Published : 10 Apr 2019 12:45 PM
Last Updated : 10 Apr 2019 12:45 PM
சென்னையில் ஐபிஎல் விளையாட்டை முடித்துவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் வந்த தோனி சோர்வின் காரணமாக அங்கு தரையிலேயே படுத்துறங்கிய படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
கூடவே பதிவு செய்த கேப்ஷனில், இந்த சீசனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட்டு நேரம் நீண்டு கொண்டு செல்வதையும் சூசகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்கஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னையில் இருந்து புறப்பட்ட அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்தபோது அலுப்பின் காரணமாக சற்று நேரம் கண் அயர்ந்தார் தோனி.
தான் தூங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "ஐபிஎல் டைமிங்குக்கு பழகப்பட்ட பின்னர், காலை நேர விமானம் என்றால் இதுதான் நடக்கும்" என பதிவு செய்திருக்கிறார்.
ஐபிஎல் இந்த சீசனில் எல்லாப் போட்டிகளுமே குறிப்பிட்ட கால நேரத்தைவிட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டு விளையாடப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரஹானே, மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் இது தொடர்பாக தங்கள் ஆதங்கத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்லோ ஓவர் ரேட் காரணமாகவே போட்டிகளின் நேரம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் முகமது கைஃப்பும் இதை சுட்டிக்காட்டியிருந்தார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒவ்வொரு போட்டியுமே இரவு 12 மணி வரை நடக்கிறது. போட்டிகள் சரியான நேரத்தில் முடிவதை அம்பயர்களே உறுதி செய்ய வேண்டும். அணிகளும் எந்த வீரரை மைதானத்தில் எந்த இடத்தில் ஃபீல்ட் செய்வது என்பதை முடிவு செய்ய அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றன" எனக் கூறியிருந்தார்.
ஐபிஎல் போட்டிகளின் சாராம்சமே வேகம் தான். ஒவ்வொரு அணியும் 3 நாட்களில் 2 போட்டிகள் விளையாட வேண்டியிருக்கும். மேலும், பயண நேரம் வேறு வீரர்களுக்கு கூடுதல் அலுப்பை ஏற்படுத்தும்.
இந்த சூழலில்தான் ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT