Published : 05 Mar 2019 05:24 PM
Last Updated : 05 Mar 2019 05:24 PM
நாக்பூர் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி தன் 40வது ஒருநாள் சதத்தை எடுக்க இந்திய அணி கடைசியில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாட் கமின்ஸ் கடைசி ஓவர்களை அற்புதமாக வீசி 9 ஓவர்களுக்கு 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெடுட்டுகளைக் கைப்பற்றினார்.
120 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்து ஒருமுனையை இறுக்கப் பிடித்த விராட் கோலி கடைசியில் கமின்சின் மெதுவான ஷார்ட் பிட்ச் பந்தை நேராக டீப் ஸ்கொயர்லெக்கில் ஸ்டாய்னிஸ் கையில் கொடுத்து ஆட்டமிழந்தார். 238/6 என்று 46வது ஓவரில் இருந்த இந்திய அணி அடுத்த 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களுக்குச் சுருண்டது.
விராட் கோலி தனது 40வது ஒருநாள் சதத்தை எடுத்தார். மேலும் கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 9,000 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய லெஜண்ட் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் உடைத்தார். விராட் கோலி 22 ரன்கள் எடுத்திருந்த போது இந்த மைல்கல்லை எட்டினார். விராட் கோலி 159 இன்னிங்ஸ்களில் கேப்டனாக 9,000 சர்வதேச கிரிக்கெட் ரன்களை எடுத்துள்ளார். ஆனால் ரிக்கி பாண்டிங் 203 இன்னிங்ஸ்களில்தான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார், எனவே அதிவிரைவு 9000 ரன்களை கேப்டனாகச் சாதித்து நம்பர் 1 ஆகத் திகழ்கிறார் விராட் கோலி.
ஆஸி.க்கு எதிராக விராட் கோலியின் 7வது ஒருநாள் சதமாகும் இது.
மேலும் கிரேம் ஸ்மித், தோனி, ஆலன் பார்டர், ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரும் கேப்டனாக 9000 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிட்சி 250 ரன்கள் நல்ல ஸ்கோர்தான், வெற்றி பெற இந்திய அணிக்கே அதிக வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. விஜய் சங்கர் முக்கிய கட்டத்தில் விராட் கோலியுடன் இணைந்து 81 ரன்களை 12 ஒவர்களில் விரைவு கதியில் சேர்த்தனர், விஜய் சங்கர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து கோலி நேராக ஒரு சக்தி வாய்ந்த ட்ரைவை ஆட டைவ் அடித்து பவுலர் பீல்ட் செய்ய அவர் விரல்களில் பட்டு ரன்னர் முனை ஸ்டம்பை பந்து அடிக்க விஜய் சங்கர் திரும்பி டைவ் அடித்து ரீச் ஆக முயன்றும் தோல்வியடைந்தார், மிக அருமையான இன்னிங்ஸை விஜய் சங்கர் ஆடினார், கடினமான தருணம், கடினமான பந்து வீச்சுக்கு எதிராக அவர் 100% ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் மேல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேதன் லயன், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் 20 ஓவர்களில் 87 ரன்களை கொடுத்து தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி சிக்கனம் காட்டினர். ஆடம் ஸாம்பா ஒரே ஓவரில் கடந்த போட்டி நாயகர்களான கேதார் ஜாதவ் (11), தோனி (0) ஆகியோரைக் காலி செய்தார். கேதார் ஜாதவ் அனாவசியமாகத் தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். தோனி கட் ஆட முயன்று சமயோசிதமான ஸ்லிப் பீல்டரினால் கேட்ச் ஆனார். கவாஜாவுக்கு அதிக அவகாசம் இல்லை, இருந்தாலும் அதனை சிறப்பாகப் பிடித்தார்.
முன்னதாக ரோஹித் சர்மா ஷார்ட் பிட்ச் ட்ராப்பில் வீழ்ந்து டீப் தேர்ட்மேனில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார், ஷிகர் தவண் நன்றாக ஆடினார், ஆனால் மேக்ஸ்வெல் வீசிய குவிக் பந்தை புல் ஆட முயன்று கால் காப்பில் வாங்கி 21 ரன்களில் வெளியேறினார். அம்பாதி ராயுடு ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யாமல் 32 பந்துகளை சாப்பிட்டு 18 ரன்கள் எடுத்து லயன் வீசிய லெக் ஸ்டம்ப் பந்தை முதலில் பிளிக் ஆட எத்தனித்து பிறகு ஆஃப் திசையில் ஆட முனைந்து எதுவும் நடக்காமல் பின் கால்காப்பில் வாங்கி வெளியேறியதோடு, ரிவியூவையும் விரயம் செய்து வெளியேறினார்.
விராட் கோலி பிட்ச், பந்து வீச்சு, சூழல் ஆகியவற்றைக் கடந்து கிரிக்கெட் எவ்வளவு எளிதானது பார் என்று தோன்றும் விதமாக அனாயசமாக ஆடினார். 55 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் தன் 40வது ஒருநாள் அரைசதம் கண்ட விராட் கோலி பிறகு ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அவர் தன் பாணியில் ஆடி 107 பந்துகளில் 40வது ஒருநாள் சதமாக தன் அரைசதத்தை மாற்றினார். விராட் கோலி, விஜய் சங்கர் கூட்டணி 81 ரன்களையும், விராட் கோலி, ஜடேஜா (21) கூட்டணி 67 ரன்களையும் சேர்த்தனர்., ஜடேஜாவினால் பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை அவர் 40 பந்துகளில் 21 என்று மந்தமாக ஆடினார். கடைசியில் கமின்ஸ் புகுந்து விட இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கமின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும் கூல்ட்டர்நைல், மேக்ஸ்வெல், லயன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை இந்தக் கடினமான பிட்சில் நிறைய பாடுபடவேண்டும், ஆக்ரோஷமாகத் தொடங்குவது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT