Last Updated : 15 Apr, 2019 10:22 AM

 

Published : 15 Apr 2019 10:22 AM
Last Updated : 15 Apr 2019 10:22 AM

வந்துவிட்டார்கள் வார்னர், ஸ்மித்: உலகக் கோப்பைக்கான ஆஸி. அணி அறிவிப்பு: இரு முக்கிய வீரர்கள் இல்லை

இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்படவில்லை, ஆரோன் பிஞ்ச் கேப்டன் பதவியில் தொடர்கிறார்.

அதேசமயம், வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருப்பதும், சிறந்த பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்கம்ப்  நிராகரிக்கப்பட்டு இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.

இதன்மூலம் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 2019-20-ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் டவுன் டெஸ்ட் போட்டிக்குபின் எந்தவிதமான சர்வதேச போட்டியிலும் விளையாடமல் இருந்து வரும் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஜூன் 1-ம் தேதி பிர்ஸடலில் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளனர்.

அதற்கு முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி பயிற்சிப் போட்டியாக பிரிஸ்பேன் நகரில்  விளையாட உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஸ்மித், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வார்னர் இருவரும் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இதில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹேண்ட்ஸ்கம்ப் ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 469 ரன்கள் சேர்த்து 43 ரன்ரேட் வைத்திருந்தும் அவரை தேர்வு செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஹேசல்வுட் அணிக்குள் வராததும் குழப்பம். இந்தமுறை ஆஸ்திரேலிய அணி அலெக்ஸ் காரே என்கிற ஒற்றை விக்கெட் கீப்பரை மட்டும் நம்பி களமிறங்குகிறது.

மிட்ஷெல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ரிச்சார்ட்ஸன், நாதன் கோல்டர் நீல், ஜேஸன் பெஹரன்டார்ப் ஆகிய 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்துவீச்சில் நாதன் லயன், ஆடம் ஜம்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதி்ல் மிட்ஷெல் ஸ்டார்க், ரிச்சார்ட்ஸன் ஆகியோரின் உடல் தகுதி நடத்தப்பட்டபின் இவர்கள் உறுதி செய்யப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி விளையாடியபோது, மொஹாலியில் 359 ரன்களை சேஸிங் செய்தபோது அணியில் இடம் பெற்றிருந்த டர்னரும் இதில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. டர்னர், ஹேண்ட்ஸ்கம்ப் இருவரும் இந்தியப் பயணத்தில் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்குழுத் தலைவர் டிரிவேர் ஹான்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், " ஆழமான திறமை, போட்டி ஆகியவற்றுக்கு இடையே உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டமாக, இந்தியா, அரபு நாடுகள் பயணத்தில் இடம் பெற்றிருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், ஆஷ்டன் டர்னர், கானே ரிச்சார்ட்ன், ஆகியோரைத் தேர்வு செய்ய முடியவில்லை. இதில் கானே ரிச்சார்டஸன், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் இங்கிலாந்து செல்லும் ஆஸி.ஏ அணியில் இடம் பெற உள்ளனர். ஹேசல்வுட்டும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்காவிட்டாலும், அடுத்துவரும் ஆஷஸ் தொடருக்கு ஹேசல்வுட் திரும்ப அழைக்கப்படுவார்.

15 வீரர்கள் கொண்ட ஆஸி. அணி:

ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜே ரிச்சார்ட்ஸன், நாதன் கோல்டர் நீல், ஜேஸன் பெஹரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x