

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கே.எல்.ராகுலின் அபார 64 பந்து சதத்தினால் 197 ரன்கள் சேர்த்தும் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம் பொலார்டின் அனாயாச அதிரடி ஆட்டம்தான்.
கடைசி 10 ஓவர்களில் 133 ரன்களைத் தோற்க ‘உஷ் கண்டுக்காதீங்க’ தருணம் நிறைய இருந்தாலும் பொலார்டின் அதிரடியை மறக்க முடியாது. 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் 10 சிக்சர்களை அவர் விளாசி 83 ரன்கள் என்ற அவரது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை எட்டினார். சாம்கரண், ராஜ்புத் 8 ஓவர்களில் 106 ரன்களை வாரி வழங்கினர். இதில் 8 சிக்சர்கள் 9 பவுண்டரிகளையும் இருவரும் வாரி வழங்கினர்.
ஷமி மிகப்பிரமாதமாக வீசி 4-0-21-3 என்று அசத்தினார். கடைசி ஓவரில் மட்டும் ராஜ்புத் 4 புல்டாஸ்களை வீசியது உஷ் கண்டுக்காதீங்க ஐயத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு பெரிய ஹை வோல்டேஜ் அணிகள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகும், தோற்கும் நிலையிலிருந்து வெற்றி பெற்றால் ஐயம் ஏற்படவே செய்யும்.
இந்நிலையில் பொலார்டின் 10 சிக்சர்களில் 3 சிக்சர்களை அஸ்வினை மட்டும் அடித்தார், அதுவும் 14வது ஓவரில் அடுத்தடுத்து அஸ்வின் பந்துகளை சிக்சர் பறக்க விட்டார் பொலார்ட்.
ஆட்டம் முடிந்த பிறகு இந்த வெற்றி குறித்து பொலார்ட் கூறியதாவது:
டவுன் ஆர்டரில் முன்னால் இறங்கினேன். வான்கடேயில் பேட்டிங் செய்வது என்றால் எனக்கு கொண்டாட்டம்தான். நடுவில் அஸ்வின் ஓவரில் சில சிக்ஸர்களை விளாசுவது அவசியம் என்றும் அப்படி சிக்சர்களை அடிக்க முடிந்தால் நாம் ஆட்டத்த்துக்குள் வந்து விடுவோம் என்று கருதினோம்.
பந்து ரசிகர்களிடையே ஸ்டாண்ட்ஸில் போய் விழுவதைப் பார்க்க எப்போதுமே எனக்கு கொள்ளை ஆசை.
அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான், அடுத்து 4 மணி போட்டி இருக்கிறது. அவரிடம் கேப்டன்சியை இந்த வெற்றியுடன் அளிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு கூறினார் பொலார்ட்.