Published : 18 Sep 2014 04:18 PM
Last Updated : 18 Sep 2014 04:18 PM
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இந்திய கேப்டன் தோனி பற்றி கூறுகையில், “தோனி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என்றே நான் கருதுகிறேன். தோனி போன்ற வீரர்கள் எப்போதும் அபாயகரமானவர்கள், இவரைப்போன்றவர்கள் தலைமுறைக்கு ஒரு முறையே உருவாகக் கூடியவர்கள்” என்றார்.
இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது, அங்கு இந்திய அணியின் வாய்ப்புகளைப் பற்றி அவர் கூறுகையில், “இந்திய அணியின் இப்போதைய வீரர்கள் நிச்சயம் திறமை மிக்கவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவில் ஆதிக்க செலுத்தக் கூடியவர்களே. இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இந்திய அணியை அதன் சமீபத்திய தோல்விகளைக் கொண்டு சாதாரணமாக ஆஸ்திரேலியா எடைபோட்டால் அது மிகப்பெரிய தவறாகவே போய் முடியும். ஆனால் பயிற்சியாளர் டேரன் லீ மேன், கேப்டன் கிளார்க் அத்தகைய தவறுகளைச் செய்யக் கூடியவர்கள் அல்ல.
1998ஆம் ஆண்டு, மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் நான் அணியில் இருந்த போது இந்திய பிட்ச் நிலைமைகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்களால் அவ்வளவாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியவில்லை. 2004ஆம் ஆண்டுதான் நாங்கள் இங்கு ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதுபோல் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பிட்ச், பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றிற்கு எதிராக தங்களைத் தகவமைத்துக் கொள்ளுதல் அவசியம்.
எப்போதும் நம் சொந்த ஊரில் ஆடுவது போல் எல்லா மைதானங்களிலும் ஆடிவிட முடியாது, பேக்ஃபுட்டில் ஆடுவதில் பயம் காட்டாமல் இருப்பது ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவசியம்.
மிட்செல் ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலிங்கை ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல, ஆனால் இந்திய பேட்டிங்கில் திறமை இருக்கிறது. அவர்களது அணுகுமுறையைப் பொறுத்து அந்தத் தொடர் அமையும். அவர்கள் இங்குள்ள சூழ்நிலைக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அப்படிச் செய்தால் முடிவுகள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் அமையும்” என்றார் காஸ்பரோவிச்.
இவர் தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியத்தில் இயக்குனராக பொறுப்பு வகிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT