Published : 22 Apr 2019 02:32 PM
Last Updated : 22 Apr 2019 02:32 PM
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 39வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் பெங்களூரு கேப்டன் கோலிக்கு கிலி காட்டியது, காட்டியவர் தோனி, ஆனால் கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆட்டத்தை ஆர்சிபிக்கு விட்டுக் கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆம்! 19வது ஓவரில் 3 சிங்கிள்களை தோனி ஓட மறுத்தார். பிராவோ ஒன்றும் அனுபவமற்ற வீரரல்ல. அவரும் எடுத்த எடுப்பிலேயே அடிக்கக் கூடியவர்தான் ஆனால் தோனி காரணம் கூறுகிறார் ‘பிட்ச் மந்தமாக இருந்ததால் புதிய பேட்ஸ்மென்கள் எடுத்த எடுப்பிலேயே அடிப்படு சிரமம்’ என்று ஒரு புது விளக்கம் கொடுக்கிறார். பிராவோவின் அனுபவம் தோனியின் அனுபவத்துக்கு சற்றும் குறைந்ததல்ல, அவர் உலக லீகுகளில் இத்தகைய சூழ்நிலைகளில் ஆடி வென்று கொடுத்தவர். தோனியாவது வெறும் ஐபிஎல் பிட்ச்களில் தான் ஆடுகிறார், ஆனால் பிராவோ உலகம் முழுதும் உள்ள டி20 பிட்ச்களில் ஆடி வருகிறார். இத்தகைய பிட்ச்கள் பற்றி அவருக்குத் தெரியாதா? அல்லது அவருக்கு இந்த சூழ்நிலையில்எப்படி ஆடுவது என்று தெரியாதா?
அன்று நியூஸிலாந்தில் குருணால் பாண்டியாவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தினேஷ் கார்த்திக் ஆடினார், இந்திய அணி தோற்றது, தோல்விக்கு தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக் கொடுக்காததுதான் காரணம் என்று குற்றச்சாட்டு ரசிகர்களால் முன் வைக்கப்பட்டது, ‘தோனி இருந்திருந்தால்..’ என்றெல்லாம் பேசப்பட்டது, இப்போது இதே குற்றத்தை தோனி செய்துள்ளாரே அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
கடைசி 6 பந்துகளில் 26 ரன்கள் தேவை 3 சிக்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு 2 அடித்தாகி விட்டது, கடைசியில் எந்த கொம்பு பவுலர் வீசினாலும் வெற்றி எளிது, சிங்கிள் நிச்சயம், ஆனால் ஷாட்டை மிஸ் செய்வது என்றால் அது என்னவாம்? ஆயிரத்தெட்டு விளக்கங்களை தோனி அளித்தாலும், ‘கடைசி ஓவரில் தோனி கிலி காட்டிவிட்டார்’ என்று விராட் கோலி விதந்தோதினாலும் ஐபிஎல் போட்டிகள் பற்றிய அடிப்படை ஐயங்களுக்கு இடம் கொடுப்பதாகத்தான் இது அமைகிறது. கிரிக்கெட் ஆட்டம் என்பதே இத்தகைய பிரமாதமான நிச்சயமின்மைகள் கொண்டதுதான், அதுதான் கிரிக்கெட்டின் தனித்தன்மை என்று கூறிக்கொண்டாலும், இதனால், உண்மையான விறுவிறுப்பு, உண்மையான கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி திறமைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்று நினைக்கும் ரசிகர்கள், மக்கள் கூட்டங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
2018 ஐபிஎல் தொடரில் பிராவோ இதைவிட மோசமான ஒரு தருணத்திலிருந்து தன் அதிரடி மூலம் வென்று கொடுக்கவில்லையா? ஐபிஎல் கிரிக்கெட் ஒரு கார்ப்பரேட் கிரிக்கெட், இதில் கிரிக்கெட்டை விட வர்த்தகநலன்கள் முக்கியம், இந்திய கேப்டன், ஆர்சிபி கேப்டன் கோலி அணி தோற்றுக்கொண்டேயிருந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பேயில்லை என்றால் அது வர்த்தக நலன்களை பாதிக்கும். அதனால் ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பை ஓரளவுக்கு சாத்தியம் என்ற நிலையிலேயே வைத்திருப்பது கிரிக்கெட்டை மீறிய வணிகநல தர்க்கமாகும். மேலும் உலகக்கோப்பையை முன் வைத்து கோலி, தோனி, வர்த்தகம் ஏற்கெனவே களை கட்டி விட்டது. இதில் இந்திய கேப்டன் கோலி உலகக்கோப்பைக்கு முன் படுமோசமாக ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறினால் அது ஸ்பான்சர்களின் வர்த்தக நலன்களுக்கு நல்லதல்லவே! உண்மையில் ஐபிஎல் அணிகளுக்கு இடையே, திறமைகளுக்கு இடையே, மட்டைக்கும் பந்துக்கும் இடையே நடக்கும் போட்டியா அல்லது ஸ்பான்சர்களுக்காக ஸ்பான்சர்களால் அவர்களுக்கு இடையே நடத்தப்படும் போட்டித் தொடரா என்ற ஐயம் எழுவது விமர்சனப் பார்வையாளர்களுக்கு இயல்பானதே.
இந்த நலன்களை வெளிப்படையாகவா கூற முடியும்? அதனால்தான் தோனி இப்படி கூறுகிறார்:
முடிவில் கூட கடினமாகத்தான் இருந்தது. பெக் ஆஃப் லெந்த் பந்து விழுந்தால் பந்து மென்மையாக வருகிறது, பேட்டுக்கு பந்து வரவில்லை. எனவே புதிய பேட்ஸ்மென், குறிப்பாக அப்போதுதான் வரும் பேட்ஸ்மெனுக்கு கொஞ்சம் கடினமே.
நான் அதிக பந்துகளை ஆடியிருந்ததால் நான் ரிஸ்க் எடுக்கலாம். ஏனெனில் நிறைய ரன்கள் தேவைப்படுகிறது. 10 அல்லது 12 பந்துகளில் 40 ரன்கள் அல்லது 36 ரன்கள் பக்கம் தேவைப்பட்டது என்று நினைக்கிறேன். ஆகவே நிறைய பவுண்டரிகள் தேவைப்படுகிறது.
நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம், 2 ரன்கள் உள்ளது, 1 ரன் உள்ளது...நாங்கள் ஏறக்குறைய வெற்றி பெற்றுவிட்டோம், ஆனால் ஒரு ரன்னில் இழந்தோம். அதே சமயத்தில் நீங்கள் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும், ஒரு சில டாட்பால்கள்... அல்லது கூடுதலாக சில பவுண்டரிகள் அடித்திருக்க முடியுமா இல்லையா என்பதுதான்.
இவ்வாறு தோனி காரணம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT