Last Updated : 20 Apr, 2019 09:59 AM

 

Published : 20 Apr 2019 09:59 AM
Last Updated : 20 Apr 2019 09:59 AM

2 ஆண்டுகளுக்குப் பின் சதமடித்த கோலி: அதிர வைத்த ரஸல், ராணா முயற்சி வீண்:பெங்களூரு ப்ளே-ஆப் கனவு பலிக்குமா?

விராட் கோலியின் அதிரடியான சதம், மொயின் அலியின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால், கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின்   35-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

இதன் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 9 போட்டிகளில் 4 வெற்றிகள், 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வாரத்தின் தொடக்கத்தில் 2-வது இடத்தில் இருந்த கேகேஆர் அணி அடுத்தடுத்து 4 தோல்விகளால் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அதேசமயம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றிகள், 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளும், மற்ற அணிகளின் தோல்வியும் ப்ளே-ஆப் சுற்றுக்கனவை முடிவு செய்யும். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணியின் ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது, கனவு கலையவில்லை.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு  213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆர்சிபி அணிக்கு இந்தபோட்டியில் கிடைத்த வெற்றி போனஸ் போன்றதுதான். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால் ரஸல் ஆட்டத்தால், வெற்றி கேகேஆர்பக்கம் சென்றிருக்கும். வெற்றிக்காக ரஸல் அடித்த ஒவ்வொரு ஷாட்களின் வேகமும், அசுரத்தனமாக இருந்தது. கொல்கத்தா அணிக்கு கிடைத்த தோல்வி என்பதைக் காட்டிலும் ரஸலின் முயற்சிக்கு கிடைத்த தோல்விதான் என்று சொல்ல முடியும்.

அதேசமயம் ஆர்சிபி அணியின் நேற்றைய நாள் கோலியுடையது என்று சொல்லலாம். கோலியின் இயல்பான ஆட்டத்தை காண காத்திருந்தவர்களுக்கு நேற்று விருந்தாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்களையும் கோலி மிக நேர்த்தியாக அடித்தது பார்க்க அற்புதமாக இருந்தது. அவரின் கவர் டிரைவ், லாங் ஆன், ஸ்ட்ரைட் ஷாட்கள் பார்ப்பதற்கு அழகு.

2ஆண்டுகளுக்குப் பின்

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கடந்த 2016-ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் அதிரடியாக சதம்  அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அவர் அடிக்கும் 5-வது சதம் இதுவாகும். அரைசதம் அடிக்க 40 பந்துகளை எடுத்துக்கொண்ட கோலி, அடுத்த 50 ரன்களை அடிக்க 17 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். 58 பந்துகளில் சதம் அடித்த கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதில் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.

மொயின் அலி காட்டடி

கோலியுடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்த மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும். இவர்கள் இருவரும் சேர்த்த ரன்கள் தான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 43 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்தனர்.

ஒரு கட்டத்தில் 10 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களுடன் ஆர்சிபி அணி இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் கோலி, மொயின் அலியின் அதிரடியான ஆட்டத்தால் 143 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 91 ரன்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் சீசனில் கடைசி 10 ஓவர்களில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

நீண்ட இடைவெளிக்குப்பின் ஆர்சிபி அணிக்குத் திரும்பிய வேகப்புயல் டேல் ஸ்டெயின் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி அளித்து விக்கெட்டுகளை வீழ்த்தியது அந்த அணிக்குநெருக்கடியை ஏற்படுத்தியது. மிகப்பெரிய ஸ்கோர் ஒருபக்கம் அடித்திருந்தது பாதுகாப்புதான் என்கிறபோதிலும், தொடக்கத்திலேயே ஸ்டெயின் விக்கெட்டை வீழ்த்தியது பலமாகும்.

ப்ளே ஆப் கனவு பலிக்குமா

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றுவிடும் என்று கூறிவிட முடியாது. ஆனால், பிற அணிகளுக்கான ப்ளே-ஆப் சுற்றை தடை செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. 2-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா அணி தற்போது  6-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

பந்துவீச்சு மோசம்

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை நேற்றையப் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. கடந்த போட்டியில் நன்கு பந்துவீசிய பெஹரன்டார்ப் ஏனோ எடுக்கவில்லை. கடந்த போட்டியில் விராட் கோலியை எளிதாக வீழ்த்தினார் பெஹரன்டார்ப். ஆனால், இந்த போட்டியில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் கோலிக்கு வலைப்பயிற்சி அளிப்பதுபோல்தான் பந்துவீசினார்கள். ஐபிஎல் போட்டிக்கான தரத்துடன் பந்துவீசாமல், உலகக்கோப்பைப் போட்டிக்கு கோலியை ஃபார்முக்கு கொண்டுவருவதுபோல்தான் பந்துவீச்சு இருந்தது.

ரஸல் தோள் மீது சவாரி

கொல்கத்தா பேட்ஸ்மேன்கள், ஒவ்வொரு போட்டியிலும் ரஸின் தோளை நம்பியை கேகேஆர் அணி பயணிப்பது தவறான விஷயமாகும். தொடக்கத்தில் கேகேஆர் அணி இரு வெற்றிகளைப் பெறுவதற்கு உதவி ரஸலின் அதிரடி ஆட்டம், அடுத்தடுத்த ஆட்டங்களிலும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது, ரஸல் இருக்கார்ல என்ற தொனியில் சக வீரர்களும் ஆட்டமிழந்து செல்லும் போக்கு தென்படுகிறது.

ரஸல் களமிறங்கும்போது வெற்றிக்கு 48 பந்துகளில் 133 ரன்கள் தேவைப்பட்டது. தோள்பட்டை வலியில் அவதிப்பட்டாலும் ரஸல் தனது காட்டி தர்பாரில் ஆர்சி பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார்,

இவருக்கு துணையாக ராணாவும் சளைக்காமல் விளாசினார். ஆனால், கடைசி ஓவர்வரை போராடிய ரஸலின் முயற்சி வீணானது. 25 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ரஸல் ஆட்டமிழந்தார். 48 பந்துகளில் இருவரும் சேர்ந்து 118 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர் ராணா 46 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

கடைசி ஓரு ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்பது எளிதில் சாத்தியமற்றது. அதிலும் ரஸல் ஸ்டிரைக்கர் இடத்தில் இருந்தால்கூட வெற்றியைப் பற்றி சிந்திக்கமுடியும். ஆனால், மொயின் அலி வீசிய முதல் பந்தை ராணா வீணடித்தபோது, ரஸல் மனம் தளர்ந்துவிட்டார். ஏனென்றால், அடுத்த 5 பந்துகளும் சிக்ஸர் அடிக்க வேண்டிய சூழல் வந்தது. ஆனாலும், மனம்தளராக ரஸல் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். ஆனால் மூன்றாவது பந்தை அடிக்க முடியாதபோது, கேகேஆர் அணி தோல்வி உறுதியானது.

கொல்கத்தா அணியின் சுனில் நரேன், கிறிஸ் லின், உத்தப்பா போன்றோர் தொடர்ந்து இந்த சீசன் முழுவதும் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே தங்கள் பங்களிப்பைச் செய்துவருவது அணியின் வீழ்ச்சிக்குத்தான் வித்திடும். இந்தப் போட்டியில் கில், உத்தப்பா இருவரும் இணைந்து 30 பந்துகளுக்கு 10 ரன்களைச் சேர்த்ததுதான் கடைசியில் நெருக்கடிக்கு தள்ளியது. இருவரும்  அடித்து ஆடியிருந்தால், ஸ்கோர் உயர்ந்திருக்கும். 

குல்தீப் பாவம்

தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பை நல்ல வியூகங்களுடன் செய்யக்கூடியவர் என்று பேசப்பட்ட நிலையில் நேற்று ஏன் எந்த விஷயத்தையும் சிந்திக்காமல் செய்தார் எனத் தெரியவில்லை. குல்தீப் யாதவ் ஓவரை அடித்து நொறுக்கிறார் மொயின் அலி என்று தெரிந்தபின்பும் அவருக்கே தொடர்ந்து ஓவரை அளித்து 4 ஓவர்களில் 59 ரன்கள் கொடுக்கச் செய்து அவரின் நம்பிக்கையை குலைத்துவிட்டார்.

ஆனால், குல்தீப் யாதவைக் காட்டிலும் அனுபவம் வாய்ந்த பியூஷ் சாவ்லாவுக்கு ஒரு  ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு தந்தது ஏன் எனத் தெரியவில்லை. டெத் ஓவர்களை குல்தீப் நன்குவீசக்கூடியவர் அப்போது குல்தீப்புக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஸ்டெயின் வீசிய முதல் ஓவர் முதல்பந்திலேயே லின் வழங்கிய கேட்ச்சை ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டோனிஸ் தவறவிட்டார். ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தத் தெரியாத லின், அதேஓவரின் கடைசிப்பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த கில், நரேனுடன் சேர்ந்தார். நரேன் அவ்வப்போது சில பவுண்டரிகள் அடித்தார். ஆனால், களத்தில் நிலைக்காத நரேன் 18 ரன்களில் சைனிவீசிய 4-வது ஓவரில் படேலின் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து உத்தப்பா வந்து கில்லுடன் சேர்ந்தார். கில்லும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஸ்டெயின் வீசிய 5-வது ஓவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் வெளியேறினார். உத்தப்பாவும், ராணாவும் ஓரளவுக்கு நிதானமாக ஆடினார்கள். பவர்-ப்ளே ஓவரில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்திருந்தது.

உத்தப்பா நிதானம் காட்ட ராணா அதிரடியாக ஷாட்களை கையாண்டார். இதனால், ஸ்கோர்  ஓரளவுக்கு உயர்ந்தது. ஸ்டோனிஸ் வீசிய 12-வது ஓவரில் நெகியிடம் கேட்ச் கொடுத்து உத்தப்பா 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரஸல் களமிறங்கி, ராணாவுடன் சேர்ந்தார். கொல்கத்தா வெற்றிக்கு 48 பந்துகளுக்கு 133 ரன்கள் தேவைப்பட்டது. ரஸல் தனது இயல்புக்கு திரும்பினார்.

ரஸல் அதிரடி

சாஹல் வீசிய 13-வது ஓவரில் ரஸஸ் ஒருசிக்ஸரும், ராணா பவுண்டரியும் விளாசினார்கள். மீண்டும் சாஹல் பந்துவீச்சு இரையானது. சாஹல் வீசிய 15-வது ஓவரில் ரஹஸ் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து வானவேடிக்கை நிகழ்த்தினார்.

சைனி வீசிய 16-வது ஓவரில் ராணா 2 சிக்ஸர்களும், பவுண்டரியும் விளாசி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிராஜ் வீசிய 17-வது ஓவரில் ரஸல் ஒருசிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

ஸ்டியின் வீசிய 18-வது ஓவரில் ராணா 2 சிக்ஸர்களும், பவுண்டரியையும் பறக்கவிட்டு அதிர்ச்சி அளித்தார். ஸ்டோனிஸ் வீசிய 19-வது ஓவரில் ரஸல் மீண்டும் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. மொயின் அலி பந்துவீசினார். ஒருபந்தை வீணாக்கினாலும் ஆட்டம் கொல்கத்தாவுக்கு நெருக்கடியாகச் செல்லும் என்கிற நிலையில் முதல்பந்தை ராணா வீணாக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன், 3-வது பந்தில் ரஸல் சிக்ஸர் அடித்தார். 4-வது பந்தில் ரன் ஏதும் செல்லவில்லை. 5-வது பந்தில் ரஸல் ரன் அவுட் செய்யப்பட்டு, 65 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் 9 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது. பெங்களூரு தரப்பில் ஸ்டெயின்  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோலி பொறுப்பு

முன்னதாக, பெங்களூரு அணிமுதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் படேல்(11), நாத்(13) ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு கோலியும், மொயின் அலியும் இணைந்தனர். இருவரும் சேர்ந்தபின்தான் ஸ்கோர் உயரத் தொடங்கியது. பவர்ப்ளேயில் பெங்களூர் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 43 ரன்களும், 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்திருந்தது.  விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதன்பின் மொயின் அலியும், கோலியும் சேர்ந்து ரன்வேகத்தை உயர்த்தினார்கள். மொயின் அலியின் அதிரடியைப் பார்த்த கோலி அவருக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கினார்.

குல்தீப்பை அழவைத்த  மொயின் அலி

மொயின் அலி நேற்று குல்தீப் யாதவ் ஓவரை அடித்து நொறுக்கிவிட்டார். குல்தீப் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் மொயின் அலி் அடித்தார். குல்தீப் வீசிய 16-வது ஓவரில் மொயின் அலி 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி நம்பிக்கையை குலைத்தார். ஆனால், கடைசிப்பந்தில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஓவர் முடிந்தபின் குல்தீப் கண்ணீர் விட்டது தனிக்கதை.

அடுத்துவந்த ஸ்டோனிஸ், கோலியுடன் சேர்ந்தார். அதன்பின் கோலி அதிரடியை வெளிப்படுத்தினார். கடைசி 5 ஓவர்களில் ஸ்டோனிஸ், கோலி இருவரும் சேர்ந்து 91 ரன்கள் சேர்த்தனர். கோலி 17 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி 57 பந்துகளில் சதம் அடித்து ஆட்டமிழந்தார் ஸ்டோனிஸ் 17 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 213 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் ரஸலைத் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x