Published : 18 Sep 2014 11:21 AM
Last Updated : 18 Sep 2014 11:21 AM
ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் மீது இந்திய வீராங்கனை கூறியுள்ள பாலியல் புகார் குறித்து துறை விசாரணை நடத்தப்படும். அவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் (ஜி.எப்.ஐ) உறுதியளித்துள்ளது.
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர் டெல்லி போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அதில், “கடந்த 2-ம் தேதி மாலை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் நான் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் எனது உடையை பற்றி அசிங்கமான வார்த்தைகளை உபயோகித்ததோடு, என்னை நோக்கி ஆபாசமான சைகைகளை காண்பித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீராங்கனையும், சம்பந்தப்பட்ட பயிற்சியாளரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக தென் கொரியாவுக்கு சென்றுவிட்டனர். எனினும் வீராங்கனை அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 509 மற்றும் 509-வது பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் சர்வதேச வீரரும் ஆவார்.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் கூறுகையில், “சம்பந்தப்பட்ட இருவரும் இந்தியா திரும்பியதும் அக்டோபர் முதல் வாரத்தில் விசாரணை நடத்தப்படும்” என்றார். அது தொடர்பாக ஜிஎப்ஐ பொது செயலாளர் கௌஷிக் பிடிவாலா கூறுகையில், “ஆசிய விளையாட்டுப் போட்டி முடிந்த பிறகு பாலியல் புகார் தொடர்பாக ஜிஎப்ஐ துறைவிசாரணை நடத்தும்.
அப்போது சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில் பயிற்சியாளரையோ, வீராங்கனையையோ திரும்ப அழைக்க முடியாது. போட்டி முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT