Published : 25 Mar 2019 07:12 AM
Last Updated : 25 Mar 2019 07:12 AM
ரிஷப் பந்தின் காட்டடி தர்பாரில் மும்பையில் நேற்று நடந்த 12-வது சீசன் ஐபிஎல் போட்டியின் 3-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்களில் தோல்வி அடைந்தது.
ரிக்கி பாண்டிங் பயிற்சியுடன், “தாதா” சவுரங் கங்குலியின் ஆலோசனையும் சேர்ந்ததன் விளைவை டெல்லி கேபிடல்ஸ் அணி வெளிக்காட்டிவிட்டது.
தெறிக்கவிட்ட ரிஷப்
ரிஷப் பந்த் தனது ரன் “வெறிபிடித்த காட்டடி தர்பார்” மூலம் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்குரிய இடத்தை சிமென்ட்போட்டு உறுதி செய்துகொண்டார். 27 பந்துகளைச் சந்தித்த ரிஷப் பந்த் 78 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள். ஸ்ட்ரைக்ரேட் 288. ஆட்டநாயகன் விருதையும் ரிஷப் பந்த் வென்றார்.
14-வது ஓவர்கள்வரை டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள், ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் என்றால் நம்பமுடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும், 15-வது ஓவரில் இருந்து ரசிகர்கள் தலையை தூக்கி மேலே பார்த்தவர்கள் 20-வது ஓவரை ஓவரை பார்த்துக்கொண்டே இருந்தனர்.
யாரும் மிஸ்ஸிங் இல்லை
ரிஷப்பந்தின் மின்னல்வேக அதிரடியில் பந்துகள், பவுண்டரிக்கும், சிக்ஸர்களுக்கும் பறந்தவாறு இருந்தன. பும்ரா, ஹர்திக்பாண்டியா, கட்டிங், சலாம், மெக்லனகன் என யாருடையை பந்துவீச்சையும் ரிஷப் பந்த் விட்டு வைக்கவில்லை. அனைவரும் ரிஷப்பந்தின் வெறிகொண்ட ஆட்டத்தின் தாக்குதலுக்கு ஆளாகினார்கள்.
ஏறக்குறைய கடைசி 6 ஓவர்களில் 99 ரன்கள் சேர்த்து டெல்லி அணி. இந்த ரன் குவிப்பு அனைத்துக்கும் ரிஷப் பந்த் என்ற ஒற்றை வீரர் மட்டுமே காரணம்.
அதிவேக அரைசதம்
முதல் 5 பந்துகளில் ஒரு ரன் எடுத்த ரிஷப் பந்த் 12 பந்துகளில் 32 ரன்கள் அடித்தார், 18 பந்துகளில் அரைசதம் அடித்துவிட்டார். ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிகவேக அரைசதத்தை அடித்து ரிஷப் பந்து சாதனை படைத்துள்ளார்.
15-வது ஓவரில் இருந்து ரிஷப்பந்த் காட்டடி அடிக்கத் தொடங்கியதும், மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பீல்டிங்கை எந்தப்பக்கம் நிறுத்துவது எனத் தெரியாமல் தலைமுடியை பியித்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் ரிஷப்பந்த் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் அனுப்புவதைப் பார்த்த யுவராஜ்சிங், ரோஹித் சர்மா வாயில் கைவைத்து மலைத்துப் போய் நின்றார்.
இங்க்ராம், தவண்
டெல்லி அணியில் மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் காலின் இங்ராம். தவணுடன் சேர்ந்து அதிரடியாக ஆடிய இங்க்ராம் 32 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரி அடங்கும். டெல்லி அணிக்கு புதிதாக வந்த ஷிகர் தவண் ஏமாற்றம் அளக்கவில்லை தனது பங்கிற்கு 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் 3 பேரும் அடித்ததுதான் டெல்லி அணியின் ஸ்கோர்.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 7 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்னிலும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டனர். இருவரும் நிலைத்திருந்தால், ஸ்கோர் இன்னும் எகிறியிருக்கும். அடுத்த போட்டியில் இருவரும் ஏமாற்றமாட்டார்கள் என நம்பலாம்.
மின்னல் வேக ரபாடா
பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா மிரட்டிவிட்டார், நேற்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக மணிக்கு 150 கி.மீவேகத்திலும், சராசரியாக மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பந்துவீசி மும்பை இந்தியஸ்ன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு படம் காட்டினார்.
யுவராஜ் சிங், பொலார்ட், டீ காக் ஆகியோருக்கு ரபாடா வீசிய யார்கரில் மூவரும் நிலைகுலைந்துவிட்டார்கள். டெல்லி அணிக்கு ரபாடா மிகப்பெரிய சொத்தாக இருப்பார், உலகக்கோப்பைப் போட்டியில் உலக அணிகளுக்கு அச்சுறுத்தலாக ரபாடா விளங்குவார். 4 ஓவர்கள் வீசிய ரபாடா 23 ரன்கள் விட்டுக்கொடுத்து யுவராஜ்சிங், கட்டிங் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்களில் 10 பந்துகள் டாட் பந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரூபித்த இசாந்த்
கடந்த சீசனில் 7 போட்டிகளில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இசாந்த் சர்மாவை ஏலத்தில் யாரும் விலைக்கு வாங்கவில்லை. ஆனால், இந்த முறை டெல்லி அணிக்கு முதல் ஆட்டத்திலேயே 2 விக்கெட்டுகளை பெற்றுக்கொடுத்தார் இசாந்த் சர்மா. இசாந்த் சர்மா பந்துவீச்சில் வேகம் இருந்தாலும் கட்டுக்கோப்பும், ஸ்விங் மிகவும் முக்கியம், இவை இரண்டும் ரபாடாவிடம் இருந்த அளவு இசாந்திடம் இல்லை.
2012 முதல்
மும்பை அணியைப் பொறுத்தவரை 3 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணியாக இருந்தாலும் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும், நெருக்கடியை சமாளித்து விளையாட முடியவில்லை. கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி தான் சந்திக்கும் முதலாவது ஆட்டத்தில் தோற்றுக்கொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக 200 ரன்களுக்குமேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்ததே இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் குர்னல் பாண்டியாவைத் தவிர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகும்.
யுவராஜ் சிங் ஆறுதல்
அணியில் அவரைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரிஷப் பந்த் காட்டடிக்கு இரையானார்கள். மும்பை அணியில் ஆறுதல் அளிக்கும் விஷயம் யுவராஜ் சிங் அரைசதம் அடித்ததாகும். மற்ற வகையில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, டிகாக் போன்ற நட்சத்திர வீரர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்றே கூறலாம்.
டெல்லி கேபிடல்ஸ்
டாஸ்வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. டெல்லி அணியில் பிரித்வி ஷா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினார். பிரித்வி ஷா 7 ரன்களில் விக்கெட் கீப்பர் டீக்காக்கிடம் கேட்ச் கொடுத்து மெக்லனஹன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், அதிரடியாகத் தொடங்கினார்.
3-வது ஓவரை வீசிய ரிஷிக் சலாம் ஓவரில் 2 பவுண்டரிகளும், 4-வது ஓவரை வீசிய மெக்லனஹன் பந்துவீச்சில் ஒருசிக்ஸரையும் விளாசினார். ஆனால், மெக்லனஹன் வீசிய அந்த ஓவரில் 4-வது பந்தில் பொலார்டிடம் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்னில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு தவண், இங்க்ராம் கூட்டணி சேர்ந்தனர். இங்க்ராம், தவண் அவ்வப்போது சில பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை 8 க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர்.
ஹர்திக்பாண்டியா வீசிய 8-வது ஓவரில் இங்க்ராம் பவுண்டரி, சிக்ஸர் , மெக்லனஹன் வீசிய 10-வது ஓவரிலும் 2 பவுண்டரி என இங்க்ராம் விளாசினார். குர்னல் பாண்டியா வீசிய 11-வது ஓவரில் 3 பவுண்டரி, 13-வது ஓவரை வீசிய கட்டிங் ஓவரில் இரு பவுண்டரி அடித்து இங்க்ராம் அரைசதத்தை நோக்கி முன்னேறினார்.
91 ரன்கள்
ஆனால், கட்டிங் ஓவரில் டீப்மிட்விக்கெட்டில் குர்னல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 47 ரன்கள்(32பந்துகள், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து வெளியேறினார். தவண், இங்க்ராம் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
ரிஷப் தர்பார்
அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, தவணுடன் சேர்ந்தார். முதல் பந்துகள நிதானமாக எதிர்கொண்டார் ரிஷப் பந்த். கட்டிங் வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, ஒருசிக்ஸர் விளாசினார் ரிஷப் பந்த்.
16-வது ஓவர ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டீப்மிட்விக்கெட்டில் யாதவிடம் கேட்ச் கொடுத்து தவண் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கீமோ பால் களமிறங்கினார். அதே ஓவரின் கடைசி 3 பந்துகளில் இரு சிக்ஸர்கள், ஒருபவுண்டரி விளாசினார் ரிஷப் பந்த்.
17-வது ஓவரை மெக்லனஹன் வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி அடித்த பந்த், 5-வது பந்தை எதிர்கொண்ட கீமோ பால் 3 ரன்கள் சேர்த்த நிலையில் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் களமிறங்கினார்.
18-வது ஓவரை பும்ரா வீசினார். பும்ரா ஓவரை விட்டுவைக்காத ரிஷப்பந்த் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் 2-பந்தில் அக்சர் படேல் 4 ரன்கள் சேர்த்தநிலையில் பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.18-பந்துகளில் ரிஷப்பந்த் அரைசதம் அடித்தார்.
19-வது ஓவரை சலாம் வீசினார். இந்த ஓவரிலும் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து ரிஷப்பந்து காட்டியை வெளிப்படுத்தினார். பும்ராவீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர்கள் என பந்த் வானவேடிக்கை நிகழ்த்தினார். கடைசி 6 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 99 ரன்கள் குவித்தது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்து. ரிஷப்பந்த் 78 ரன்களுடனும் , திவேதியா 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் மெக்லனஹன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மிகப்பெரிய இலக்கு
214 ரன்கள் எனும் மிகப்ெபரிய இலக்கை விரட்டி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரபாடாவின் மின்னல் வேகம், துல்லியம், இசாந்த் சர்மாவின் பந்துவீச்சு, டிரன்ட் போல்டின் ஸ்விங் பந்துவீச்சு ஆகிய மும்முனைத் தாக்குதலில் மும்பை இந்தியன்ஸ் நிலை குலைந்தது.
ரோஹித் சர்மா அதிரடியாகத் தொடங்கினாலும் 14 ரன்களில் திவேதியாவிடம் கேட்ச் கொடுத்து இசாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த யாதவ் 2 ரன்னில் அய்யரால் ரன்அவுட் செய்யப்பட்டார். பொலார்ட் 21, ஹர்திக் பாண்டியா டக்அவுட் என விக்கெட்டுகள் சீராக சரிந்தன.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் யுவராஜ் சிங் நிதானமாகத் தொடங்கி அதிரடிக்கு மாறினார். அவ்வப்போது சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்தார் யுவராஜ் சிங் ஆனால், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று யுவராஜ் சிங்கிற்கு துணை செய்திருந்தால், ஆட்டம் மாறியிருக்கும்.
குர்னல் பாண்டியா 32, மெக்லஹன் 10, கட்டிங் 3 ரன்கள் என விக்கெட்டுகள் சீராக விழுந்தன. யுவராஜ் சிங் 35 பந்துகளில் 53 ரன்கள்(3சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால், மும்பை அணியின் தோல்வி தவிர்க்க முடியவில்லை.
19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு மும்பை அணி ஆட்டமிழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் ரபாடா, இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT