Last Updated : 12 Apr, 2019 10:35 AM

 

Published : 12 Apr 2019 10:35 AM
Last Updated : 12 Apr 2019 10:35 AM

கேரம் விளையாட்டில் சாதிக்கும் மாணவர்!

கல்வி, விளையாட்டு என அனைத்திலும் சாதித்து வருகிறார்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர் கே.நவீன்குமார், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில்,  6-12 வயதுக்கு உட்பட்டோருக்கான  `கேடட்’ பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவரின் தந்தையும், கேரம் விளையாட்டுப் போட்டி பயிற்சியாளருமான என்.கண்ணனை சந்தித்தோம். “நான் வாகன ஓட்டுநராகப் பணிபுரிகிறேன். சிறு வயது முதல் கேரம் விளையாட்டில் ஆர்வம் அதிகம். முறையாக கேரம் பயிற்சி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். நாமக்கல் மாவட்ட கேரம் விளையாட்டு சங்க பயிற்சியாளராகவும் உள்ளேன். கேரம் விளையாட்டுக்கு தனியாக பயிற்சி மையமும் ராசிபுரத்தில் நடத்தி வருகிறேன்.

எனது இரு மகன்களுக்கும் கேரம் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. மூத்த மகன் கே.சபரிநாதன், ப்ளஸ் 2 படித்து வருகிறார்.

மாவட்ட அளவி லான கேரம் போட்டியில் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். மாநிலஅளவிலான போட்டியிலும் கலந்து  கொண்டுள்ளார்.

இளைய மகன் கே.நவீன்குமார், ராசிபுரம் நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் 4 வயது முதல் கேரம் விளையாடி வருகிறார். 4-ம் வகுப்பு  படிக்கும்போது, மண்டல, மாவட்ட அளவிலான போட்டிகளில்,  6 முதல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான `கேடட்’ பிரிவில் கலந்துகொண்டு,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் இருமுறை மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளார். மண்டல அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

பின்னர், மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்றார். கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, தேசிய கேரம் விளையாட்டு சம்மேளனம் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தேசிய அளவிலான போட்டி நடைபெற்றது. இதில்,  தமிழகம் சார்பில் `கேடட்’ பிரிவில் பங்கேற்ற நவீன்குமார், முதலிடம் வென் றார்.  

இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து இருவர் கலந்து கொண்டனர். அதில் நவீன்குமாரும் ஒருவர். ஒற்றையர் பிரிவில் நவீன்குமார் பங்கேற்றார். எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொண்டு,  சாம்பியன் பட்டம் வெல்வதே நவீன்குமாரின் இலக்கு”  என்றார்.

மாணவர் கே.நவீன்குமார் கூறும்போது, “பள்ளி நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வேன். விடுமுறை நாட்களில் தொடர்ச்சியாக நாள் முழுவதும் பயிற்சி பெறுவேன். சர்வதேச அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதே குறிக்கோள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x