தார்.

 

இப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். இப்படித்தான் தோனியிடனும் இது குறித்து நான் விவாதித்தபோது எழுந்த புரிதலும்.

 

நோ-பால் தீர்ப்பு குறித்த குழப்பம் சரியானதல்ல, இதுவரைதான் என்னால் சொல்ல முடியும் இதற்கு மேல் ஏதாவது கூறுவது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்.

 

தோனி தெளிவு வேண்டியே அங்கு சென்றார், சரிகள், தவறுகள் பற்றி அனைவரும் பேசுவார்கள், தோனியும் பேசுவார்.  நடுவர்களுக்கும் அதுதான் அதன் பிறகு விவாதமாக இருந்திருக்கும், நான் வெறும் பார்வையாளன் உங்களைப்போலவே.

 

ஆனால் ஏன் நோ-பால் கொடுத்தது இல்லை என்று மாற்றப்பட்டது என்பதில் தோனிக்கு கொஞ்சம் கோபம் ஏற்பட்டது.  அதனால் தெளிவு பெற அவர் களத்துக்குச் சென்றார். அவர் இவ்வாறு செய்தது வழக்கத்துக்கு மாறானதுதான், இது குறித்து அவரிடம் நீண்ட காலம் கேள்வி எழுப்பப்படும்.

 

இவ்வாறு கூறினார் பிளெமிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x