Published : 16 Sep 2014 07:53 PM
Last Updated : 16 Sep 2014 07:53 PM
ராய்ப்பூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முதலில் பேட் செய்த லாகூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி 18 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து படுதோல்வி கண்டது.
164 ரன்களை அடித்தாலும் லாகூர் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸைக் காட்டிலும் நிகர ரன் விகிதத்தில் குறைவாகவே உள்ளது. ஆனால் நியூசிலாந்தின் நாதர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணி ஏறக்குறைய இறுதிக்குத் தகுதி பெற்று விட்டது என்றே கூறலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸிடன் தாறுமாறாகத் தோற்காமல் இருக்க வேண்டு என்பது நியதி.
டாஸ் வென்ற சதர்ன் எக்ஸ்பிரஸ் கேப்டன் முபாரக் முதலில் லாகூர் லயன்ஸை பேட் செய்ய அழைத்தார். ஷேஜாத் 21 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து அபாயகரமாக ஆடினார். ஆனால் பர்வேஸ் மஹரூஃப் இவரையும், நசீர் ஜாம்ஷெட் (1) விக்கெட்டையும் ஒரே ஓவரில் வீழ்த்த லாகூர் அணி 8வது ஓவரில் 52/3 என்று சரிவு கண்டது.
அப்போது கேப்டன் மொகமது ஹபீஸுடன், சாத் நசீம் என்பவர் இணைந்தார். ஹபீஸ் பிராமதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து 9 ஓவர்களில் 75 ரன்களைச் சேர்த்தனர். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த நசீம் அவுட் ஆகிச் செல்ல லாகூர் அணி 17வது ஓவர் முடிவில் 127/4 என்று இருந்தது.
ஆனால் மொகமது ஹபீஸ் சில பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி 40 பந்துகளில் 67 ரன்களை எடுக்க உமர் அக்மல் 11 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ லாகூர் லயன்ஸ் 164/6 என்ற சவாலான இலக்கை எட்டியது.
கடைசி 5 ஓவர்கள் தொடங்கும் போது லாகூர் லயன்ஸ் அணி 89/3 என்றே இருந்தது. 16வது ஓவரில் ஹபீஸ் புகுந்தார். செகுகே பிரசன்னா என்ற ஸ்பின்னரின் ஓவரில் ஒரு பவுண்டரி 3 தொடர் சிக்சர்களை அடித்து 25 ரன்கள் மொத்தம் சேர்க்கப்பட்டது ஆட்டத்தை மாற்றியது. பிறகு 19வது ஓவரில் ஜெயம்பதியை ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாச ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது. கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள். அதுவும் கடைசி 50 ரன்கள் 17 பந்துகளில் விளாசப்பட்டது.
மஹரூஃப் அபாரமாக வீசி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிய சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி டி.என்.சம்பத் (18) மூலம் 3.4 ஓவர்களில் 27 ரன்கள் தொடக்கத்தில் விளாசினார். ஆனால் இந்தத் தொடரில் அபாரமாக வீசி வரும் லாகூர் வேகப்பந்து வீச்சாளர் அய்ஜாஜ் சீமா பெரேரா (8), குணதிலக (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். குணதிலக புல் ஆட முயன்று பந்து மட்டையில் பட்டு ஸ்டம்ப்களைத் தாக்கியது. ஒரு ஓவர் சென்று சம்பத்தையும் எல்.பி. செய்தார் அய்ஜாஜ் சீமா, சதர்ன் அணி 6வது ஓவரில் 36/3 என்று சரிந்தது. அய்ஜாஜ் சீமா 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கேப்டன் முபாரக் மட்டுமே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார். ஆட்டத்தின் 13வது ஓவரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், பெரேரா, மற்றும் பிரசன்னா விக்கெட்டுகளைக் கைப்பற்ற 86/7 என்று ஆன சதர்ன் அணி அதன் பிறகு 109 ரன்களை மட்டுமே எட்டியது. தோல்வி தழுவி வெளியேறியது.
தங்களது பந்து வீச்சில் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தை கோட்டைவிட்டது இலங்கையின் சதர்ன் அணி. ஆட்ட நாயகன் ஹபீஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT