Published : 23 Apr 2019 11:05 AM
Last Updated : 23 Apr 2019 11:05 AM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. வெளி மைதான ஆட்டங்களில் அடுத்தடுத்து இரு தோல்விகளை பெற்ற நிலையில் தனது சொந்த மைதானத்தில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது சென்னை அணி.
மேற்கொண்டு ஒரு வெற்றியை வசப்படுத்தினால் பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக கால்பதித்து விடலாம் என்ற நிலையில் அடுத்தடுத்து இரு தோல்விகளால் சற்று தேக்கம் அடைந்துள்ளது சென்னை அணி. கடந்த சீசனில் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் இருந்து சீரான ஆட்டம் வெளிப்படாதது அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துள்ளது.
இந்த சீசனில் 10 ஆட்டங்களில் 147 ரன்கள் சேர்த்துள்ள வாட்சன், 192 ரன்கள் சேர்த்துள்ள அம்பதி ராயுடு, 207 ரன்கள் சேர்த்துள்ள சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களது விக்கெட்களை எளிதாக இழப்பது நடுவரிசை வீரர்களுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தோனியின் மீதே அணியின் ஒட்டுமொத்த சுமையும் விழுகிறது. இந்த சீசனில் 314 ரன்கள் சேர்த்துள்ள தோனி 3 முறை அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார். இதில் இரு முறை வெற்றி கிடைத்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டிருந்தார். இதேபோல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தின் போது 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் தோனி பொறுப்புடன் விளையாடி 58 ரன்கள் சேர்த்து வெற்றி தேடிக்கொடுத்தார்.
நேற்றுமுன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில் தோனி மட்டையை சுழற்றிய விதம் அனை வரையும் மிரளச் செய்தது. ஏறக்குறைய சாத்தியமில்லாத சூழ்நிலையில் தோனி தனது அதிரடியில் அணியை வெற்றியின் நுனிக்கு கொண்டு சென்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக கடைசி பந்தில் வெற்றி நழுவியது.
அந்த ஆட்டத்தில் 48 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய தோனியிடம் இருந்து மீண்டும் ஒரு மிரட்டலான ஆட்டம் வெளிப்படக்கூடும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் அணியின் வலு அதிகரிக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வாட்சன் நீக்கப்பட்டு சேம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஹர்பஜன் சிங்கும் விளையாடும் லெவனுக்கு திரும்பக்கூடும்.
ஹைதராபாத் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணிக்கு டாப் ஆர்டர் பேட்டிங் பிரச்சினையை கொடுப்பது போன்று ஹைதராபாத் அணிக்கு நடுவரிசை பேட்டிங் பெரிய பலவீனமாக உள்ளது. அணியின் பேட்டிங்கானது ஒட்டுமொத்தமாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை நம்பியே உள்ளது.
இந்த சீசனில் டேவிட் வார்னர் 517 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 445 ரன்களையும் வேட்டையாடி உள்ளனர். அணியின் வெற்றி யில் பிரதான பங்கு வகித்து வரும் இவர்கள் இருவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப் படக்கூடும். பேர்ஸ் டோவுக்கு இந்த சீசனில் இன்றைய ஆட்டம்தான் கடைசி.
ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகுவதற்கு அவர், இங்கிலாந்து புறப் பட்டுச் செல்கிறார். இதனால் தனது கடைசி ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை மட் டையை சுழற்றுவதில் ஜானி பேர்ஸ்டோ தீவிரம் காட்டக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT