Published : 04 Apr 2019 08:16 AM
Last Updated : 04 Apr 2019 08:16 AM
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 15வது போட்டியில் தோனி தலைமை சிஎஸ்கே அணி முதல் தோல்வியைத் தழுவியது. பாண்டியா சகோதரர்களின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தோனி எதிர்பார்ப்புக்கு மாறாக முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அவர் இந்த வயதான அணியை வைத்துக் கொண்டு இலக்கை விரட்ட நினைக்கக் கூடாது, 170 ரன்களையே சிஎஸ்கேவினால் ஊஹூம் முடியல... என்கிற ரீதியில் தோற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே பீல்டர்களின் கேட்ச் ட்ராப்கள், மிஸ் பீல்ட்களினால் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் தடவித் தடவி 133/8 என்று தோல்வி தழுவியது. பிராவோவின் மோசமான கடைசி ஓவர் 29 ரன்களை மும்பை இந்தியன்சுக்குப் பெற்றுத் தந்தது.
இதனால் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மும்பை இந்தியன்ஸ், மேலும் இது மும்பை இந்தியன்ஸ் அணியின் 100வது ஐபிஎல் வெற்றியாகும்.
பிராவோவின் மோசமான கடைசி ஓவரும் ஹர்திக் பாண்டியாவின் அபார அதிரடியும்:
சூரியகுமார் யாதவ் 43 பந்துகளில் 59 ரன்களை விளாசினார். 14 ஓவர்கள் வரை சிஎஸ்கே மும்பை இண்டியன்ஸை கட்டுக்குள் வைத்திருந்தது 82/3 என்று ஓவருக்கு 6 ரன்களுக்கும் குறைவாகவே சென்று கொண்டிருந்தது. 13வது ஓவரில்தான் குருணால் பாண்டியா 18 ரன்களில் இருந்த போது மிட் ஆஃபில் மோஹித் சர்மா கேட்சை விட்டார். பிராவோ ஏமாற்றமடைந்தார். 14வது ஓவரில் குருணால் பாண்டியாவின் மட்டையில் பட்டதற்கு நடுவர் மடத்தனமாக அவுட் என்றார், ஆனால் அவர் ரிவியூ செய்து தப்பினார்.
15வது ஓவரில் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த ஆட்டத்திற்கு குருணால் உயிர் கொடுத்தார், இம்ரான் தாஹிர் பந்தை முன் காலை ஒதுக்கிக் கொண்டு மட்டையை பந்தின் மீது ஒரு சுழற்று சுழற்ற லாங் ஆனில் சிக்ஸ். அதே ஓவரில் குவிக் சிங்கிள் எடுக்கும் முயற்சியில் ரெய்னா கோட்டை விட குருணால் ரன் அவுட்டிலிருந்து தப்பினார். 16வது ஓவரில் பிராவோவை சூரிய குமார் ஒரு பவுண்டரி அடித்தார்.
17வது ஓவர் மோஹித் சர்மாவைக் கொண்டு வந்தார் தோனி, இது காஸ்ட்லியாகப் போனது. ஷார்ட் தேர்ட் மேன் தலைக்கு மேல் ஒரு பவுண்டரி, பிறகு கவரில் வாட்சன் எம்பிய விரல்களின் இம்மி அளவில் தப்பி கவருக்கு மேல் பவுண்டரி ஆனது. குருணாலுக்கு ஏகப்பட்ட அதிர்ஷ்டம். கடைசியில் இதே ஓவரில் இன்னொரு ஷாட்டை முயற்சி செய்ய ஜடேஜாவிடம் லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். குருணால் 32 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்தார். இதற்குள் பேட்டிங் முனைக்கு மாறியிருந்த சூரியகுமார் யாதவ் அடுத்த மோஹித் சர்மா பந்தை ஏதோ கேதார் ஜாதவ் பந்தை ஆடுவது போல் ஸ்வீப் ஆடி ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் பறக்க விட்டார். இந்த ஓவரில் 16 ரன்கள் வந்தது.
அடுத்த பிராவோ ஓவரில் சூரிய குமார் யாதவ் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி 59 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா, பொலார்ட் இணைந்தனர்.
19வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீச ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை ஹர்திக் ஸ்கொயர்லெக்கில் கிரவுண்ட் பக்கம் வராதே என்று சிக்ஸுக்கு விரட்டினார், உண்மையில் அதற்கு 12 ரன்கள் கொடுக்க வேண்டும். பிறகும் ஒரு ஷார்ட் பிட்சை அதே ஓவரில் வீச டென்னிஸ் ஃபோர் ஹேண்ட் பாணியில் ஹர்திக் லாங் ஆனில் சிக்ஸ். 16 ரன்கள் வந்தது. 19வது ஓவரில் 141/5 என்று சிஎஸ்கேவின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது.
ஆனால் கடைசி ஓவரில் பிராவோவின் பொய் பவுலிங் எடுபடவில்லை, முதலில் ஒரு பந்து கையிலிருந்து நழுவி இடுப்புயர புல்டாஸ் ஆக பொலார்ட் அதை மாட்டடி அடித்து சிக்ஸருக்கு தூக்கினார். அடுத்த பந்து ஃப்ரீ ஹிட், பவுன்சர் வீசினார் பிராவோ, பொலார்ட் தூக்கி அடிக்க தீபக் சாஹர் லெக் திசையில் மிட்விக்கெட்டில் கேட்சை விட்டார், இதனால் கூடுதல் ரன் வர 3 ரன்களானதோடு பாண்டியா ஸ்ட்ரைக்குகு வந்ததுதான் சிஎஸ்கேவின் தோனியின் தலைவிதியை மாற்றியது.
பிராவோவின் யார்க்கரை ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸ் பறக்க விட்டார் பாண்டியா, தோனி ஷாட்டையும் பந்தையும் பார்த்தார். அடுத்து ஒரு பவுண்டரி, பிறகு கடைசி பந்து தேர்ட் மேனுக்கு மேல் ஒரு சிக்ஸ். ஹர்திக் பாண்டியா கலக்கி விட்டார், கடைசி ஓவரில் 29 ரன்கள் சாத்துமுறை நடந்தது பிராவோவுக்கு. 141லிருந்து 170க்கு முன்னேறியது மும்பை. ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள். பொலார்ட் 7 பந்துகளில் 17 ரன்கள். மும்பை 170/5.
இப்படியாக பிரமாதமாக பேட் செய்த ஹர்திக் பாண்டியா பிறகு பந்து வீச்சில் தோனி, ஜடேஜா, பிறகு தீபக் சாஹர் ஆகியோரை வீழ்த்தி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார். முன்னதாக அபாய வீரர் குவிண்டன் டி காக் (4), ரோஹித் சர்மா (13), யுவராஜ் சிங் (4) ஆகியோர் விரைவில் நடையைக் கட்ட மும்பை இந்தியன்ஸ் 9வது ஓவரில் 50/3 என்று சரிவு கண்டது, பிறகு குருனால்-சூரிய குமார் கூட்டணி 8 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தனர். 18 ஓவர்களில் 125/5 என்று இருந்த மும்பை இண்டியன்ஸ் ஹர்திக் காட்டடியில் 2 ஒவர்களில் 45 ரன்களை விளாசித்தள்ளியது. தீபக் சாஹர் நன்றாக வீசியும் தோனி அவரை கடைசி ஓவரில் பயன்படுத்தவில்லை, அனைத்துக்கும் மேலாக ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தியும் 2 ஓவர்களே வீசினார். அதில் 10 ரன்களையே அவர் விட்டுக் கொடுத்திருந்தார். என்னாச்சு தோனி கேப்டன்சிக்கு?
சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்ச்சி:
சிஎஸ்கேவின் தொடக்க வீரர் அம்பதி ராயுடு, பெஹண்டார்ப் வீசிய முதல் ஒவரில் கூடுதலாக எழும்பிய பந்தில் எட்ஜ் ஆகி டக் அவுட் ஆகி தன் உலகக்கோப்பை வாய்ப்பை மேன் மேலும் கேள்விக்குட்படுத்தி வருகிறார். அடுத்த மலிங்கா ஓவரில் வாட்சன் 5 ரன்களில் பாயிண்டில் பொலார்டின் அதியற்புத, கேட்சுக்கு வெளியேறினார். இதைவிடவும் திகைப்பூட்டும் கேட்சில் பொலார்ட் ரெய்னாவை (16) வெளியேற்றியதுதான் சிறப்பு. பாயிண்டை நோக்கி ரெய்னா தூக்கி அடிக்க பந்து பொலார்டைத் தாண்டி உயரமாகச் சென்றது ஆனால் எம்பிய அவரது கை ஒரு மலரைப் பறிப்பது போன்று பந்தை பறித்தது சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சிதான்.
5 ஒவர்களில் 33/3 என்றால் தோனி எப்படி ஆடுவார், அப்படித்தான் ஆடினார்...இவரும் ஜாதவ்வும் சரியாக ஆடவில்லை, அந்த அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு ஒன்றுமில்லை தோனி தன் ஃபயர் பவரை காட்டியிருந்தால் அது ஒன்றுமில்லை, ஆனால் மனசிருந்தால்தானே மார்க்கம்! ஜாதவ்வும் இவரும் 55 பந்துகளில் 54 என்று ஆடியது புரியாத புதிர்தான். இவர்கள் கூட்டணி முடியும் போது தேவைப்படும் ரன் விகிதத்தை ஓவருக்கு 14 ரன்களுக்கும் மேல் ஆனது. 21 பந்துகளில் 12 ரன்கள் என்று தோனி தடவல், ஜாதவ் முதலில் தோனியுடன் ஆமை வேகத்தில் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளை அடித்திருந்தார், கடைசியில் 54 பந்துகளில் 58 ரன்கள் என்று அவர் 6வது விக்கெட்டாக 18வது ஓவரில் விழுந்தார்.
சில நேரங்களில் தோனி ஆட்டத்தின் போக்குக்கு எதிராக தன் அதிரடி ஆட்டத்தைக் காட்டி பயமுறுத்த வேண்டும், ஆனால் அவரோ எப்போது வேண்டுமானாலும் நான் சிக்ஸ் அடிப்பேன் என்று ஆடுவது எல்லா சமயங்களிலும் கை கொடுக்காது, இப்போதெல்லாம் பவுலர்கள் அவரை ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஐபிஎல்-ஐ விடுவோம், சர்வதேச கிரிக்கெட்டிலும் பெரிய இலக்குகளை இனி தோனியை நம்பி விரட்டுவது கடினம்.
வாட்சன், ஜாதவ், பிராவோ விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தினார், தோனி, ஜடேஜா, சாஹர் விக்கெட்டுகளை பாண்டியா வீழ்த்தினார். 170 ரன்களுக்கு மூச்சு திணறி கடைசியில் லொட்டென்று கீழே விழுந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்திய அணியின் டாப் 3, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி பார்மில் இல்லை, மாற்று ஓப்பனர் ராகுல் பார்மில் இல்லை, ராயுடுவுக்கு பேட்டிங் மறந்து போயுள்ளது. இவர்கள்தான் உலகக்கோப்பையில் இருக்கப்போகிறார்களா? கோலியை விடுவோம், அவர் தனி ரகம், மற்றவர்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT