Last Updated : 25 Apr, 2019 11:46 AM

 

Published : 25 Apr 2019 11:46 AM
Last Updated : 25 Apr 2019 11:46 AM

திருப்பத்தை ஏற்படுத்திய கடைசி 2 ஓவர்கள்; டிவில்லியர்ஸ் மிரட்டல் அடி: ப்ளேஆப் சுற்று வாய்ப்பைத் தக்கவைக்கும் ஆர்சிபி

டிவில்லியர்ஸின் மிரட்டல் பேட்டிங், கடைசி இரு ஓவர்களில் உமேஷ், சைனியின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால், பெங்களூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் 42-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணி.

இதன் மூலம் 11 போட்டிகளில் 4 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் ஆர்சிபி அணி உள்ளது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.  அதேசமயம், 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி, என மொத்தம் 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி இருக்கிறது.

இதன் மூலம் ஆர்சிபி அணி தனது ப்ளே-ஆப் கனவை தக்கவைத்துள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதை இன்னும் உறுதி செய்யமுடியாவிட்டாலும் கூட அதற்கான வாய்ப்பை ஆர்சிபி இன்னும் இழக்காமல் உயிர்ப்புடன் வைத்துள்ளது. ஆர்சிபி அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே இருப்பதால், அந்த போட்டிகளில் வெற்றி கண்டிப்பாக அவசியம்.

அதுமட்டுமல்லாமல் அடுத்துவரும் போட்டிகளில் மற்ற அணிகள் பெறும் வெற்றி, தோல்வி எந்தவிதத்தில் சாதகமாக அமையும் ஆகியவற்றைப் பொறுத்து ஆர்சிபி அணி ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்வது தெரியவரும்.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கோடு களமிறங்கிய கிங்ஸ்லெவன்  பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆர்சிபி அணி மிகப்பெரிய ஸ்கோரை அடைவதற்கு முக்கியக் காரணம் டிவில்லியர்ஸ், ஸ்டாய்னிஸ் அதிரடியான பேட்டிங்தான். டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதையும் டிவில்லியர்ஸ் பெற்றார்.

டிவில்லியர்ஸ்க்கு துணையாக பேட் செய்த ஸ்டாய்னிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 7 ஓவர்களில் இருவரும் சேர்ந்து 101 ரன்களும், கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் சேர்த்து அணி மிகப்பெரிய ஸ்கோரை அடைவதற்கு உதவி செய்தனர். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 121 ரன்கள் சேர்த்தனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சைனி, உமேஷ் யாதவ் வீசிய கடைசி இரு ஓவர்கள் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது. இந்தியாவின் மிகவேகமான பந்துவீச்சாளர் என்று சொல்லக்கூடிய சைனி 19-வது ஓவரில் டேவிட் மில்லர், பூரன் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்து கிங்ஸ்லெவன் பஞ்சாபின் வெற்றியை தடுத்தனர். கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் அணி 18 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமானது.

203 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கிங்ஸ்லெவன்  பஞ்சாப் அணி ஆட்டத்தைத் தொடங்கியது. கெயில், ராகுல் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். 4 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸர் விளாசிய கெயில், 23 ரன்கள் சேர்த்தநிலையில், உமேஷ்யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த மயங்க் அகர்வால், ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்களும், 2-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். மயங்க் அகர்வால் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டாய்னிஸிடம் விக்கெட்டை இழந்தார். 10 ஓவர்களில்  2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணி வலுவாக இருந்தது.

அடுத்த சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 27 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் 98 ரன்கள் வெற்றிக்கு  தேவைப்பட்டது.  5-வது விக்கெட்டுக்கு பூரன், டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

அதிரடியாக ஆடிய பூரன் வாஷிங்டன் சுந்தரின் 14-வது ஓவரில் 3 சிக்ஸர்களும், மொயின் அலியின் 15-வது ஓவரில் 2 சிக்ஸர்களும் விளாசினார். கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை சைனி வீசினார். 24 ரன்கள் சேர்த்தநிலையில், டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து மில்லர் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப்பந்தில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து பூரன்  46 ரன்களில் ஆட்டமிழந்தார். இரு முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்ததால், ஆர்சிபி அணி நிலை குலைந்தது.

20 ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த அஸ்வின் அடுத்த பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வில்ஜோன், டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். மன்தீப் சிங் 4 ரன்னிலும், முருகன் அஸ்வின் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்த்து 17 ரன்களில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

பெங்களூரு அணித் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சைனி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக டாஸ்வென்ற பஞ்சாப் அணி டாஸ்வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. விராட்கோலி, பர்தீவ் படேல் ஆட்டத்தைத் தொடங்கினர். பர்தீவ் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்து பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார். விராட் கோலி 13 ரன்னில் ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த டிவில்லியர்ஸ், படேலுடன் சேர்ந்தார்.  இருவரும் சிறிதுநேரம் மட்டுமே களத்தில் இருந்தனர். பர்தீவ்  படேல் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 4 ரன்னிலும், நாத் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ் இணைந்தனர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் 5-வது விக்கெடடுக்கு சேர்ந்து 121 ரன்கள் சேர்த்தனர்.

ஷமியின் 19-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி 18 ரன்கள் சேர்த்தார். வில்ஜோன் வீசிய கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரும், ஸ்டோனிஸ் இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகள் விளாசினர்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது பெங்களூரு அணி. டிவில்லியர்ஸ் 82 ரன்களிலும், ஸ்டோனிஸ் 46 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் அணித்தரப்பில் ஷமி, அஸ்வின், வில்ஜோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x