Published : 16 Mar 2019 12:27 PM
Last Updated : 16 Mar 2019 12:27 PM
வரும் 23-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் தோனி, ரெய்னா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இடையே புதிய மைல்கல்லை எட்டுவதில் கடும் போட்டி உருவாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் 200 சிக்ஸர்கள் எனும் மைல் கல்லை எட்ட இந்த 4 வீரர்களுக்கு இடையே இன்னும் சராசரியாக 30 சிக்ஸர்களுக்குள் மட்டுமே எண்ணிக்கை இருப்பதால், இதில் யார் முதலில் எட்டப்போகிறார்கள் என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு அணியில் இடம்பெற்ற, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருக்கும் கிறிஸ் கெயில் 112 போட்டிகளில் 292 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி (175 போட்டிகள்), டிவில்லியர்ஸ் (141 போட்டிகள்) 186 சிக்ஸர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளனர். இன்னும் 200 சிக்ஸர்கள் எனும் மைல்கல்லை எட்ட 14 சிக்ஸர்கள் மட்டுமே தோனிக்கும், டிவில்லியர்ஸுக்கும் தேவைப்படுவதால், இந்த சீசனில் இவர்கள் எட்டிவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எவ்வளவு வேகமாக எட்டப்போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாகும்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா 185 சிக்ஸர்களுடன் உள்ளார். இவரும் 200 சிக்ஸர்களை எட்டுவதற்கு 15 சிஸ்கர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ரெய்னா 176 போட்டிகளில் 185 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பதால், இந்த சீசனில் ரெய்னாவுக்கும் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
வீரர் பெயர் | போட்டி | சிக்ஸர் |
கிறிஸ் கெயில் | 112 | 292 |
தோனி(சிஎஸ்கே) | 175 | 186 |
டிவில்லியர்ஸ் | 141 | 186 |
சுரேஷ் ரெய்னா | 176 | 185 |
ரோஹித் சர்மா | 173 | 184 |
விராட்கோலி | 163 | 178 |
அடுத்ததாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 176 ஆட்டங்களில் 184 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரும் 200 சிக்ஸர்கள் எனும் மைல் கல்லை எட்ட 16 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி 163 போட்டிகளில் விளையாடி, 178 சிக்ஸர்கள் அடித்துள்ளார். விராட் கோலியும் இந்த மைல்கல்லை எட்ட 22 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆதலால், இந்த சீசனில் 200 சிக்ஸர்கள் எனும் மைல்கல்லை எந்த வீரர் விரைவாக எட்டப் போகிறார் என்பதில்தான் பரபரப்பு அடங்கி இருக்கிறது.
இதில் தோனி, ரெய்னா, டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகியோர் ஏறக்குறைய ஒரு சிக்ஸர் இடைவெளியில் இருப்பதால், இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT