Published : 05 Sep 2014 10:42 AM
Last Updated : 05 Sep 2014 10:42 AM
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸில் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இந்திய அணி, பின்னர் தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்டதால் ஒப்புக்காக ஆடப்படும் இந்த ஆட்டம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனாலும் இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியை பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பாக ஆடியிருப்பது வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் ரஹானே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஷிகர் தவன் கடந்த ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது பேட்டிங்கிற்கு பலம் சேர்த்துள்ளது.
அதேநேரத்தில் இந்தத் தொடரில் இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. கேப்டன் தோனிக்கு ஓய்வளித்துவிட்டு அவருக்கு பதிலாக சஞ்ஜூ சாம்சன் சேர்க்கப்படலாம். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோருக்கு ஓய்வளித்துவிட்டு உமேஷ் யாதவ், கரண் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்வி கண்டுள்ள இங்கிலாந்து அணி விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதனால் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி தீவிரம் காட்டும். இந்தத் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ், கேப்டன் குக் ஆகியோர் மட்டுமே ஓரளவு விளையாடியுள்ளனர். அந்த அணியின் மிடில் ஆர்டர் முற்றிலுமாக செயலிழந்த நிலையில், இயான் பெல் இந்த ஆட்டத்தில் விளையாடாதது மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. பந்துவீச்சிலும் இங்கிலாந்தின் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT