Published : 06 Mar 2019 10:55 AM
Last Updated : 06 Mar 2019 10:55 AM

43-44வது ஓவரின் போது மனதிற்குள் கூறிக்கொண்டேயிருந்தேன்... பும்ராவின் டிப்ஸ் உதவியது: ஹீரோவான விஜய் சங்கர்

பொதுவாக கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெறும் பேட்ஸ்மென்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு கடைசி ஓவரில் ஜெயிக்கும் பவுலர்களுக்குக் கிடைப்பதில்லை. கிரிக்கெட் பேட்ஸ்மென்களின் ஆட்டமான பிறகு இருக்கும் நிலை இது. ஆனால் நீண்ட காலத்துக்குப் பிறகு விஜய் சங்கர் நேற்று கடைசி ஓவரில் பரபரப்பான முறையில் 11 ரன்களை ஆஸ்திரேலியாவை எடுக்கவிடாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வெற்றி ஹீரோவானார்.

 

11 ரன்கள் தேவை என்ற போது விஜய் சங்கரை அழைக்க, அனைவரும் இவரிடமா கொடுப்பது என்று சந்தேகப்பட்டனர், ஏனெனில் தன் முதல் ஓவரில் 13  ரன்களை அவர் கொடுத்திருந்தார். ஆனால் வந்த முதல் பந்தே அருமையான ஒரு பந்தில் ஸ்டாய்னிஸை வீழ்த்தி பிறகு ஆடம் ஸாம்பாவையும் காலி செய்து 3 பந்துகளில் அனாயசமாக, ஒரு உயர் அழுத்தச் சூழலைக் கையாண்டார். மேலும் பேட்டிங்கிலும் மிக முக்கியமான 46 ரன்களை அவர் எடுத்து கோலியுடன் நன்றாக ஆடினார்.

 

இந்நிலையில் தன்னிடம் பந்து கொடுக்கப்பட்ட போது ஏற்பட்ட உணர்வை பகிர்ந்து கொண்டார் விஜய் சங்கர்:

 

நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன், உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவது பற்றி நான் சிந்திக்கவேயில்லை, ஏனெனில் அதற்கு இன்னும் காலம் உள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என்ற அடிப்படையில்தான் ஆடுகிறேன். அணிக்காக வெற்றியில் பங்களிப்பு செய்ய வேண்டும் அவ்வளவே.

 

நிதாஹஸ் கோப்பை எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது, அன்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியாமல் போனது, ஆனால் இன்று கற்றுக் கொண்டிருக்கிறேன், மேலும் நிதாஹஸ் கோப்பைக்குப் பிறகு நடுநிலையுடன் இருக்கவும் கற்றுக் கொண்டேன், உயர்வோ தாழ்வோ கவலைப்பட கூடாது என்று முடிவெடுத்தேன்.

 

நேற்று நான் சவாலுக்குத் தயாராகவே இருந்தேன், ஒரு ஓவரை நான் வீச வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். அப்போது நான் 43-44 வது ஒவருக்குப் பிறகு எனக்கு நானே கூறிகொண்டேன் நிச்சயம் எந்த நேரம் வேண்டுமானாலும் பந்து வீச அழைக்கப்படுவேன் என்று. அது கடைசி ஓவராகக் கூட இருக்கலாம் ஆகவே அதில் 10 அல்லது 15 ரன்கள் தேவை என்றால் அதனை விட்டு கொடுக்காது இருக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன்.  ஆகவே மன ரீதியாக நான் தயாராகி விட்டேன்.

 

 48வது ஓவருக்குப் பிறகு பும்ரா என்னிடம் வந்து பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்றார், நான் சரியான லெந்த்தில் வீசுவது அவசியம் என்றார் அதாவது ஸ்டம்புகளை நோக்கி வீச வேண்டும் என்றார்.

 

அவர் கூறியவுடன் நான் மனரீதியாக தெளிவடைந்தேன். ஆகவே 11 ரன்களை தடுக்க வேண்டுமெனில் நேராக ஸ்டம்புக்கு வீச வேண்டும், விக்கெட்டை வீழ்த்துவதுதான் வெற்றிக்கு வழி என்று முடிவெடுத்தேன். நான் இதுவரை கிளப் அணிக்குத்தான் கடைசி ஓவரை வீசியுள்ளேன், ஆனால் நேற்று விக்கெட்டுகளை நோக்கி வீசினேன்.

 

கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டதால் நான் என்னை ஏதோ பெரிதாக எண்ணிவிடவில்லை அல்லது பெருமகிழ்ச்சியும் அடைந்து விடவில்லை.  அந்தத் தருணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் பிறகு நகர்ந்து செல்ல வேண்டும் அவ்வளவே.

 

நான் நன்றகா பேட் செய்கிறேன் என்றால், அணியின் வெற்றிக்குப்  பங்களிக்கிறேன் என்றால், நான் மகிழ்ச்சியடைந்தவனாக இருப்பேன்.

 

இவ்வாறு கூறினார் விஜய் சங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x