Published : 04 Apr 2019 10:28 AM
Last Updated : 04 Apr 2019 10:28 AM
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. பிராவோவின் கடைசி ஓவரில் 29 ரன்கள் வந்ததும் அதற்கு முன்னதாக குருணால் பாண்டியா, பொலார்ட் ஆகியோருக்கு கேட்ச்களை விட்டதும், எப்போதுமே பெரிய அளவுக்கு சொல்ல முடியாத சிஎஸ்கேவின் சொதப்பல் பீல்டிங்கும் தோல்விக்குக் காரணமாக அமைந்தன.
14 ஒவர்களில் 82/3 என்று மும்பை திணறியது, அங்கிருந்து சென்னை மும்பை ஸ்கோரை எகிற அனுமதித்தது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது:
சில விஷயங்கள் எங்களுக்கு தவறாகிப் போனது. நன்றாகத் தொடங்கினோம் 12-13வது ஒவர் வரை கூட கட்டுப்பாட்டில்தான் இருந்தோம். அதன் பிறகு சில கேட்ச்கள் நழுவின, மிஸ்பீல்ட்கள் நடந்தன. முடிவு ஓவர்களில் பந்து வீச்சும் சரியாக வரவில்லை. நாங்கள் எப்போது டீம் மீட்டிங் போடுவதில்லை, தனித்தனியான உரையாடல்தான்.
இத்தகைய பிட்ச்களில் எந்த பவுண்டரிகளை தடுத்திருக்க முடியும் என்பதை நன்றாக பரிசீலித்திருக்க வேண்டும். செயல்படுத்ததில் எங்கு தவறு நிகழ்ந்தது என்பதையும் ஆராய வேண்டும்.
இன்னிங்ஸிற்கு இடையே வரும் இடைவேளையினால் உத்வேகம் போய்விடுகிறது என்பதை நான் ஏற்க மாட்டேன். இன்னிங்ஸ் பிரேக் என்பதும் அப்படித்தான், முதல் இன்னிங்ஸில் நன்றாக முடித்திருந்தாலும், திரும்பவும் பேட் செய்யும் போது நன்றாகத்தொடங்குவது அவசியம். உத்வேகமெல்லாம் ஒரு விஷயமல்ல.
பேட்டிங்கோ பவுலிங்கோ எதுவாக இருந்தாலும் சாதக சூழ்நிலைகளை அமைக்க வேண்டும். பிராவோவுக்கு லேசான காயம். எனவே அணிச்சேர்க்கையை கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
சில இடங்களில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை, ஆனால் தனிப்பட்ட வீரர்கள் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி, பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT