Published : 27 Mar 2019 05:29 PM
Last Updated : 27 Mar 2019 05:29 PM
கிரிக்கெட்டில் ஸ்பிரிட் ஆப் தி கேம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும். அஸ்வின் மன்கட் அவுட் செய்ததில் எந்தவிதமான தவறும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலுவான ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெய்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில் அஸ்வின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி ரன்அவுட் செய்தார் அஸ்வின்.
இந்த மன்கட் அவுட் முறை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியது. இந்த சர்ச்சை குறித்தும், அஸ்வின் செய்தது கிரிக்கெட் விதிப்படி சரியென்றாலும், ஸ்பிரிட்ஆப்தி கேம் கூற்றின்படி பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவிடம் தி இந்து(ஆங்கிலம்) சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கபில்தேவ் கூறியது:
பட்லரை மன்கட் அவுட் செய்த அஸ்வின் செயல் சரியானதுதான். நெறிப்படி இது சரியா அல்லது தவறா என்று விவாதிக்க முடியும். ஆனால், ஐசிசி வகுத்துள்ள விதிப்படிதான் அஸ்வின் செயல்பட்டார்.
ஒருபேட்ஸ்மேன், ரன்னைத் திருடுவதற்கு முயற்சிக்கும் போது, பந்துவீச்சாளரை ஏன் குறை கூறுகிறீர்கள். இந்த இரு புள்ளிகள் அணி தகுதிபெறுவதற்கு உதவியிருந்தால், இன்னும் எத்தனைபேர் அஸ்வினை பழிசொல்வீர்கள் என்று பார்க்கிறேன்.
வேண்டுமென்றே அஸ்வின் இந்த விஷயத்தில் குறிவைக்கப்படுகிறார். மன்கட் அவுட் செய்யும முன் அஸ்வின் பேட்ஸ்மேனை எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஜென்டில்மேன் கேம் என்று சொல்லப்படும் கிரிக்கெட்டில் இது நெறியாக பார்க்கப்படுகிறது என்பது எனக்கும் தெரியும்.
ஆனால், கிரிக்கெட் தொழில்முறையாக மாறி இருக்கிறது. ஐபிஎல் போட்டி என்பது முழுமையாக போட்டியையும்,பணத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அஸ்வின் செய்ததன் மூலம் எதிரணி விதியில் சிக்கிவிட்டது என்பதை உறுதி செய்துவிட்டது.
கடந்த 1992-ம் ஆண்டு போர்ட் எலிசெபத் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இதுபோலவே நடந்தது. அதில்நான் தான் மன்கட் அவுட் செய்தேன்.
அந்த நேரத்தில் நான் நெறிமுறைப்படி செய்தது தவறு என்று எண்ணி இருந்தேன். ஆனால், அப்போது, பேட்ஸ்மேனை நான் 3 முறை எச்சரித்தேன். அதற்கு அந்த பேட்ஸ்மேனோ, எதிர்முனையில் இருக்கும் ஜான்டி ரோட்ஸை வேகப்படுத்தவே முயற்சிக்கிறேன் என்றார். இது நேர்மையானதா. கிரீஸை விட்டு தாண்டி காலை வைத்தால், பந்துவீச்சாளருக்கு நோ-பால் கொடுக்கிறார்கள். ஆனால், ஏன் பேட்ஸ்மேன் அதுபோல் க்ரீஸை விட்டு சென்றால், தண்டிக்கப்படுவதில்லை.
பேட்ஸ்மேன்கள் மட்டும் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இருக்க வேண்டுமா,. இதில் நெறிமுறை ஏதும் இல்லையா. பேட்டில் அல்லது உடலில்பட்டு லெக்பைஸ் ரன்கள் கிடைக்கும் போதும், ஓவர் த்ரோ மூலம் ரன்கள் கிடைக்கும் போது அதை நெறிமுறைப்படி வேண்டாம் என்கிறார்களா. அதை செய்வதில்லையே. அணியின் வெற்றிக்காக போராடும் போது, இதுபோன்று இலவசமாக கிடைக்கும் ரன்களை எந்த பேட்ஸ்மேனாவது வேண்டாம் எனச் சொல்கிறாரா. அதை யாரும் செய்யமாட்டார்கள்.
ஸ்பிரிட் ஆப் தி கேம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேனுக்கும் பொருந்தும். ஸ்பிரிட் ஆப் தி கேமை கடைபிடிப்பதில் பந்துவீச்சாளருக்கு மட்டும் அதிகமான பொறுப்பு ஏன் தேவை, அவர்கள் விதியை மீறிக்கூடாது என்று ஏன் கூறுகிறார்கள். பேட்ஸ்மேனுக்கும் அந்த விதிகள்தேவைதான்.
அஸ்வின் யாரையும் ஏமாற்றவில்லை. பேட்ஸ்மேன் ரன்னை திருடும்போது தடுத்துள்ளார். என்னைப் பொருத்தவரை பேட்ஸ்மேன் ஒரு ரன் திருடன்.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT