Published : 06 Apr 2019 08:09 AM
Last Updated : 06 Apr 2019 08:09 AM

ஆந்த்ரே ரஸல் மீண்டும் அதிரடி‘அதகளம்’- வெறும் ‘பாடி லாங்குவேஜ்’ ஆன கோலி கேப்டன்சி: ஆர்சிபியின் 5வது தொடர் தோல்வி

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 17வது போட்டியில் 205 ரன்களை எடுத்தும் கோலியின் ஆர்சிபி அணி வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 பந்துகளை மீதம் வைத்து 206/5 என்று அபார வெற்றி பெற்றது.

 

பிட்ச் அறிக்கையில் மெக்கல்லம் 180 சராசரி ஆனால் 200+ பிட்ச் என்று மிகக் கச்சிதமாக கணித்தார். டாஸில் தினேஷ் வென்று கோலியை பேட்  செய்ய அழைத்தது மாஸ்ட்ர் ஸ்ட்ரோக்.

 

ஆட்ட நாயகன் ஆந்த்ரே ரஸல் 13 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசி சில நிமிடங்கL கோலிக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாமல் அடித்து கண்களில் விரலை விட்டு ஆட்டிவிட்டார். ஆர்சிபி பவுலர்கள் பவுலிங்கை ரஸல்  பேட் இல்லாமல் வெறும் கையாலேயே சிக்ஸ் அடிப்பார் போல் தெரிகிறது.

 

கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தாவுக்குத் தேவை 72 ரன்கள். கடைசி 4 ஒவர்களில் 66 ரன்கள் தேவை. கடைசி 3 ஓவர்கள்ல் 53 ரன்கள் தேவை. தினேஷ் கார்த்திக் நவ்தீப் சைனி வீசிய 17வது ஒவரில் ஒரு அபாரமான பவுண்டரி மற்றும் அற்புத மிட்விக்கெட் சிக்ஸருடன் 19 ரன்களை 15 பந்துகளில் அடித்து கடைசி பந்தில் மிட்விக்கெட்டில் சாஹல் கேட்சிற்கு வெளியேறினார்.. கடைசி 3 ஓவர்களில் தேவை 53 ரன்கள், ஆந்த்ரே ரஸல் என்ற டைனமைட் 1 ரன்னில் இருந்தார்.

 

கடைசி 3 ஓவர் அதிரடி அதகளம்: சிராஜ்  ‘சஸ்பெண்ட்’

 

18வது ஓவரில் மொகமது சிராஜ் முதல் 2 பந்துகளை நன்றாகவே வீசினார் ரன் வரவில்லை. 3வது பந்து வைடு ஆனது. மீண்டும் 3வது பந்து இடுப்புக்கு மேல் வந்த ஃபுல் டாஸ், விடுவாரா ரஸல்  மைதானத்துக்கு வெளியே அடித்தார். ஒரு சிக்ஸ் அடி என்றால் 3 சிக்ஸ் தூரம் அடிக்கிறாயே என்று சிராஜ் ரஸலைப் பார்த்தார். ஆனால் 2வது பீமரை வீசியதற்காக சிராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

 

அந்த ஓவரை ஸ்டாய்னிஸ்தான் தொடர வேண்டியதாயிற்று வந்தவுடன் மெதுவான பந்தை வீச லெக் திசையில் காணாமல் போனது 6 ரன்கள். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் லாங் ஆஃபில் சிக்ஸ். ஸ்டாய்னிஸ் மீண்டும் வைடு வீசினார். ஆனால் அடுத்த பந்து ரஸல் சிங்கிள் எடுத்து எதிர்முனைக்குச் சென்றதால் அந்த ஓவரில் 23 ரன்களோடு முடிந்தது.

 

12 பந்துகளில் 30 ரன்கள் என்ற நிலையில் டிம் சவுதி 19வது ஒவரை வீசினார்.  பாவம் எந்த நேரத்தில் தன் கேப்டனிடமிருந்து பந்தை வாங்கினாரோ தெரியவில்லை. எங்கு போட்டாலும் அடி... மன்கட் செய்தவர் இருந்திருந்தால்  ‘அண்டர் ஆர்ம்’ கூட செய்திருப்பார்.

 

ஷுப்மன் கில்லை வைத்து 3 பந்துகளையாவது ஓட்டியிருக்கலாம், ஆனால் அவர் சிங்கிள் எடுத்து சிங்கத்திடம் ஸ்ட்ரைக்கை கொடுக்க காலை ஒதுக்கிக் கொண்டு ரஸல் லாங் லெக்கில் சிக்ஸ்.  அடுத்து வைடாக வீசினார் சவுதி ... எங்கு போட்டால் என்ன பேக்வர்ட் பாயிண்டில் சிக்ஸ். அடுத்து என்ன ஃபுல்டாஸ்தான் டீப் மிட்விக்கெட்டில் காணாமல் போனது பந்து. அடுத்த பந்தை சிக்ஸ் அடித்து அடித்து ‘போர் அடித்ததால்’ ஃபோர் அடித்தார் ரஸல். சரி எந்த இடத்தில் இன்னும் சிக்ஸ் அடிக்கவில்லை? பார்த்தார் ரஸல், சவுதியின் கடைசி பந்தை அவர் தலைக்கு மேல் சைட் ஸ்க்ரீனைத் தாண்டி சிக்ஸ் தூக்கினார்.  ஒரே ஒவரில் 4 சிக்ஸ் ஒரு பவுண்டரி மொத்தம் 29 ரன்கள். ஆர்சிபியின் 205 ரன்கள் சமன்.  கடைசி ஓவர் ஷுப்மன் கில்  ‘அடேடே’ சிங்கிள் எடுத்து ரொம்ப நேர்ம் ஆகிவிட்டதே என்று சிங்கிளில் வெற்றி பெற்றார். வெங்கலக் கடையில் யானை புகுந்தது போல் கொஞ்ச நேரம் கோலிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.  கோலி வெறும் ‘பாடி லாங்குவேஜ்’ பார்வையாளரானார்.

 

ரஸல் விக்கெட்டை வீழ்த்த கோலியிடம் எந்த ஒரு உத்தியும் இல்லை, யோசனையும் இல்லை ‘யோசனைகள் தீர்ந்து  போனது’ என்பார்களே அதுதான் கோலிக்கு நடந்தது. வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே, ‘வெறும் பாடி லாங்குவேஜ்தான்பா உள்ளுக்குள் ஒண்ணுமில்லப்பா’ என்று அதுதான் விராட் கோலி கேப்டன்சிஇல்லையென்றால் 5 போட்டிகளை தொடர்ச்சியாகத் தோற்க முடியுமா?

 

லின், ராணா, உத்தப்பா அபாரம்:

 

தொடக்கத்தில் சுனில் நரைன் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் என்று ஏதோ ஒரு வகையில் அதிரடி தொடக்கம் கொடுத்தார். கிறிஸ் லின் ஒரு கட்டத்தில் பேட்டிங்கை மறந்து விட்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு டைமிங்கில் திணறினார். கிறிஸ் லின் தொடக்க ஓவரில் சவுதியை 2 பவுண்டரிகள், பிறகு அவர் ஒவரிலேயே 3 பவுண்டரிகளையும் விளாசினார் லின். ராபின் உத்தப்பா, மொகமது சிராஜ் பவுலிங்கை நன்றாகக் கவனித்தார். சிராஜின்  2 ஓவர்களில் 28 ரன்கள் விளாசப்பட்டது. நரைன் அவுட் ஆன பிறகே உத்தப்பாவும் இவரும் கொஞ்ச நேரம் போராடினர். அதை கோலி நீட்டித்திருக்க வேண்டும். ஆனால் சாஹலைக் கொண்டு வர கிறிஸ் லின் ஒரு காட்டடியில் மைதானத்துக்கு வெளியே சிக்ஸ் அடிக்க ஆட்டத்தின் உத்வேகம் மீண்டும் லின் பக்கம் சாய்ந்தது.

 

 

ராபின் உத்தப்பாவும் விக்கெட் கீப்பருக்கு பின்னால் ஒரு ஹூக் ஷாட் பவுண்டரி பிறகு மிகப்பிரமாதமாக பாயிண்ட் - தேர்ட் மேன் இடைவெளியில் ஒரு அபார ‘டச்’ பவுண்டரி அடித்து நல்ல டச்சுக்கு வந்தார். இருவரும் 65 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஃப்ரீ ப்ளோயிங்காக அதாவது சரளமாக ஆடிய உத்தப்பா 25 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 33 ரன்களில் 10வது ஓவரின் 5வது பந்தில் பவன் நெகியிடம் ஆட்டமிழந்த போது ஆர்சிபி 93 ரன்கள் என்று விரட்டல் முனைப்பில்தான் இருந்தது.  கிறிஸ் லின் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 43 ரன்களை எடுத்து நெகியின் பந்தை அடிக்க மேலேறி வந்து சுய யார்க்கர் செய்து கொண்டு பவுல்டு ஆனார்.

 

மிடில் ஓவர்களில் சாஹல், நெகி இணைந்து 7.1 ஓவர்களில் 45 ரன்கள் 3 விக்கெட்டை பகிர்ந்து கொண்டனர், பவன் நெகி 21 ரன்களுக்கு 2 விக்கெட், ஆனால் அவரால் 4வது ஓவரை முடிக்க முடியவில்லை. நெகியை ராணா ஒரு பவுண்டரி ஒரு மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார்.  ராணா தினேஷ் கார்த்திக் 31 ரன்களைச் சேர்த்த போது ராணா 23 பந்துகளில் 37 ரன்கள் என்று ஒரு விரைவு கதி அதிரடியைக் காட்டி விட்டு சாஹலிடம் அவுட் ஆனார்,

தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு 15 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17 ஓவர்களில் 157/5. கடைசி 3 ஓவர்களில் 53 தேவை என்ற நிலையில்தான் ஆந்த்ரே ரஸலின் அதகள அதிரடி தொடங்கியது. ஒரு ஓவரில் 23 இன்னொரு ஓவரில் 29 ரன்கள், முடிந்தது ரகளை. சவுதி 4 ஓவர்களி 61 ரன்கள் விளாசப்பட்டார். ஸ்டாய்னிஸ் 10 பந்துகளில் 28 ரன்கள் விளாசப்பட சிராஜ் 2.2 ஒவர் 36 ரன்கள். இப்படிப்பட்ட பவுலர்களை வைத்துக்கொண்டு கோலியும் என்னதான் செய்வார் பாவம்!

 

கோலி, டிவில்லியர்ஸின் கிளாசிக்:

 

நல்ல பேட்டிங் பிட்சில், பந்து நின்று திரும்பாத பிட்சில் விராட் கோலி தன் வீரதீர ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  குறிப்பாக அவரது ஃபேவரைட் ராஜ கவர் ட்ரைவ்கள் கண்ணுக்கு எப்போதும் குளிர்ச்சியே. லாக்கி பெர்கூசன் வேகத்தை மைதானம் நெடுக அடித்தார் 3 அற்புத பவுண்டரிகள் அடித்தார். அனைத்தும் முறையான கிரிக்கெட் ஷாட்கள். 

பார்த்திவ் படேல் தன் பங்குக்கு சில ஷாட்களை ஆடியதோடு, கோலிக்கு ஸ்ட்ரைக்கும் கொடுத்தார், இவருக்கு ஒரு கேட்ச் விடப்பட்டது, கடைசியில் 8வது ஓவரில்  படேலை (25) எல்.பி. செய்தார் ராணா. குல்தீப் யாதவ் ஓவரில் டிவில்லியர்ஸுக்கும் கேட்ச் விடப்பட்டது. டிவில்லியர்ஸ் அப்போது 11 ரன்களில் இருந்தார். கொஞ்சம் ஸ்பின்னர்களிடம் திணறிக் கொண்டிருந்தார்.

 

 

பிறகு மாஸ்டர்ஸ் கோலி, டிவில்லியர்ஸ் இணைந்து பிரித்து மேய்ந்தனர், டிவில்லியர்ஸ் ஸ்பின்ன்ர்களை ஆடும் விதத்தை கண்டுபிடித்துக் கொண்டார், 84 ரன்களில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களை அடித்த விராட் கோலியின் இன்னிங்ஸ் உண்மையில் கண்ணுக்குக் குளிர்ச்சியானது, தூய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து.

 

இருவரும் இருந்த போது 7 ஓவர்களில் 94 ரன்கள் விளாசப்பட்டது.  கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி 56 பந்துகளில் 108 ரன்களை சேர்த்ததுதான் நேற்று ஆர்சிபி ரசிகர்களின் ஆறுதல் கோலி 84 ரன்களில் குல்தீப்பிடம் வெளியேறினார்.  டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 63 எடுத்து நரைனிடம் வெளியேறினார். ஸ்டாய்னிஸ் 200% ஸ்ட்ரைக் ரேட்டில் 14 பந்துகளில் 28 எடுக்க ஆர்சிபி 205/3.  சுனில் நரைன், குல்தீப் யாதவ் 8 ஓவர்களில் 61 ரன்களை விட்டுக் கொடுத்தனர், இந்த ஓவர்களை கொஞ்சம் பயன்படுத்தியிருந்தால் ஆர்சிபி ஒருவேளை 230 ரன்களை எடுத்திருக்கலாம்.

 

ஆட்ட நாயகன் அதகள ஆந்த்ரே ரஸல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x